மக்கள் தலையில் இடியை இறக்கிய அரசு! இனி இதுக்கு கூட வரி கட்டணுமா? துணை முதல்வர் சொன்ன முக்கிய தகவல்!
இந்தியாவில் தற்போது கார்கள் மீதான ஜிஎஸ்டி (GST) வரி அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கார்களின் விலை வெகுவாக குறைந்துள்ளது. எனவே கார்களின் விற்பனை தற்போது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ஆனால் கார்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட நிலையில், கார்களில் தனியாக பயணம் செய்தால் வரி செலுத்த வேண்டும் என்ற திட்டம் அமலுக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.
அதாவது கார்களில் ஒருவர் மட்டும் தனியாக பயணம் செய்வதால், போக்குவரத்து நெரிசல் பிரச்னை ஏற்படுகிறது. எனவே இதை கட்டுப்படுத்துவதற்காக நெரிசல் வரி (Congestion Tax) என்ற பெயரில் புதிய வரி விதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. கார்களில் தனியாக பயணம் செய்பவர்களுக்கு அபராதம் விதிப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும்.

இதன் காரணமாக கார்களில் தனியாக பயணம் செய்வதை தவிர்த்து விட்டு, பஸ், ரயில் மற்றும் மெட்ரோ போன்ற பொது போக்குவரத்து வாகனங்களுக்கு பொதுமக்கள் மாறுவார்கள் என அரசு கருதுவதாக கூறப்பட்டது. கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில்தான் (Bangalore) இந்த திட்டம் அமலுக்கு வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன.
பெங்களூர் நகரின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த அவுட்டர் ரிங் ரோடு போன்ற சாலைகளில் இந்த நெரிசல் வரி திட்டத்தை செயல்படுத்த கர்நாடக மாநில அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. இந்த தகவல், பெங்களூர் பெரு நகர மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏனெனில் பெங்களூர் நகரில் பொது போக்குவரத்து வசதிகள் தற்போது போதுமான அளவில் இல்லை. ஏற்கனவே பஸ்களுக்கு பற்றாக்குறை காணப்படுகிறது. பஸ்களில் நிரம்பி வழியும் கூட்டத்தின் மூலமாகவே இதை நாம் உணர்ந்து கொள்ளலாம். அத்துடன் முக்கியமான வழித்தடங்களில் மெட்ரோ ரயில் வசதியும் இல்லை.
பொது போக்குவரத்து வசதிகள் போதுமான அளவில் இல்லாத சூழலில், கார்களில் தனியாக பயணம் செய்வதற்கு அரசு எப்படி கட்டுப்பாடுகளை விதிக்க முடியும்? என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அத்துடன் இந்த நெரிசல் வரி திட்டத்திற்கு கர்நாடக மாநில எதிர்கட்சிகளும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தன.
இந்த சூழலில், நெரிசல் வரி விதிப்பது குறித்து எந்தவொரு திட்டமும் இல்லை என கர்நாடக மாநில துணை முதல் அமைச்சர் டி.கே. சிவக்குமார் (D K Shivakumar) தெரிவித்துள்ளார். ''இது தவறான தகவல். அப்படியான திட்டம் (நெரிசல் வரி விதிப்பது குறித்த) எதுவும் இல்லை'' என்றார். டி.கே. சிவக்குமாரின் இந்த அறிவிப்பு, பெங்களூர் மக்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து டெக்கான் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நெரிசல் வரி என்ற பெயரில், கார்களில் தனியாக பயணம் செய்பவர்களுக்கு வரி விதிப்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஏனெனில் சில சமயங்களில் டொயோட்டா ஃபார்ச்சூனர், டாடா ஹாரியர் போன்ற பெரிய கார்களில் ஒரே ஒருவர் மட்டும் பயணம் செய்து கொண்டிருப்பதை காண முடியும்.
பெங்களூர் நகரின் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு இது ஒரு வகையில் மிகவும் முக்கியமான காரணம் என்பதில் மாற்று கருத்தே இல்லை. ஆனால் பெங்களூரில் போதுமான அளவில் பொது போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால்தான், தங்கள் பயணங்களுக்கு சொந்த கார்களை சார்ந்து இருக்க வேண்டிய சூழலுக்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர்.
எனவே நெரிசல் வரி போன்ற திட்டங்களை அமலுக்கு கொண்டு வருவதற்கு முன்பாக, பொது போக்குவரத்து வசதிகளை முழுமையாக மேம்படுத்த வேண்டும். அதற்கு பிறகு வேண்டுமானால், கார்களில் தனியாக பயணம் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கலாம். அதுவும் மருத்துவ அவசரம் போன்ற சூழல்களில் கார்களில் தனியாக பயணம் செய்பவர்களுக்கு விதிவிலக்கு வழங்கும் வகையில் திட்டங்களை வகுக்க வேண்டும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








