யாரா இருந்தாலும் ரூல்ஸ் ரூல்ஸ்தான்! பெங்களூர் குளிரில் பைக் ஓட்னப்ப துணை முதல் அமைச்சர் செஞ்சதை பாருங்க!
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தலைநகரான பெங்களூர் (Bangalore), போக்குவரத்து நெரிசலுக்கும் புகழ் பெற்றது. பெங்களூரில் ஒரு சில சமயங்களில் 10 கிலோ மீட்டர்கள் தொலைவை கடக்க, 2-3 மணி நேரம் கடந்து விடும். எனவே பெங்களூர் நகரில், போக்குவரத்து நெரிசல் பிரச்னையை குறைக்க, அம்மாநில அரசு தீவிரமாக முயற்சி செய்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பெங்களூரின் ஹெப்பால் பகுதியில் புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள ஃப்ளைஓவர் (Hebbal Flyover), இன்று (ஆகஸ்ட் 18) திறக்கப்பட்டது. இதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், கர்நாடக மாநில முதல் அமைச்சர் சித்தராமையா (Siddaramaiah) மற்றும் துணை முதல் அமைச்சர் டி.கே. சிவக்குமார் (D.K. Shivakumar) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புதிதாக கட்டமைக்கப்பட்டுள்ள ஹெப்பால் ஃப்ளைஓவர், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை 30 சதவீதம் குறைக்கும் என துணை முதல் அமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்துள்ளார். இந்த ஃப்ளைஓவர் 700 மீட்டர் நீளம் கொண்டது. 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில், வெறும் 7 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஃப்ளைஓவர் திறக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இன்று நடைபெற்ற ஹெப்பால் ஃப்ளைஓவர் திறப்பு விழா நிகழ்ச்சியில், மற்றொரு சுவாரஸ்யமான விஷயமும் நடந்தது. இந்த ஃப்ளைஓவரில், துணை முதல் அமைச்சர் டி.கே. சிவக்குமார், பைக் ஓட்டி மகிழ்ந்ததுதான் அந்த சுவாரஸ்யமான விஷயம்.

துணை முதல் அமைச்சர் டி.கே சிவக்குமார் பைக் ஆர்வலர் ஆவார். அவரிடம் பழைய யெஸ்டி ரோட்கிங் 250 (Yezdi Roadking 250) பைக் ஒன்று உள்ளது. இது துணை முதல் அமைச்சர் டி.கே சிவக்குமார் கல்லூரியில் படித்த காலத்தில் வாங்கியது ஆகும். வாங்கி பல ஆண்டுகள் கடந்து விட்டால், யெஸ்டி ரோட்கிங் 250 பைக் பயன்படுத்தப்படாமல் துணை முதல் அமைச்சர் டி.கே சிவக்குமாரின் இல்லத்தில் வெறுமனே நின்று கொண்டிருந்தது.
ஆனால் சமீபத்தில் அந்த பைக் ரீஸ்டோர் செய்யப்பட்டது. பழைய பைக்கை, அதன் ஒரிஜினல் கண்டிஷன் அல்லது மேம்படுத்தப்பட்ட நிலைக்கு கொண்டு வருவதுதான், ரீஸ்டோர் ஆகும். அப்படி ரீஸ்டோர் செய்யப்பட்ட யெஸ்டி ரோட்கிங் 250 பைக்கைதான், துணை முதல் அமைச்சர் டி.கே. சிவக்குமார் இன்று ஹெப்பால் ஃப்ளைஓவரில் ஓட்டி மகிழ்ந்தார்.
அப்போது அவர் விதிமுறைகளின்படி, ஹெல்மெட் அணிந்திருந்தார். எனவே பைக் ஓட்டும்போது, யாராக இருந்தாலும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வையும், அவர் இரு சக்கர வாகன ஓட்டிகள் மத்தியில் ஏற்படுத்தினார். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, இந்த யெஸ்டி ரோட்கிங் 250 பைக், துணை முதல் அமைச்சர் டி.கே. சிவக்குமாரின் கல்லூரி காலத்தில் வாங்கப்பட்டது ஆகும்.
இந்த வின்டேஜ் கிளாசிக் பைக்கில், 250 சிசி 2 ஸ்ட்ரோக் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 18 பிஹெச்பி பவர் மற்றும் 24 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 4 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெங்களூரில் ஹெப்பால் ஃப்ளைஓவர் திறக்கப்பட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய மற்றும் மகிழ்ச்சியான ஒரு விஷயம். ஆனால் பெங்களூர் நகரின் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை குறைக்க இன்னும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதுதான் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.
வேகமாக பெருகி வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலைகளை விரிவாக்கம் செய்தல் மற்றும் புதிய பாலங்களை கட்டுதல் போன்ற பணிகளுடன், பஸ், மெட்ரோ ரயில் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வையும், கர்நாடக மாநில அரசு பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலமாக மட்டுமே பெங்களூர் நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்னையை குறைக்க முடியும்.


Click it and Unblock the Notifications








