ஆம்புலன்சுக்கு வழி விடாத காருக்குள் இருந்தது அவரா! நோயாளி உயிரிழந்ததால் யார் என்னனு பாக்காம கைது செய்த போலீஸ்!
சாலையில் ஆம்புலன்ஸ்கள் சைரன் உடன் அவசரமாக செல்வதை பார்த்தால், நாம் உடனடியாக வழி விட வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். சமீப காலங்களில், ஆம்புலன்ஸ்களுக்கு வழி விட மறுத்த பலர் மீது காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இருப்பினும் இது குறித்து இன்னும் போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பது போல் தோன்றுகிறது. ஏனெனில் கேரள மாநிலத்தில் ஆம்புலன்சுக்கு வழி விட மறுத்த காரணத்திற்காக டாக்டர் ஒருவரே தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலை தளங்களில் தற்போது வைரல் வீடியோ (Viral Video) ஒன்று வேகமாக பரவி வருகிறது. இது நாம் தற்போது பேசி கொண்டுள்ள ஆம்புலன்ஸின் முன் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகள் ஆகும். இந்த வைரல் வீடியோவில் ஆம்புலன்ஸ் அவசர அவசரமாக பயணிப்பதை நம்மால் காண முடிகிறது.

அந்த ஆம்புலன்சுக்கு முன்னால், ஹூண்டாய் க்ரெட்டா என்-லைன் (Hyundai Creta N-Line) கார் ஒன்று சென்று கொண்டிருந்ததையும் நாம் இந்த வைரல் வீடியோவில் காணலாம். அதை ஓட்டி சென்று கொண்டிருந்தவர் ஒரு டாக்டர் ஆவார். அவரது பெயர் டாக்டர் ராகுல் ராஜ் என்பதாகும்.
நோயாளிகளின் உயிரை காப்பாற்ற வேண்டிய உன்னதமான பணியில் இருக்க கூடிய டாக்டரான ராகுல் ராஜ், ஆம்புலன்சுக்கு உள்ளே இருந்த நோயாளியின் உயிரை பறித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. அவர் உரிய நேரத்தில் ஆம்புலன்சுக்கு வழி விடவில்லை என்பதுதான் இந்த புகாருக்கான காரணம்.

தற்போது வைரலாக பரவி வரும் வீடியோவில், ராகுல் ராஜ், ஆம்புலன்சுக்கு வழி விடாமல் பயணிப்பதை பார்க்க முடிகிறது. அவர் நினைத்திருந்தால், சாலையின் இடது பக்கம் (Left Side) ஒதுங்கி, ஆம்புலன்சுக்கு வழி விட்டிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. இதன் காரணமாக ஆம்புலன்ஸ் முன்னேறி செல்வதில், சுமார் 30 வினாடிகள் தாமதம் ஏற்பட்டுள்ளது.
அந்த ஆம்புலன்சுக்கு உள்ளே இருந்தது ஒரு இதய நோயாளி ஆவார். ஒரு மருத்துவமனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக அவரை மற்றொரு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்து சென்று கொண்டிருந்தனர். நோயாளிகளை பொறுத்தவரையில் ஒவ்வொரு வினாடியும் முக்கியமானது. ஆனால் டாக்டர் ராகுல் ராஜ் சரியாக வழி விடாத காரணத்தால் 30 வினாடிகள் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இறுதியில் ஆம்புலன்ஸில் அழைத்து செல்லப்பட்டு கொண்டிருந்த நோயாளி பரிதாபமாக உயிரிழந்தார். எனவே டாக்டர் ராகுல் ராஜ் மீது, காவல் நிலையத்தில், ஆம்புலன்ஸில் டிரைவர் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில், டாக்டர் ராகுல் ராஜ் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இருப்பினும் தன் மீதான புகாரை டாக்டர் ராகுல் ராஜ் மறுத்துள்ளார்.
இது குறித்து காவல் நிலையத்தில் அவர் அளித்த விளக்கத்தில், ''இந்த சம்பவம் உள்நோக்கமற்றது. ஆம்புலன்ஸை பார்த்ததும் பதற்றம் அடைந்து விட்டேன். அந்த சமயத்தில் அங்கு நெருக்கடியாக இருந்த காரணத்தால், உடனடியாக ஆம்புலன்சுக்கு வழி விட முடியவில்லை. ஆனால் சாலை 'க்ளியர்' ஆனவுடன், உடனடியாக ஒதுங்கி, ஆம்புலன்சுக்கு வழி விட்டு விட்டேன்'' என கூறியுள்ளார்.
ஆனால் இந்த விளக்கத்தை காவல் துறை அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே இறுதியில் டாக்டர் ராகுல் ராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அத்துடன் அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் தற்போது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்புலன்சுக்கு வழி விட மறுத்த காருக்குள் இருந்தது நோயாளிகளின் உயிரை காப்பாற்ற வேண்டிய ஒரு டாக்டர் என்பதை அறிந்ததும், சமூக வலை தளங்களில், அவருக்கு எதிராக நெட்டிசன்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர். அதே நேரத்தில் அவர் கைது செய்யப்பட்ட நடவடிக்கையை வெகுவாக பாராட்டியும் வருகின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தற்போதெல்லாம் ஆம்புலன்ஸ்களின் முன் பகுதியில் கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. யாராவது ஆம்புலன்சுக்கு வழி விட மறுத்தால், அந்த வீடியோவில் பதிவான காட்சிகளை ஆதாரமாக வைத்து, அதிரடியாக கைது செய்யப்படுகின்றனர். எனவே ஆம்புலன்ஸ்களை கண்டால், உடனடியாக வழி விடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஆம்புலன்சுக்கு வழி விடுவது என்பது ஒவ்வொருவரின் கடமை. மனிதாபிமான அடிப்படையில் இதை நாம் அனைவரும் உறுதி செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications








