கோவாவை சுத்தி பாக்கணும்! ஒவ்வொரு வண்டியா லிஃப்ட் கேட்டு போகும் அதிசய நாய்! எல்லார் கூடயும் பாசமா ஒட்டிக்குது!
மனிதர்களுக்கும், நாய்களுக்கும் இடையேயான உறவு பரிசுத்தமானது. மனிதர்கள் மீதான விஸ்வாசத்தை, நாய்கள் பலமுறை நிரூபித்து காட்டியுள்ளன. ஒரு மனிதன் இன்னொரு மனிதனை நம்புவதற்கு வேண்டுமானால், நீண்ட காலம் ஆகலாம். ஆனால் நாய்கள் அப்படி கிடையாது. மனிதர்களை நம்பும் குணம், நாய்களுக்கு இயற்கையாகவே அதிகம்.
நாய்கள் வைக்கும் இந்த நம்பிக்கைதான், மனிதர்கள் அவற்றை நேசிக்க முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. இதை உண்மை என நிரூபிக்கும் வகையிலான நிகழ்வு ஒன்று, கோவாவில் (Goa) தற்போது நடைபெற்று கொண்டுள்ளது. அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த நிகழ்வு, வைரல் வீடியோ (Viral Video) ஒன்றின் மூலமாக வெளி உலகத்திற்கு தெரியவந்துள்ளது.

சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வரும் இந்த வீடியோவில், தெரு நாய் (Street Dog) ஒன்று, ஒரு ஸ்கூட்டரில் அமர்ந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த தெரு நாய், இரு சக்கர வாகனங்களில் (Two Wheelers) பயணம் செய்வதை விரும்புகிறது. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு ஏதேனும் ஒரு வாகனத்தில் செல்லும் இந்த நாய், அங்கிருந்து வேறொரு வாகனத்தில், புதிய ஒரு இடத்திற்கு செல்கிறது.
இப்படியாக கோவா முழுவதும் இந்த நாய், இரு சக்கர வாகனங்களில் சுற்றி திரிந்து கொண்டுள்ளது. இதை 'ஹிட்ச்-ஹைக்' (Hitch-hike) என்பார்கள். புரியும்படி சொல்வதென்றால், லிஃப்ட் (Lift) மூலம் பயணம் செய்வது. ஆம், உண்மையில் இந்த நாய், லிஃப்ட் கேட்டு கட்டணம் இல்லாமல்தான் பயணம் செய்து வருகிறது.
நாங்கள் இந்த செய்தியின் தொடக்கத்திலேயே கூறியபடி, மனிதர்களை நம்பும் குணம் நாய்களுக்கு இயற்கையாகவே அதிகம். முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் கூட, நாய்கள் எளிதாக ஒட்டி கொள்ளும். அப்படிதான் இரு சக்கர வாகனங்களில் வருபவர்களிடம் இந்த நாய் எளிதாக பழகி கொள்கிறது. பின்னர் அவர்களின் வாகனத்தில் எங்கேயாவது செல்லும் இந்த நாய், அங்கிருந்து வேறு ஏதேனும் ஒரு வாகனத்தில், ஜாலியாக ஊர் சுற்றுகிறது.
அப்படி ஒருவரின் ஸ்கூட்டரில் பயணம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோதான், சமூக வலை தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. உண்மையில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இந்த நாய், புதுமையான ஒரு உணர்வை ஏற்படுத்தி வருகிறது. அறிமுகம் இல்லாத நாய் ஒன்று திடீரென வந்து உங்களிடம் சௌகரியமான உணர்வை வெளிப்படுத்தினால், நீங்களும் இதை அனுபவிக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இரு சக்கர வாகனங்களில் ஊர் சுற்றுவதை இந்த நாய் விரும்புகிறது என்பது தெளிவாக புலப்படுகிறது. முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் கூட, எளிதாக ஒட்டி கொள்ளும் இந்த தன்மை, உண்மையிலேயே ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. நாய்கள் என்றால் பயம் என்று சொல்பவர்கள் கூட, இது போன்று அன்பாக பழகும் நாய்களை தூக்கி கொஞ்சலாம்.
இந்த வீடியோவிற்கு கீழே நாம் காணும் 'கமெண்ட்கள்' நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளன. நிறைய பேர் இந்த நாயை தத்தெடுக்க ஆர்வமாக இருப்பதாக 'கமெண்ட்' செய்து வருகின்றனர். வேறு நகரங்களை சேர்ந்த இன்னும் ஒரு சிலரோ, தங்கள் ஊர்களிலும் இதே போன்று ஸ்கூட்டரில் ஏறி கொண்டு, இறங்க மறுத்து அடம் பிடித்த நாய்களின் கதைகளை நெகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications








