யாருக்கும் தெரியாமல் போனாலும் ரசிகர்கள் கண்டு பிடிச்சிடுறாங்க!! ஹெல்மெட்க்குள் இருப்பது இவ்வளவு பெரிய பிரபலமா?
மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni), இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் 50-ஓவர் உலக கோப்பையை பெற்று தந்தவர். கிரிக்கெட்டை தாண்டி மோட்டார்சைக்கிள்களை ஓட்டுவது தோனிக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்பது நம் எல்லாருக்குமே தெரியும். பொது இடங்களில் பைக் ஓட்டும்போது பலமுறை தோனி அடையாளம் காணப்பட்டுள்ளார். தான் யார் என தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக ஹெல்மெட் அணிந்துக் கொண்டு தான் தோனி பைக் பயணங்களை மேற்கொள்வது வழக்கம். ஆனால், ஹெல்மெட்டையும் தாண்டி சிலர் தோனியை அடையாளம் கண்டுவிடுகின்றனர்.
அந்த வகையில் மீண்டும் ஒருமுறை, சாலையில் விலையுயர்ந்த பைக்கில் செல்லும்போது தோனி ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியிடம் பல்வேறு விதமான பைக்குகள் உள்ளன. அதாவது, 50, 60 வருடங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட பைக்கில் இருந்து இந்த ஆண்டில் விற்பனைக்குவந்த மாடர்ன் பைக் வரையில் அவரிடம் உள்ளன.

இதன் காரணமாக, தோனியின் பைக் கேரேஜ் பைக்குகளால் நிரம்பி வழிவதை ஒருமுறை வீடியோ ஒன்றில் பார்த்திருந்தோம். தோனிக்கு குறிப்பாக பழமையான யமஹா பைக்குகள் என்றால் தனி ஆர்வம். யமஹா ஆர்டி350, ஆர்.எக்ஸ்100 போன்ற முன்னர் காலத்தில் விற்பனையில் இருந்த யமஹா பைக்குகளில் பலமுறை தோனி காட்சி தந்துள்ளார். தற்போதும், யமஹா பைக் ஒன்றில்தான் தோனி காட்சி தந்துள்ளார்.
யமஹா ஆர்1-இசட் மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தப்படி கேப்டன் கூல் செல்லும் காட்சிகளை தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம். இந்த வீடியோ இந்தியாவில் எங்கு காட்சிப்படுத்தப்பட்டது என்பது தெரியவில்லை. தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதற்கே அதிக வாய்ப்புள்ளது. இந்த பயணத்தில் தோனி பயன்படுத்தியுள்ள யமஹா ஆர்1-இசட் பைக் ஆனது மிகவும் அரிதான மோட்டார்சைக்கிள் ஆகும்.

இத்தகைய யமஹா பைக்கை வெள்ளை நிறத்தில் தோனி வைத்துள்ளார். மஹாராஷ்டிரா மாநில நம்பர் பிளேட் உடன் தோனி இந்த பைக்கை வைத்திருப்பதை வீடியோவில் காண முடிகிறது. டிரெல்லிஸ் ஃப்ரேமில் உருவாக்கப்படும் யமஹா ஆர்1-இசட் பைக்கை இந்தியாவில் வைத்திருப்போர் மிக மிக குறைவே. ஆனால், அதில் ஒருவர் தோனி ஆவார். நியோ-ரெட்ரோ டிசைனில் உருவாக்கப்பட்ட இந்த பைக் இந்தியாவில் பல வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது.
யமஹா ஆர்1-இசட் பைக்கில் 247சிசி, இணையான-இரட்டை, 2-ஸ்ட்ரோக், லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 45 பிஎஸ் மற்றும் 36.3 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், தோனி ஓட்டும் பைக்கின் ஒரு பக்கத்தை மட்டுமே காண முடிவதால், இந்த பைக்கில் ட்வின் எக்ஸாஸ்ட் குழாய்கள் உள்ளதா என்பதை அறிய முடியவில்லை.

எம்.எஸ் தோனிக்கு இவ்வாறு மார்க்கெட்டில் அரிதான மோட்டார்சைக்கிள்களை வாங்க கூடுதல் ஆர்வம் உண்டு. இவரிடம் உள்ள பல பைக்குகள் பிரத்யேகமாக தோனிக்கென உருவாக்கப்பட்டவை ஆகும். கவாஸாகி நிஞ்சா இசட்.எக்ஸ்-14ஆர், கவாஸாகி நிஞ்சா எச்2, டுகாட்டி 1098, ஹார்லி-டேவிட்சன் ஃபேட் பாய் மற்றும் கான்ஃபெடேரேட் எக்ஸ்132 ஹெல்கட் உள்ளிட்டவை தோனியிடம் உள்ள முக்கியமான பைக்குகளுள் சில ஆகும்.
இதில் கான்ஃபெடேரேட் எக்ஸ்132 ஹெல்கட் ஆனது யமஹா ஆர்1-இசட் பைக்கை விட உலகளவில் மிகவும் அரிதான பைக் ஆகும். தோனியிடம் பிஎஸ்ஏ பிராண்டின் பைக்குகளும் உள்ளன. சமீபத்தில் கூட ஜாவா 42 பாப்பர் பைக்கை பிரத்யேகமான ஜேட் க்ரீன் பெயிண்ட்டில் தோனி வாங்கியிருந்தார். கார்களை பொறுத்தவரையில், மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி ஆனது தோனியின் கனவு காராக விளங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தோனியிடம் கார்களும் பல உள்ளன. இருப்பினும், பைக்குகள் என்றால்தான் தோனிக்கு தனி குஷி ஆகும். அதிலிலும், யாரிடமும் இல்லாத அரிதான பைக்குகள் என்றால் தோனிக்கு கூடுதல் ஆர்வம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் உண்மையில், பைக்கில் செல்வதால்தான் அவ்வப்போது தோனி ரசிகர்களால் அடையாளம் காணப்படுகிறார். ஆனால், ஒவ்வொரு முறை சாலையில் ரசிகர்கள் பார்த்துவிடும்போதும் மென்மையாக சிரிப்புடன் ரசிகர்களின் அன்பை பெற்றுக் கொள்ள தோனி மறப்பதில்லை.


Click it and Unblock the Notifications









