நம்ம சென்னை மாநகராட்சி கூட இப்படி யோசிக்கல!! பெங்களூர் அரசு பேருந்துகளில் நடக்க போகும் அதிரடி மாற்றம்...
தைவான் நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து பெங்களூரில் டீசலில் இயங்கும் அரசு பேருந்துகளை எலக்ட்ரிக்காக மாற்ற கர்நாடகா தயாராகி வருகிறது. இதுகுறித்து கர்நாடக அமைச்சர் ஒருவர் அளித்த பேட்டியையும், தமிழகத்திலும் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும் இனி பார்க்கலாம்.
எலக்ட்ரிக் வாகனங்கள் தான் எதிர்காலத்தில் சாலையெங்கும் இயங்க உள்ளன. தற்போது உள்ள பெட்ரோல் & டீசல் வாகனங்கள் படிப்படியாக குறைத்து கொள்ளப்பட உள்ளன என்பதை நான் கூற வேண்டியதில்லை. ஏனெனில் ஏற்கனவே உங்களுக்கு தெரியும். நமது நாட்டை ஆளும் மத்திய அரசும் கூட இந்த நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகிறது.

2030ஆம் ஆண்டிற்குள் மொத்த வாகனங்களில் குறைந்தது 30% ஆவது எலக்ட்ரிக் வாகனங்களை கொண்டுவந்துவிட வேண்டும் என்கிற நோக்கத்தில் மத்திய அரசு காய் நகர்த்தி வருகிறது. பசுமையான போக்குவரத்திற்கான இந்த மாற்றத்திற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டியது அவசியம். அதேபோல், மாநில அரசாங்கங்களும் எலக்ட்ரிக்கை நோக்கி தங்களது நடவடிக்கைகளை எடுத்து வைக்க வேண்டும்.
இதனை நன்கு புரிந்து வைத்துள்ள கர்நாடக மாநில அரசு தங்களது கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு பேருந்துகளை எலக்ட்ரிக்காக மாற்ற முயற்சித்து வருகிறது. முதற்கட்டமாக, தலைநகர் பெங்களூர் மாநகரில் உள்ள அரசு மாநகர பேருந்துகளை எலக்ட்ரிக்காக கொண்டுவர வேண்டும் என்பது கர்நாடக மாநில அரசாங்கத்தின் விருப்பமாக உள்ளது. பெங்களூரில் ஏற்கனவே பல்வேறு எலக்ட்ரிக் அரசு பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.

இருப்பினும், மற்ற பேருந்துகளையும் எலக்ட்ரிக்காக மாற்ற முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இதில் சில பிரச்சனைகளும் உள்ளன. அதாவது, பெங்களூர் போன்ற மாநகரங்களில் பொது மக்களுக்கான சேவைக்காக அவ்வப்போது பேருந்துகள் வாங்கப்படுவது வழக்கமே. அவ்வாறு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வாங்கப்பட்ட பேருந்துகள் இப்போதும் நல்ல நிலையில் பெங்களூரில் பயன்பாட்டில் உள்ளன.
அத்தகைய நல்ல நிலையில் உள்ள டீசல் பேருந்துகளை எலக்ட்ரிக் பேருந்துகளாக மாற்ற பெங்களூர் மாநகராட்சி திட்டமிட்டுள்ள்ளது. "இந்த பணியை செய்வதற்கு தைவான் நாட்டை சேர்ந்த சில நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக கர்நாடக மாநில தொழிற்துறை அமைச்சர் எம் பி பட்டீல் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதற்காக தைவான் நாட்டில் இருந்து உயர் மட்ட குழு ஒன்று தன்னை சந்தித்து பேசியுள்ளதாகவும் அமைச்சர் எம் பி பட்டீல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய கர்நாடக தொழிற்துறை அமைச்சர், "டீசலில் இயங்கும் BMTC பேருந்துகளை மின்சாரமாக மாற்றுவது, நிலையான தன்மையை நோக்கி ஒரு படி முன்னேறி செல்ல உதவும். மேலும் இது தொடர்பாக போக்குவரத்து துறையுடன் தொழிற்துறை பேச்சுவார்த்தை நடத்தும்" என்றார். தைவான் நிறுவனங்கள் இந்த பணியை செய்ய நிபுணத்துவம் வாய்ந்தவர்களை பெற முயற்சித்து வருவதால், பெங்களூரில் டீசல் பேருந்துகளை எலக்ட்ரிக்காக மாற்ற சில காலம் ஆகலாம் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: சென்னை உள்பட இந்தியாவின் முக்கிய நகரங்கள் பலவற்றில் எலக்ட்ரிக் பேருந்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு கொண்டிருக்கின்றன. ஆனால் இதில் தலைநகர் டெல்லிக்கு பிறகு பெங்களூர் தான் முன்னிலை வகிக்கிறது என்று சொல்ல வேண்டும். இப்போதுக்கூட பாருங்கள், டீசல் பேருந்துகளை எலக்ட்ரிக்காக மாற்ற நமது சென்னை மாநகராட்சி கூட பெரியதாக யோசிக்கவில்லை, ஆனால் கர்நாடக மாநில அரசு திட்டங்களை வகுக்க ஆரம்பித்துவிட்டது.


Click it and Unblock the Notifications
