ரோட்ல ஒரு டீசல் வண்டி கூட ஓடாது! மொத்தமா ஒழித்து கட்ட போகும் மத்திய அரசு! பண மதிப்பிழப்பை போல் அதிரடி திட்டம்?
இந்தியாவில் பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) மூலம் இயங்கும் வாகனங்கள்தான் தற்போது அதிகளவில் விற்பனையாகி கொண்டுள்ளன. இதன் காரணமாக காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னை அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக டீசல் மூலம் இயங்கும் வாகனங்கள்தான், சுற்றுச்சூழலை மிக கடுமையாக மாசுபடுத்துகின்றன.
எனவே அவற்றுக்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. கூடவே சிஎன்ஜி (CNG) மற்றும் எத்தனால் (Ethanol) போன்ற மாற்று எரிபொருட்களின் மூலம் இயங்கும் வாகனங்களின் பயன்பாடும் ஊக்குவிக்கப்படுகிறது. இவை சுற்றுச்சூழலுக்கு நட்பானவை என்பதுதான் இதற்கு காரணம்.

இந்த சூழலில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari) பேசியுள்ள ஒரு விஷயம், இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையில் பெரும் அதிர்வலைகளை தற்போது ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
எஸ்ஐஏஎம் என சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் (SIAM - Society Of Indian Automobile Manufacturers) மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இதில், அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசினார். அந்த பேச்சுதான், தற்போது பெரும் சர்ச்சைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.
இந்த மாநாட்டில் அமைச்சர் நிதின் கட்கரி பேசியது பின்வருமாறு: டீசல் இன்ஜின்கள் மற்றும் வாகனங்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஜிஎஸ்டி (GST) வரி விதிக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை (Nirmala Sitharaman) நான் வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன்.
டீசல் வாகனங்களை ஒழித்து கட்டுவதற்கு இது ஒன்றுதான் வழி. ஜிஎஸ்டி வரியை உயர்த்துவது தொடர்பான கடிதத்துடன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நான் சந்திக்க போகிறேன். டீசல் வாகனங்களின் உற்பத்தியை, வாகன நிறுவனங்கள் குறைத்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வரி உயர்த்தப்படும். இவ்வாறு அமைச்சர் நிதின் கட்கரி பேசினார்.
ஜிஎஸ்டி வரி உயர்த்தப்பட்டால், டீசல் வாகனங்களின் விலை உயர்ந்து விடும். எனவே அவற்றை வாங்க மக்கள் தயக்கம் காட்டுவார்கள். இதன் விளைவாக இந்தியாவில் டீசல் வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனை குறையும் என்பதால், அமைச்சர் நிதின் கட்கரி இவ்வாறு பேசியதாக கூறப்படுகிறது.
அமைச்சர் நிதின் கட்கரியின் இந்த பேச்சை தொடர்ந்து டீசல் மற்றும் டீசல் வாகனங்கள் தொடர்புடைய நிறுவனங்களின் பங்குகள் (Shares) சரிவடைய தொடங்கியுள்ளன. டீசல் வாகனங்களை உற்பத்தி செய்து வரும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா (Mahindra) மற்றும் அசோக் லேலண்ட் (Ashok Leyland) போன்ற நிறுவனங்களின் பங்குகள், 2.5 சதவீதம் வரை சரிவை சந்தித்துள்ளன.
இதுதவிர ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL - Hindustan Petroleum), பாரத் பெட்ரோலியம் (BPCL - Bharat Petroleum) மற்றும் இந்தியன் ஆயில் (IOC- Indian Oil) ஆகிய எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளும் சரிவடைந்துள்ளன. எனவே தனது பேச்சு தொடர்பாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி டிவிட்டர் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
இதன்படி டீசல் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை கூடுதலாக 10 சதவீதம் அதிகரிக்கும் திட்டம் எதுவும் தற்போதைக்கு மத்திய அரசிடம் இல்லையாம். முறையான முன்மொழிவு வழங்கப்பட்டால் மட்டுமே, ஜிஎஸ்டி கவுன்சில் (GST Council) வரியை உயர்த்தும். எனவே தற்போது டீசல் வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
டீசல் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை கூடுதலாக 10 சதவீதம் அதிகரிக்கும் அதிகாரப்பூர்வமான திட்டம் எதுவும் மத்திய அரசிடம் தற்போதைக்கு இல்லை என்றாலும் கூட, சுத்தமான மாற்று எரிபொருட்களுக்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம் என அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: அமைச்சர் நிதின் கட்கரியின் விளக்கத்தை வைத்து பார்க்கையில், டீசல் வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி தற்போதைக்கு உயர்த்தப்படாது என்பது தெளிவாகிறது. ஆனால் எதிர்காலத்தில் இந்தியாவில் இருந்து டீசல் வாகனங்களை ஒட்டுமொத்தமாக ஒழித்து கட்ட மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கும் என்பது எங்களது உறுதியான கருத்து.
ஏனெனில் டீசல் வாகனங்களால், சுற்றுச்சூழல் மாசுபாடு மட்டுமல்லாது, இந்தியாவிற்கு பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. டீசலை அதிகளவில் இறக்குமதி செய்வதுதான் இதற்கு காரணம். எனவே எதிர்காலத்தில் மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்கலாம். இதை மனதில் வைத்து கொண்டு, பலரும் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








