12 வருடங்கள் படுத்த படுக்கையாக இருந்தவர்!! இன்றோ ரூ.200- 250 சம்பாதிக்கிறார் - மறுபிறவி கொடுத்த வீல்சேர்!
மோட்டாரின் மூலம் இயங்கும் வீல்சேரின் உதவியால், சுமார் 12 வருடங்களாக படுத்த படுக்கையாக இருந்த மாற்றுத்திறனாளி ஒருவர் உணவு டெலிவிரி வேலைக்கு சென்று, தனது குடும்ப பாரத்தை குறைக்க தன்னால் இயன்றதை செய்ய ஆரம்பித்துள்ளார். யார் அந்த மாற்றுத்திறனாளி? என்பதையும், எங்கும் செல்லக்கூடிய சுதந்திரத்தை அவருக்கு வழங்கியுள்ள மோட்டார் வீல்சேரை பற்றியும் இனி பார்க்கலாம்.
முயன்றால் எதுவும் சாத்தியமே என்பதற்கு பல்வேறு சம்பவங்களை இதற்கு முன் உதாரணங்களாக பார்த்துள்ளோம். குறிப்பாக, இத்தகைய உணர்வு மாற்றுத்திறனாளிகளிடம் சற்று அதிகமாகவே இருக்கும். அத்தகைய மனம் தளராத மாற்றுத்திறனாளிகளை அவ்வப்போது நம் செய்தியில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், ஒரு மாற்றுத்திறனாளியை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகின்றோம்.

இக்பால் சிங், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸை சேர்ந்தவரான இவர், 14 வருடங்களுக்கு முன்னர் தன்னுடைய இளம் வயதில் ஒரு கார் விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தினால் அவரால் நடக்க முடியாமல் போனது. கிட்டத்தட்ட சுமார் 12 வருடங்களாக படுத்த படுக்கையாக இருந்தவர் ஒரு கட்டத்தில் தனது மீதி வாழ்க்கை இப்படியே, படுக்கையிலேயே முடிந்துவிடுமோ என எண்ணி கவலையிலும், மன அழுத்தத்திலும் இருந்துள்ளார்.
ஆனால் இன்றோ, சோமாட்டோ என்ற பிரபல ஆன்லைன் உணவு நிறுவனத்தில், உணவை டெலிவிரி செய்யும் நபராக எவரது உதவியுமின்றி மனம் தளராமல் இக்பால் சிங் பணியாற்றி வருகிறார். இதற்கு, அவருக்கு பெரும் உதவியாக அவரது மோட்டார் வீல்சேர் உள்ளது. 'அமிர்தசரஸ் வால்கிங் டூர்ஸ்' என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் இக்பால் சிங் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வீடியோவை கீழே காணலாம்.
வீடியோவில் பேசிய இக்பால் சிங், "நான் 2009இல் ஸ்ரீ ஹேம்குந்த் சாஹிப் (உத்தரகாண்ட்டில் உள்ள சீக்கிய வழிபாட்டு தலம்) சென்றேன். ஜூன் 14, 2009 அன்று, நான் ஒரு கார் விபத்துக்கு உள்ளானேன். அது என்னை 12 வருடங்கள் படுக்கையில் படுக்க வைத்தது" என கூறியுள்ளார். மாற்றுத்திறனாளிகள் வீல்சேரை பயன்படுத்துவது சகஜமான ஒன்றே. ஆனால் அத்தகைய வீல்சேர்களில் குறைந்த தொலைவிற்கு மட்டுமே, குறைந்த வேகத்தில் பயணிக்க முடியும்.
அத்தகைய வீல்சேரின் உதவியுடன் உணவு டெலிவிரி வேலையை பார்ப்பது எல்லாம் முற்றிலுமாக முடியாத காரியம். ஆனால், இக்பால் சிங்கின் வீல்சேரில் இத்தகைய பயன்பாட்டிற்கு என்றே பிரத்யேகமாக மோட்டார் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த மோட்டார் வீல்சேரை நியோ மோஷன் என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. இக்பால் சிங்குக்கு இந்த மோட்டார் வீல்சேரை ஒரு தொண்டு நிறுவனம் வழங்கியுள்ளது.

இதன் பின்னரே தனது குடும்பத்தாருக்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டும் என இக்பாலுக்கு தோன்றியுள்ளது. அதன்படி, சோமோட்டோவில் டெலிவிரி பாயாக வேலைக்கு சேர்ந்துள்ளார். இதுகுறித்து பேசிய இக்பால் சிங், "நான் முன், பின் தெரியாதவர்களிடம் இருந்து நிறைய உதவிகளை பெற்றுள்ளேன். அவர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்" என்றார்.
மேலும் வீடியோவில், தான் எங்கிருந்து உணவுகளை பெறுகிறேன் என்பதையும், எவ்வாறு சாலையில் மோட்டார் வீல்சேரை இயக்குகிறேன் என்பதையும் இக்பால் சிங் செய்து காட்டியுள்ளார். இந்த டெலிவிரி பாய் வேலையில் கடந்த ஜூலை மாத இறுதியில்தான் இக்பால் சிங் சேர்ந்துள்ளார். நாள் ஒன்றுக்கு 5 முதல் 7 உணவு டெலிவிரிகளை ஏற்கும் இக்பால் சிங், இதன் மூலமாக ரூ.200இல் இருந்து ரூ.250 வரையில் சம்பாதிப்பதாக தெரிவிக்கிறார். இக்பால் சிங்குக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: சுமார் 12 வருடங்களாக படுத்த படுக்கையாக இருந்தவர் இன்று ஒவ்வொரு நாளும் புதிய புதிய இடங்களையும், புதிய மனிதர்களையும் சந்தித்து வருகிறார் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இதில் ஹைலைட் என்னவென்றால், இதனை அவர் எவரது உதவியுமின்றி தன்னிச்சையாக செய்கிறார். இதற்கு நாம் அறிவியலுக்கும், மோட்டார் உலகிற்கும் தான் நன்றியை சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications








