1997இல் உருவாக்கப்பட்ட அரிய லம்போர்கினி கார்!! இதுக்கு முன்ன யார் யூஸ் பண்ணாங்கனு தெரியுமா? அட... அவரா!
டொனால்ட் டிரம்ப் (Donald Trump), முன்னாள் அமெரிக்க அதிபர். அத்துடன், அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களுள் ஒருவரான டிரம்ப் பயன்படுத்திய லம்போர்கினி டியாப்லோ (Lamborghini Diablo) கார் ஏலத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற இந்த ஏலத்தில் டிரம்பின் லம்போர்கினி கார் ஆச்சிரியமளிக்கும் வகையில் மிக பெரிய தொகையில் விற்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் நடைபெற்ற பர்ரெட்-ஜாக்சனின் ஸ்காட்ஸ்டேல் ஏலத்தில் டொனால்ட் டிரம்ப் பயன்படுத்திய கார் உள்பட பல்வேறு கார்கள் ஏலம் விடப்பட்டன. இதில், டிரம்பின் லம்போர்கினி டியாப்லோ கார் சுமார் 11 லட்ச அமெரிக்க டாலர்களில் விற்கப்பட்டு உள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ஏறக்குறைய ரூ.9.14 கோடியாகும்.

இதில் 10% தொகையை ஏலம் விடும் அமைப்பிற்கு வழங்க வேண்டும். அதாவது, ரூ.91 லட்சம். பொதுவாக, காரை ஏலம் விடுவதற்காக இவ்வளவு பெரிய தொகை ஏலம் விடும் அமைப்பிற்கு வழங்கப்படுவதில்லை. ஆனால், டிரம்ப் பயன்படுத்திய காரை ஏலம் விடுவதற்காக பிரீமியம் மெம்பர்ஷிப் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
டிரம்பின் லம்போர்கினி கார் என கூறாமல், டிரம்ப் பயன்படுத்திய கார் என ஏன் கூறுகிறோம் என்றால், இந்த லம்போர்கினி டியாப்லோ கார் தற்சமயம் டொனால்ட் டிரம்பிடம் இல்லை. 1997ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த லம்போர்கினி காரை அந்த வருடத்திலேயே டிரம்ப் வாங்கி இருந்தார். 2002ஆம் வருடம் வரையில் கிட்டத்தட்ட 5 வருடங்கள் மட்டுமே டிரம்ப் இந்த காரை பயன்படுத்தினார்.

அதன்பின் 2 உரிமையாளர்களின் கைக்கு சென்று தற்போது ஏலத்திற்கு வந்துள்ளது. சுமார் 25 வருடங்களாக பயன்பாட்டில் இருந்தாலும், இத்தனை வருடங்களில் 25 ஆயிரத்திற்கும் குறைவாக தொலைவிற்கு மட்டுமே இந்த கார் இயக்கப்பட்டு உள்ளது. ஏலத்திற்கு வந்த இந்த லம்போர்கினி காரின் வேகமானியில் 24,834 கிமீ என குறிப்பிடப்பட்டு இருந்ததாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, முதல் ஓனரான டொனால்ட் டிரம்ப் இந்த காரை மிகவும் குறைவான தொலைவிற்கே பயன்படுத்தி உள்ளார். டிரம்ப் வாங்கியது லம்போர்கினி டியாப்லோ காரின் மிகவும் அரிதான விடி ரோட்ஸ்டர்ஸ் வெர்சன் ஆகும். எந்த அளவிற்கு அரிதானது என்றால், இந்த கார் அமெரிக்காவில் மொத்தமாகவே 132 யூனிட்கள் மட்டுமே உருவாக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. அத்துடன், தனது டியாப்லோ காரை டிரம்ப் ஸ்பெஷல் ஆனதாக மாற்றியுள்ளார்.

முக்கியமாக, காருக்கு லே மேன்ஸ் நீல நிற பெயிண்ட்டை டிரம்ப் வழங்கியுள்ளார். அதே நீல நிறத்தில்தான் இப்போதுவரையில் அந்த கார் உள்ளது. இதற்கு காரணம், இத்தகைய நீல நிறத்தை லம்போர்கினி நிறுவனம் தனது கார்களுக்கு வழங்குவதில்லை. 1997 லம்போர்கினி டியாப்லோ காரின் சிறப்பம்சமே, அதன் கத்திரிக்கோல் வடிவ கதவுகள் ஆகும்.
டிரம்ப் வாங்கிய டியாப்லோ விடி ரோட்ஸ்டர் காரில் 4.7 லிட்டர், 48-வால்வு, நேச்சுரலி-அஸ்பிரேட்டட் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 485 பிஎச்பி மற்றும் 580 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த கியர்பாக்ஸ் என்ஜினின் ஆற்றலை காரின் 4 சக்கரங்களுக்கும் ஒரே நேரத்தில் வழங்குகிறது. 0-இல் இருந்து 96.5kmph வேகத்தை வெறும் 4.1 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த லம்போர்கினி காரின் டாப்-ஸ்பீடு 325kmph ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பழைய கிளாசிக் கார்கள் ஏலத்தில் அதிக விலைக்கு விற்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், 1997இல் உற்பத்தி செய்யப்பட்ட லம்போர்கினி கார் சுமார் ரூ.9 கோடிக்கும் அதிகமான விலைக்கு ஏலம் போய் இருப்பது சற்று ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு முக்கிய காரணம், டொனால்ட் டிரம்ப் என்ற அடையாளமே அன்றி, வேறொன்றும் இல்லை.


Click it and Unblock the Notifications









