தோனி பிஸ்னஸிலும் ஒன்றை குறி வெச்சிட்டார் என்றால் தப்பவே தப்பாது - கோடிகளில் பணத்தை அள்ள போகிறார்!!
மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni), கிரிக்கெட்டை தாண்டி ஆட்டோமொபைல் வாகனங்கள் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதை பலமுறை பல நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். குறிப்பாக, பைக் ஓட்டுவதை அதிகம் விரும்பக்கூடியவர் தோனி என்பது நம் எல்லாருக்குமே தெரியும். அதேபோல், இந்திய ஆட்டோமொபைல் துறையில் தோனியின் செயல்பாடு எப்போதுமே இருக்கும். சமீபத்தில் கூட, சிட்ரோன் இந்தியா நிறுவனத்தின் பிராண்ட் தூதராக எம்.எஸ் தோனி நியமிக்கப்பட்டதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இந்த நிலையில், புதிய டாக்ஸி கார் நிறுவனம் ஒன்றில் தோனி பெரிய தொகையை முதலீடு செய்ய உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ச்சியாக ஆட்டோமொபைல் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார். ஏற்கனவே, எலக்ட்ரிக் சைக்கிள் நிறுவனமான இமோட்டோராட் மற்றும் யூஸ்டு கார் விற்பனை தளமான கார்ஸ்24 போன்ற நிறுவனங்களில் தோனியின் முதலீட்டு தொகை உள்ளது.

இந்த வகையில், ஆட்டோமொபைல் துறையில் 3வது நிறுவனமாக ஹரியானா மாநிலம் குருக்கிராமை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான ப்ளூஸ்மார்ட்-இல் குறிப்பிட்ட தொகையை தோனி முதலீடு செய்துள்ளார். 2019ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட ப்ளூஸ்மார்ட் ஆனது கார்கள் மூலமாக டாக்ஸி சேவையை வழங்கிவரும் நிறுவனமாகும். கிட்டத்தட்ட ஓலா, உபேர் போன்றது. ஆனால், எலக்ட்ரிக் வாகனங்கள் மூலமாக இந்த சேவையை வழங்கி வருவது ப்ளூஸ்மார்ட்டின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
டாக்ஸி துறையில் சமீப காலத்தில் வெகுவாக முன்னேற்றம் கண்டுள்ள நிறுவனங்களுள் ஒன்று ப்ளூஸ்மார்ட் ஒன்றாகும். இப்போதைக்கு, பெங்களூர் மற்றும் வட இந்தியாவில் மட்டுமே இந்த நிறுவனத்தின் நெட்வொர்க் உள்ளது. ஆனால், 2024ஆம் ஆண்டு முடிவதற்கு உள்ளாக மும்பையில் சேவையை துவங்குவதில் ப்ளூஸ்மார்ட் தீவிரமாக உள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ப்ளூஸ்மார்ட்டின் ரூ.200 கோடி முதலீட்டை ஈட்டும் நிதி சுற்றில் எம்.எஸ் தோனியின் அலுவலகம் பங்கேற்றுள்ளது.

ப்ளூஸ்மார்ட் நிறுவனத்தின் மொத்த மதிப்பு தற்போதைய நிலவரப்படி, 2.50 கோடி டாலர்கள் ஆகும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.209 கோடி. இதனை மேலும் அதிகரிக்கும் முயற்சியாகவே முதலீட்டை அதிகரிக்க தோனி போன்றோரிடம் முதலீட்டை ப்ளூஸ்மார்ட் பெறுகிறது. இந்தியாவில் தற்போதைக்கு புதுடெல்லி, குருக்கிராம், உத்திர பிரதேசத்தின் நொய்டா மற்றும் பெங்களூரில் மட்டுமே ப்ளூஸ்மார்ட்டின் டாக்ஸி சேவை உள்ளது.
கடந்த 2024 ஜூன் மாதத்தில் தனது முதல் வெளிநாட்டு சேவையை துபாயில் ப்ளூஸ்மார்ட் துவங்கியது. டாக்ஸி சேவைக்காக துபாயில் லக்சரி தரத்திலான வாகனங்களை ப்ளூஸ்மார்ட் பயன்படுத்துகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், ப்ளூஸ்மார்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் புனித் கோயல் தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் ஆனது 550 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
எம்.எஸ் தோனியுடன் ப்ளூஸ்மார்ட்டில் புதியதாக முதலீடு செய்துள்ள மற்றொரு முதலீட்டாளர் ரிநியூ நிறுவனத்தின் தலைவரும், சிஇஒ-வுமான சுமந்த் சின்ஹா ஆவார். ப்ளூஸ்மார்ட் நிறுவனத்திற்கு வணிகத்தில் போட்டியாக விளங்கும் நிறுவனம் என்று பார்த்தால், பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஓலாவை சொல்லலாம். 2010ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட ஓலா நிறுவனம் கார் டாக்ஸி துறையில் சிறந்து விளங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா, உபேரை தொடர்ந்து டாக்ஸி துறையில் வளர்ந்துவரும் நிறுவனம் ப்ளூஸ்மார்ட் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இத்தகைய நிறுவனத்தில் எம்.எஸ் தோனி போன்ற ஒருவர் முதலீடு செய்திருப்பது, ப்ளூஸ்மார்ட் நிறுவனத்தை மேலும் வளர செய்யும் என்பது மட்டுமின்றி, அந்த நிறுவனத்தை மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தவும் செய்யும்.


Click it and Unblock the Notifications








