பெட்ரோல், டீசல் காலம் முடிய போகுது... வீட்டில் இருந்தபடியே வண்டிக்கு சிஎன்ஜி நிரப்பலாம்... எப்படினு தெரியுமா?
சிஎன்ஜி எரிபொருளை டோர் டெலிவரி செய்யும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மும்பையில் தற்போது சிஎன்ஜி (CNG) வாகனங்களுக்கு வீட்டிலேயே எரிபொருள் நிரப்பி கொள்ள முடியும். இதற்கு ஃப்யூயல் டெலிவரி (Fuel Delivery) நிறுவனத்திற்குதான் நாம் நன்றி சொல்ல வேண்டும். ஃப்யூயல் டெலிவரி என்பது ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் பெயர் ஆகும். இந்த நிறுவனம்தான் மும்பையில் தற்போது சிஎன்ஜி எரிபொருளை வீடுகளுக்கே டெலிவரி செய்யும் சேவையை தொடங்கியுள்ளது.

இதற்காக மஹாநகர் கேஸ் லிமிடெட் (Mahanagar Gas Limited) நிறுவனத்துடன், ஃப்யூயல் டெலிவரி கூட்டணி அமைத்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே சிஎன்ஜி எரிபொருள் செல்வது உறுதி செய்யப்படுகிறது. 'ஹோம் டெலிவரி' என்பது புதிய கான்செப்ட் கிடையாது. பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல்வேறு பொருட்கள் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே கொண்டு வந்து தரப்படுகின்றன.

தற்போது கார் மற்றும் பைக் போன்ற வாகனங்கள் கூட வீட்டு வாசலுக்கே வந்து டெலிவரி செய்யப்படும் உலகில் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம். எனவே எரிபொருள் நமது வீட்டு வாசலுக்கே வருவதில் பெரிய ஆச்சரியம் இல்லை. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வீடுகளுக்கே எரிபொருளை டெலிவரி செய்யும் சேவையை தொடர்ச்சியாக ஆரம்பித்து வருகின்றன.

அப்படிப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ஒன்றுதான் ஃப்யூயல் டெலிவரி. மும்பையை சேர்ந்த இந்த நிறுவனம் ஏற்கனவே வாடிக்கையாளர்களுக்கு டீசலை டெலிவரி செய்யும் சேவையை தொடங்கி விட்டது. இந்த சூழலில் தற்போது சிஎன்ஜி எரிபொருளை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கே டெலிவரி செய்யும் சேவையை ஃப்யூயல் டெலிவரி நிறுவனம் தொடங்கியுள்ளது.

ஆனால் சிஎன்ஜி எரிபொருளை டெலிவரி செய்யும் சேவை தற்போதைய நிலையில் சிறிய அளவில்தான் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவையை படிப்படியாக விரிவாக்கம் செய்வதற்கு ஃப்யூயல் டெலிவரி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலையில் சியோன் மற்றும் மஹாபே போன்ற பகுதிகளில் மட்டுமே சிஎன்ஜி டெலிவரி சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இங்கு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட பின்னர், மும்பையின் மற்ற பகுதிகளுக்கும் இந்த சேவை விரிவாக்கம் செய்யப்படும். இதை தொடர்ந்து மற்ற நகரங்களுக்கும் சிஎன்ஜி எரிபொருளை டோர்-டெலிவரி செய்வதற்கு ஃப்யூயல் டெலிவரி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மினி டிரக்கில் அமைக்கப்பட்டிருக்கும் மொபைல் சிஎன்ஜி ஸ்டேஷன் மூலமாக சிஎன்ஜி எரிபொருள் வாடிக்கையாளர்களுக்கு வினியோகம் செய்யப்படும்.

சிஎன்ஜி எரிபொருள் மூலமாக இயங்க கூடிய ஆட்டோ-ரிக்ஸாக்கள், கார்கள் மற்றும் பேருந்துகள் போன்ற வாகனங்களை இலக்காக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி வாகனங்களை அதிகமாக வைத்துள்ளவர்கள் இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். இனிமேல் அவர்கள் அனைத்து வாகனங்களையும் சிஎன்ஜி ஸ்டேஷனுக்கு கொண்டு செல்ல வேண்டியதில்லை.

மாறாக அவர்களின் இடத்திற்கே சிஎன்ஜி ஸ்டேஷன் வரும். இந்தியாவில் தற்போது சிஎன்ஜி எரிபொருளின் பயன்பாடு மிக வேகமாக உயர்ந்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய வழக்கமான எரிபொருட்களுடன் ஒப்பிடும்போது சிஎன்ஜி எரிபொருள் சுற்றுச்சூழலுக்கு நட்பானது. அத்துடன் பெட்ரோல், டீசலுடன் ஒப்பிடும்போது சிஎன்ஜி எரிபொருளின் விலையும் மிகவும் குறைவு.

இதன் காரணமாகவே சிஎன்ஜி எரிபொருள் தற்போது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. இந்த சூழலில்தான் தற்போது ஃப்யூயல் டெலிவரி நிறுவனம் மும்பையில் சிஎன்ஜி எரிபொருளை டோர்-டெலிவரி செய்யும் சேவையை தொடங்கியுள்ளது. இந்த சேவைக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை அவ்வப்போது புதிய உச்சங்களை தொட்டு விடுவதால் வாடிக்கையாளர்கள் பலர் தற்போது சிஎன்ஜி கார்களுக்கு மாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் நம்பர்- கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனம்தான், சிஎன்ஜி கார்கள் விற்பனையிலும் முதலிடத்தை வகித்து வருகிறது.

வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளதால், தற்போது ஹூண்டாய், கியா மற்றும் டாடா போன்ற நிறுவனங்களும் சிஎன்ஜி கார்களை அதிகளவில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளன. எனவே வரும் காலங்களில் இந்திய சந்தையில் நிறைய சிஎன்ஜி கார்களை நாம் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








