சீட்பெல்ட் அணியவில்லை... கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் மெர்சிடிஸ் கார் விபத்து இப்படிதான் நடந்து முடிந்ததா?
சாலை விபத்துகள் நம் நாட்டில் சர்வ சாதாரணமாக நடைபெறக்கூடிய ஒன்றாக மாறி வருகிறது. இதற்கு சமீபத்தில் மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை சார்பில் வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகள் குறித்த புள்ளி விபரங்கள் தான் சாட்சியாகும்.
அந்த அறிக்கைகளின்படி பார்த்தோமேயானால், நம் நாட்டில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக சுமார் 1.5 லட்ச பேர் சாலை விபத்துகளினால் உயிரிழக்கின்றனர். கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் மொத்தம் 4,12,432 சாலை விபத்துகள் அரங்கேறியுள்ளன. எல்லா சாலை விபத்துகளுக்கும் இரு வேறு வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொள்ள வேண்டும் என்றில்லை. ஆள் நடமாட்டமே இல்லாத சாலையில் கூட ஒரு வாகனம் விபத்தை சந்திக்கலாம்.

இதற்கு உதாரணமாகவே, இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ரிஷப் பந்தின் மெர்சிடிஸ் கார் இன்று (டிசம்பர் 30) அதிகாலையில் எதிர்பாராத விதமாக சாலையில் பக்கவாட்டில் இருந்த டிவைடரில் மோதி விபத்தில் சிக்கியுள்ளது. ரிஷப் பந்த் டெல்லியில் இருந்து தனது வீடு உள்ள உத்தரகாண்ட்டிற்கு டெல்லி-டெக்ராடூன் நெடுஞ்சாலையில் அதிகாலை 5.20 மணியளவில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து அரங்கேறி உள்ளது.
இந்த விபத்து குறித்து வெளியாகியுள்ள சிசிடிவி பதிவில், சரியாக சென்று கொண்டிருந்த கார் திடீரென சாலையின் ஓரத்தில் இருந்த டிவைடரில் மோதில் அருகே இருந்த எதிர்பக்க சாலையின் டிவைடரில் முட்டி மோதி நின்றுள்ளது. இந்த கோர விபத்தில் கார் உடனடியாக தீப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஆரம்பத்தில் வெளிவந்த தகவல்களில், தீயில் இருந்து தப்பிக்க ரிஷப் பந்த் காரின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து கொண்டு வெளியே வந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் சிசிடிவி காட்சிகள் வெளியான பின்னர் வெளிவந்த செய்திகள், கார் டிவைடரில் மோதிய வேகத்தில் ரிஷப் பந்த் கண்ணாடியை உடைத்து கொண்டு வெளியே தூக்கி வீசப்பட்டதாக தெரிவிக்கின்றன. அத்துடன், பயணத்தின்போது ரிஷப் பந்த் சீட் பெல்ட் அணியவில்லை என்பதும் இதில் இருந்து உறுதியாகுவதாக அந்த செய்திகள் கூறுகின்றன. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தை விசாரித்த போலீஸார் அளித்த பேட்டியில், ரிஷப் பந்தின் தலை மற்றும் கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். நல்ல வேளையாக இந்த சம்பவம் அரங்கேறிய சமயத்தில் காரில் ரிஷப் பந்த் மட்டுமே இருந்துள்ளார். இந்த விபத்திற்கான முக்கிய காரணம் அதிவேகம் மற்றும் சீட்பெல்ட் அணியாததே என்றே கூறப்படுகிறது. மற்றப்படி இந்த சம்பவத்தின்போது ரிஷப் பந்த் மது அருந்தி இருந்தாரா என்பது போலீஸாரின் அடுத்தடுத்த விசாரணைகளின் போதே தெரியவரும்.

இந்த விபத்தின் மூலமாக நமக்கு தெரியவருவது ஒன்றே ஒன்றுதான், சீட் பெல்ட் மிக முக்கியம். சீட் பெல்ட் அணிந்திருந்தால் சிறிய காயங்களுடன் அவர் தப்பித்திருக்க கூடும். சீட் பெல்ட் அணியாதது சமீப காலமாக கடும் சர்ச்சைக்குரியதாக மாறி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு கூட டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி சீட் பெல்ட் அணியாததினால் கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது காரும் இதேபோன்று தான் சாலையின் பக்கவாட்டில் இருந்த டிவைடரில் மோதி விபத்துக்கு உள்ளாகி இருந்தது.
இத்தனைக்கும் அவர் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்து வந்தார். அப்படியிருந்தும் அவர் இறந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த தாக்கம் மத்திய அரசு வரை சென்று பின் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களும் பயணத்தின்போது சீட் பெல்ட் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரும் அளவிற்கு யோசிக்க வைத்தது. ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே தற்போது அரங்கேறியுள்ள இந்த சம்பவத்தில் காரை ஓட்டிய ரிஷப் பந்த் சீட் பெல்ட் அணியாமல் இருந்துள்ளார் என்பது உண்மையில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.


Click it and Unblock the Notifications









