சூப்பரா இருக்கே... இந்திய இளைஞர் உருவாக்கிய டிவைஸ்... இது என்ன பண்ணும்னு தெரிஞ்சா அசந்திருவீங்க!
இந்திய இளைஞர் ஒருவர் சூப்பரான டிவைஸ் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒருவருக்கு போதிய அளவில் தூக்கம் கிடைக்காவிட்டால் நிறைய பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக வாகன டிரைவர்களுக்கு போதுமான நேரம் தூக்கம் கிடைக்காமல் போனால், சாலை விபத்துக்கள் ஏற்படலாம். 5 மணி நேரத்திற்கும் குறைவான நேரம் தூங்கும் டிரைவர்கள், விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது அவர்களுக்கான பிரச்னை மட்டுமல்ல. அவர்கள் ஓட்டும் வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்குமான பிரச்னை. சாலையில் பயணிக்கும் மற்ற வாகன ஓட்டிகள், பாதசாரிகள் என அனைவருக்குமான பிரச்னை. ஒரு டிரைவரின் தூக்க கலக்கம், மிக மோசமான சாலை விபத்திற்கு காரணமாக அமையலாம். எனவே வாகன டிரைவர்களுக்கு போதிய நேர தூக்கம் மிகவும் அவசியமானது.

ஆனால் டிரைவர்கள் பலர் ஓய்வின்றி வாகனம் ஓட்டுவதை வழக்கமான வைத்துள்ளனர். இதன் காரணமாக வாகனம் ஓட்டும்போது அவர்களுக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டு, நிறைய வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. இதை தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தாலும், பெரிய அளவில் பலன் கிடைப்பதில்லை.

டிரைவர்களின் தூக்க கலக்கம் காரணமாக தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று கொண்டேதான் இருக்கின்றன. இந்த சூழலில், சாலை விபத்துக்களில் இருந்து பொதுமக்களின் உயிரை காப்பாற்றும் டிவைஸ் ஒன்றை இளைஞர் ஒருவர் கண்டறிந்துள்ளார். இந்த டிவைஸ் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரை சேர்ந்தவர் கௌரவ் சவ்லாகே. இவர் ஆன்டி-ஸ்லீப் அலாரம் டிவைஸ் (Anti-Sleep Alarm Device) ஒன்றை உருவாக்கியுள்ளார். டிரைவர்கள் வாகனம் ஓட்டும்போது தங்கள் காதில் இந்த டிவைஸை மாட்டி கொள்ள வேண்டும். பயன்படுத்துவதற்கு எளிமையான இந்த டிவைஸ் மூலம் சாலை விபத்துக்கள் நடக்காமல் தடுக்கும் திறன் வாய்ந்தது.

இதுகுறித்து கௌரவ் சவ்லாகே கூறுகையில், சமீபத்தில் நேபாளத்திற்கு சென்றிருந்தேன். அப்போது இரவு நேரத்தில், எதிர்பாராத விதமாக எனக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டது. ஆனால் விபத்தில் சிக்காமல் எப்படியோ தப்பித்து விட்டேன். அப்போது டிரைவர்கள் திடீரென தூங்கினால், அவர்களை எச்சரிக்கும் டிவைஸ் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற யோசனை எனக்கு ஏற்பட்டது'' என்றார்.

கௌரவ் சவ்லாகே தற்போது உருவாக்கியுள்ள டிவைஸை நாங்கள் ஏற்கனவே கூறியபடி வாகனம் ஓட்டும்போது காதில் மாட்டி கொள்ள வேண்டும். அப்போது டிரைவர் திடீரென தூங்குகிறார் என்றால், அவரது கழுத்து வளையும். டிரைவரின் கழுத்து வளைந்தால், உடனடியாக இந்த டிவைஸ் அலாரம் எழுப்பி எச்சரிக்கை செய்யும்.

காதில் மாட்டி கொள்ள கூடிய இந்த டிவைஸில், சென்சார், பேட்டரி மற்றும் ஆன்/ஆஃப் ஸ்விட்ச் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமான டிவைஸை உருவாக்கியுள்ள கௌரவ் சவ்லாகேவிற்கு சமூக வலை தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

ஆனால் இந்தியாவில் இதுபோன்ற டிவைஸ்கள் உருவாக்கப்படுவது இது முதல் முறை கிடையாது. தொழில்நுட்ப மேம்பாடுகள் என்ற விஷயத்தில் இந்தியாவில் இளைஞர்களுக்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு பிரச்னைகளுக்கு இந்திய இளைஞர்கள் பலர் பல்வேறு தீர்வுகளை கண்டு வருகின்றனர். கௌரவ் சவ்லாகேவின் கண்டுபிடிப்பு இதற்கு ஒரு உதாரணம்.

இந்த டிவைஸ்கள் பாராட்டப்பட வேண்டியவை என்றாலும், டிரைவர்கள் வாகனத்தில் ஏறுவதற்கு முன்பு, போதுமான அளவிற்கு ஓய்வு எடுத்து கொள்வதுதான் சிறந்தது. இதுவே தூக்க கலக்கம் காரணமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் சாலை விபத்துக்களை குறைப்பதற்கு அடிப்படையான வழி ஆகும். ஒருவேளை வாகனம் ஓட்டி கொண்டிருக்கும்போது தூக்க கலக்கம் ஏற்பட்டால், வாகனத்தை நிறுத்தி விட்டு ஓய்வு எடுப்பது நல்லது.

சற்று தாமதம் ஏற்பட்டாலும் கூட பாதுகாப்பாக சென்றடையலாம். அதேபோல் காரில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிவது, இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணிவது போன்ற போக்குவரத்து விதிமுறைகளையும் முறையாக பின்பற்றினால், சாலை விபத்துக்கள் மற்றும் அதன் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையையும் குறைக்கலாம்.


Click it and Unblock the Notifications