ஒரேயொரு வீடியோ தான்... லம்போர்கினி காரில் மாற்றுத்திறனாளி நபர்!! இன்ஸ்டாகிராமின் பலம் இப்போ புரிஞ்சி இருக்கும்
லம்போர்கினி போன்ற விலையுயர்ந்த கார்களை சாலையில் காணும்போது நமக்கே தெரியாமல் ஒரு நிமிடம் ஆச்சிரியமாக நிற்போம். சாலையில் காணும்போதே அவ்வாறு என்றால், ஷோரூமில் பளபளப்பாக நிற்கும்போது யாராக இருந்தாலும் ஒரு கணம் திரும்பி பார்ப்பது வழக்கமான ஒன்றுதானே... பணக்காரர்களே லம்போர்கினி கார்களை பிரம்பிப்பாக பார்க்கும் சூழலில், ஊனமுற்ற ஏழ்மையான நபர் ஒருவர் ஷோரூமுக்கு வெளியே இருந்து விலையுயர்ந்த கார்களை ஆச்சிரியமாகவும், ஒருவித ஏக்கத்துடனும் பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பலரது கவனத்தை பெற்றதை அடுத்து, அந்த நபருக்கு ஷோரூம் அதிகாரிகள் ஒரு சர்பிரைஸ் கொடுத்துள்ளனர்.
விலையுயர்ந்த கார்கள் என்றாலே நமக்கு ஒரு தனி கிரேஸ் உண்டு. அந்த வகையில், ஹைதராபாத்தில் சொகுசு கார்களை அலங்கரிக்கும் ஷோரூம் ஒன்றின் வெளியே நின்றுக் கொண்டு மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் உள்ளே இருக்கும் லக்சரி கார்களை ஆச்சிரியத்துடன் பார்க்கும் வீடியோவை உங்களில் சிலர் பார்த்திருப்பீர்கள். அந்த ஷோரூமுக்கு உள்ளே இருந்த கேமரா மூலமாக இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த கார் அலங்கரிப்பு ஷோரூமின் ஓனர் நிஷாந்த் சபூ இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். செராமிக் புரோ இந்தியா என்கிற நிறுவனத்தின் நிறுவனராகவும் நிஷாந்த் சபூ உள்ளார். வீடியோவில், ரோல்ஸ்-ராய்ஸ் கல்லீனன் கார் ஒன்றிற்கு அருகே நின்று இந்த மாற்றுத்திறனாளி நபர் புகைப்படங்களை எடுத்துக் கொண்டதையும் வீடியோவில் காணலாம்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, உங்களது கார்களில் ஒன்றில் அந்த நபரை ஒரு சின்ன ரைடு அழைத்து சென்று வாருங்கள் என பலரும் இணையத்தில் வேண்டுக்கோள் விடுக்க ஆரம்பித்தனர். இதனால் அந்த நபரை கண்டுப்பிடிக்கும் முயற்சியில் சம்பந்தப்பட்ட கார் ஷோரூம் இறங்கியது. இந்த நபரை பற்றிய விபரங்கள் வழங்குமாறு நிஷாந்த் சபூ அவரது இன்ஸ்டா பதிவில் கேட்டுக் கொண்டார்.
இந்த முயற்சிகளின் மூலமாக, இந்த மாற்றுத்திறனாளி நபரை அடையாளம் கண்ட ஷோரூம் அதிகாரிகள் அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் விதமாக, அந்த நபரை சுமார் ரூ.3.5 கோடி மதிப்பிலான லம்போர்கினி ஹூராகென் காரில் ஒரு ரைடு அழைத்து சென்றுள்ளனர். இன்னும் சொல்லப்போனால், கார் ஷோரூமின் ஓனர் நிஷாந்த் சபூ அந்த மாற்றுத்திறனாளி நபரை ஷோரூமுக்குள் அழைத்து சென்று தங்களிடம் உள்ள கார்களை காட்டியுள்ளார்.
அப்போது, உங்களது பெயர் என்ன? என நிஷாந்த் சபூ கேட்க, சிவா என அந்த நபர் பதிலளித்துள்ளார். பின்னர், 'லம்போர்கினி ஹூராகென் அல்லது ஃபெராரி 812 சூப்பர்ஃபாஸ்ட் இதில் இரண்டில் உங்களுக்கு பிடித்தது எது? என சிவாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஹூராகென் என பதிலளித்தார். அதனை தொடர்ந்தே, ஹூராகென் காரில் சிவா அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
பயணத்தின்போது, சிவாவை ஹூராகென் காரின் முன் இருக்கையில் அமர வைத்து, நிஷாந்த் சபூ காரை ஓட்டியுள்ளார். இந்த பயணத்தின்போது, இருவரும் மில்க் ஷேக் அருந்தினர். பின்னர், நிஷாந்த் சபூ மற்றும் சிவா இருவரும் இணைந்து சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். இந்த வீடியோவை இதுவரையில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
ஷோரூம் கண்ணாடிகள் வழியாக அந்த மாற்றுத்திறனாளி நபர் எட்டிப் பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலானதை போன்று, அவர் விலையுயர்ந்த லம்போர்கினி காரில் பயணம் செய்யும் வீடியோவும் இணையத்தில் பலரது கவனத்தை பெற்றுள்ளது. இதேபோன்று, இதற்கு முன்பும் நிஷாந்த் சபூ தனது லம்போர்கினி காரை சாலையில் ஆச்சிரியமாக பார்த்தவரை அந்த காரில் ஒரு ரவுண்டு அழைத்து சென்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான வீடியோக்கள் இணையத்தில் மிகுந்த கவனத்தை ஈர்க்கக்கூடியவை. இதை உணர்ந்தே, நிஷாந்த் சபூ இவ்வாறான செயலில் ஈடுப்பட்டுள்ளார். இணையத்தில் வைரலாகுவதற்காக நிஷாந்த் சபூ இவ்வாறு செய்தாரா அல்லது உண்மையில் மனிதநேயமாக இதனை அவர் செய்தாரா என்பது தெரியவில்லை. ஆனால், இவ்வாறான செயல்களினால் மனிதநேயம் பரவும் என்பது மட்டும் உண்மை.


Click it and Unblock the Notifications








