மனுஷன் ஜாலியா இருக்காரு! ஐபிஎல் முடிஞ்சாச்சு... ராஞ்சிக்கு சென்றதும் முதலில் எந்த பைக்கில் கை வைக்க போறாரோ!!
ஐபிஎல் 2025 (IPL 2025) பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் நிறைவு பெற்று, பிளே ஆஃப் (Playoff) எனப்படும் அடுத்த சுற்று போட்டிகள் துவங்கப்பட உள்ளன. கடந்த காலங்களில் 5 கோப்பைகளை அள்ளிய சிஎஸ்கே (CSK) எனப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாமல் லீக் சுற்றோடு நடையை கட்டியுள்ளது. அடுத்த சுற்றுக்கு முன்னேறாதது மட்டுமின்றி, அணிகளின் புள்ளி பட்டியலில் கடைசி 10வது இடத்துடன் இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரை சிஎஸ்கே நிறைவு செய்திருப்பது சிஎஸ்கே ரசிகர்களை பெரிதும் கவலைக்கு உள்ளாக்கி உள்ளது.
முன்னதாக, இந்த சோகத்தில் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) தனது ஓய்வு முடிவை அறிவித்துவிட போகிறார் என்பதும் ஒருபக்கம் சிஎஸ்கே ரசிகர்களுக்கு பயமாக இருந்தது. அதற்கேற்ப, மே 25ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கடைசி லீக் போட்டி உடன் தனது ஓய்வு முடிவை தோனி அறிவிக்க போவதாக வதந்திகள் பரவின.

இதனால் அந்த போட்டியை காண ரசிகர்கள் பலர் மஞ்சள் நிற ஜெர்ஸி அணிந்தப்படி மைதானத்திற்கு வந்திருந்தனர். தோனியிடம் இருந்து ஆம் என்கிற பதில் வர போகிறதா அல்லது இல்லை என பதில் வர போகிறதா என்கிற பெரிய கேள்வி உடன் ரசிகர்கள் போட்டியை ரசித்தனர். ஆனால், போட்டியில் விளையாடி, வெற்றி பெற்ற பின் தோனி அளித்த பேட்டி ரசிகர்களுக்கு பெரிய குழப்பத்தை தந்துள்ளது.
அதாவது, எம்.எஸ் தோனி என்ன கூற வருகிறார் என்பதே பலருக்கு புரியவில்லை. அந்த அளவிற்கு, "கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து நான் இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஆனால் நான் திரும்பி வருவேன் என்றும் சொல்லவில்லை" என ஒரு விசித்திரமான பேட்டியை தோனி கொடுத்தார். மேலும் பேசிய அவர், இன்னும் நிறைய நேரம் இருக்கிறது யோசித்து முடிவெடுப்பேன் என்றார்.

மேலும், ராஞ்சிக்கு சென்று ஜாலியாக பைக் ஓட்ட ஆவலாக உள்ளதாகவும் தோனி தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான எம்.எஸ் தோனி ஜார்காண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் வசித்து வருவது நம் எல்லாருக்குமே தெரிந்த விஷயம். தோனி வீட்டில் வாகனங்களை நிறுத்துவதற்கான கேரேஜ் (Garage) மிக பெரிய அளவில் உள்ளது.
கிரிக்கெட்டை தாண்டி தல தோனி அவர்கள் மிக பெரிய பைக் பிரியர் ஆவார். விலையுயர்ந்த கார்களும் பிடிக்கும் என்றாலும், அவற்றை காட்டிலும் மோட்டார்சைக்கிள்கள் தான் தோனிக்கு மிகவும் பிடித்தவை ஆகும். அன்றைய கால பழமையான பைக்குகளில் இருந்து இன்றைய கால விலையுயர்ந்த கவாஸாகி நிஞ்சா எச்2 (Kawasaki Ninja H2) பைக் வரையில் தோனியிடம் உள்ளது.
கவாஸாகி நிஞ்சா எச்2 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ரூ.32.91 லட்சமாக தற்சமயம் உள்ளது. ஆன்-ரோடு விலை இன்னும் 5 லட்ச ரூபாய் அளவிற்கு அதிகமாக வரும். இது இல்லாமல், 25 வருடம் பழைய கவாஸாகி பைக் ஒன்றும் தோனியிடம் உள்ளது. நிஞ்சா இசட்.எக்ஸ்-14ஆர் (Ninja ZX-14R) என பெயர் கொண்ட இந்த பைக்கின் விலை 2000ஆம் காலக்கட்டத்திலேயே ஏறக்குறைய ரூ.22 லட்சம் ஆகும்.
இந்த கவாஸாகி பைக்குகளை போன்று உலகளவில் பிரபலமான சுஸுகி ஹயபுஸா (Suzuki Hayabusa) பைக்கும் எம்.எஸ் தோனியிடம் உள்ளது. இவை மட்டுமின்றி, வெறும் 2 வருடங்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்ட உலகின் அரிதான டுகாட்டி (Ducati) பைக்குகளுள் ஒன்றான '1098' பைக்கையும் தோனி தனது கேரேஜில் வைத்துள்ளார். இத்தனை விலையுயர்ந்த பைக்குகளை வைத்திருப்பினும், தோனி அதிகமாக வெளியில் காட்சித்தந்து இருப்பது அவரது யமஹா ஆர்டி350 (Yamaha RD350) என்கிற 1990களில் இந்தியாவில் மிக பிரபலமாக இருந்த பைக் மற்றும் ஜாவா உடன் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தோனியின் கேரேஜில் உள்ள மோட்டார்சைக்கிள்களை ஒவ்வொன்றாக பார்ப்பதாக இருந்தால் இன்று ஓர்நாள் போதாது. அந்த அளவிற்கு பைக்குகளை வாங்கி குவித்துள்ள எம்.எஸ் தோனி ஐபிஎல் முடிந்து வீட்டிற்கு சென்றதும் முதலாவதாக எந்த பைக்கை எடுத்து ஓட்ட போகிறார் என்பது தெரியவில்லை. எப்படியிருந்தாலும் இன்னும் சில தினங்களில் இந்த பைக்குடன் தோனி ராஞ்சி சாலைகளில் காட்சி தந்தார் என்கிற செய்தி வெளிவரும்.


Click it and Unblock the Notifications









