அதிசய கார்களை குறுக்காட்டி செல்பி எடுத்த மக்கள்! விலை எவ்ளோனு தெரிஞ்சா ஐஸ் கட்டி மாதிரி ஒறஞ்சு போயிருவீங்க!
நம்மில் பலரும் கார்களின் விலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடியவர்களாக உள்ளோம். குறைவான விலையில் கிடைக்க கூடிய கார்கள்தான் நமது முதல் தேர்வாக உள்ளது. எனவே இந்திய சாலைகளில் மிகவும் விலை உயர்ந்த கார்களை காண்பது என்பது தற்போது வரை அரிதான ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது.
சென்னை, பெங்களூர், மும்பை போன்ற பெரு நகரங்களில் வேண்டுமானால், லம்போர்கினி (Lamborghini) மற்றும் ஃபெராரி (Ferrari) போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் கார்களை காண முடியும். ஆனால் இந்த நகரங்களில் கூட, டாட்ஜ் (Dodge) நிறுவனத்தின் கார்களை அவ்வளவு எளிதாக பார்த்து விட முடியாது. டாட்ஜ் என்பது அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற கார் நிறுவனம் ஆகும். செயல்திறன் மிக்க கார்களை டாட்ஜ் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

உலகப்புகழ் பெற்ற டாட்ஜ் நிறுவனத்தின் கார்கள் திடீரென இந்திய சாலைகளில் வலம் வந்தால் என்ன நடக்கும்? என்பது தற்போது நமக்கு தெரியவந்துள்ளது. மக்கள் கூட்டமாக கூடி போக்குவரத்து நெரிசலே ஏற்பட்டு விடும் என்பதுதான் இந்த கேள்விக்கான பதில். ஆம், உண்மைதான். டாட்ஜ் நிறுவனத்தின் 2 கார்கள் சமீபத்தில் இந்திய சாலைகளில் தரிசனம் தந்தன. அப்போது மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடி விட்டதால், போக்குவரத்தே ஸ்தம்பித்து விட்டது.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள முக்கியமான சாலை ஒன்றில், டாட்ஜ் சார்ஜர் எஸ்ஆர்டி (Dodge Charger SRT) மற்றும் டாட்ஜ் சேலஞ்சர் எஸ்ஆர்டி (Dodge Challenger SRT) ஆகிய 2 கார்கள் சமீபத்தில் வலம் வந்தன. வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமாக இருந்த காரணத்தால், அவை உடனடியாக மக்களின் கவனத்தை ஈர்த்து விட்டன. பொதுவாக பெங்களூர் நகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்னை தலைவிரித்தாடும்.
போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்ற பெங்களூரில், இந்த 2 கார்களின் வருகை, கூடுதல் பிரச்னையை ஏற்படுத்தி விட்டது. இதில், டாட்ஜ் சார்ஜர் எஸ்ஆர்டி காரானது சிகப்பு நிறத்திலும், டாட்ஜ் சேலஞ்சர் எஸ்ஆர்டி காரானது நியான் க்ரீன் நிறத்திலும் இருந்தன. இந்த கலரும், இந்த கார்களின் சைலென்சர் சப்தமும் மக்கள் கூடுவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருந்தது. நிறைய பேர் அந்த கார்களின் முன்னால் ஒன்று திரண்டு, முன்னோக்கி செல்ல விடாமல் இடையூறு ஏற்படுத்தினர்.
அங்கு திரண்டிருந்த நிறைய பேர் தங்கள் செல்போனில் இந்த 2 கார்களையும் வீடியோ எடுத்தனர். ஒரு சிலர் இன்னும் மேலே போய் அந்த கார்களை தடுத்து நிறுத்தி, செல்பி எடுத்து கொண்டனர். அங்கு கூடியிருந்த பலருக்கு, இவை எந்த நிறுவனத்தின் கார்கள் என்பதே தெரியவில்லை. ஃபெராரி... ஃபெராரி... என பலர் சத்தம் போட்டு கொண்டிருந்தனர். ஆனால் இவை டாட்ஜ் நிறுவனத்தின் கார்கள் ஆகும்.
இந்த தகவலை கேள்விபட்டதும், பெங்களூர் போக்குவரத்து போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அங்கு கூடியிருந்தவர்களை எல்லாம் விலக்கி விட்டு காருக்கு பாதை ஏற்படுத்தி கொடுத்தனர். மேலும் உடனடியாக கார்களை ஓட்டி செல்லுமாறு, டிரைவர்களையும் அவர்கள் வலியுறுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த 2 கார்களின் உரிமையாளர்களும், கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க சந்தையில் தற்போதைய நிலையில் டாட்ஜ் சார்ஜர் எஸ்ஆர்டி (ஜெயில்பிரேக்) காரின் விலை 89,135 டாலர்கள் என கூறப்படுகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 74 லட்ச ரூபாய் ஆகும். மறுபக்கம் டாட்ஜ் சேலஞ்சர் எஸ்ஆர்டி (ஜெயில்பிரேக்) காரின் விலை 86,835 டாலர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்திய மதிப்பில் தோராயமாக 72 லட்ச ரூபாய் ஆகும். ஆனால் இந்த கார்களை நீங்கள் இந்தியாவில் ஓட்ட விரும்பினால், இறக்குமதி வரி (Import Tax) ஆகியவற்றை செலுத்த வேண்டும்.
உலகிலேயே இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. எனவே இந்த கார்களின் ஒட்டுமொத்த விலை இன்னும் வெகுவாக அதிகரித்து விடும். ஆனால் பெங்களூர் நகரில் தற்போது வலம் வந்த இந்த 2 கார்களும் பழைய மாடல்களாக இருக்கலாம் என தெரிகிறது. எனவே அவற்றின் விலை மாறுபடுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எப்படியாயினும் இதுபோன்ற அரிதான கார்களை சாலையில் பார்த்ததும், பொதுமக்கள் காட்டிய ரெஸ்பான்ஸ் ஆச்சரியத்தை ஏற்படுத்திய கூடிய வகையில் இருந்ததாக கார் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications