ஓடும் காரில் இளைஞர்கள் செய்த காரியம்! சொந்த காசில் சூனியம் வெச்சிக்கிட்டாங்க
சமூக வலைத்தளங்களின் மோகம் நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இன்றைய கால இளம் தலைமுறையினர் இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு அதிகமாக அடிமையாகி வருகின்றனர். இதனாலேயே மற்றவர்கள் பார்ப்பதற்காகவும், இணையத்தில் கவனத்தை பெறுவதற்காகவும் என்னென்னமோ செய்து பார்க்கின்றனர். அந்த வகையில், இங்கு சிலர் ரீல்ஸ் வீடியோ (Reels Video)-ஐ பதிவு செய்வதற்காக காரில் ஆபத்தான முறையில் பயணம் செய்து அதிர்ச்சியுற செய்துள்ளனர். இதற்கு போலீசாரும் தங்களது நடவடிகையை மேற்கொண்டுள்ளனர். என்ன நடந்தது? வாருங்கள் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் மக்களால் வாங்கப்படும் பிரபலமான கார்களுள் ஒன்று. ஸ்டைலிஷான தோற்றத்தில், பவர்ஃபுல்லான என்ஜின் உடன் நல்ல மைலேஜ் தரக்கூடிய மாருதி கார். இப்படிப்பட்ட காரை தான் கேரளாவில் சிலர் ரீல்ஸ் எடுக்க பயன்படுத்தி உள்ளனர்.

காருக்குள் இருந்து மொபைல் போனில் வீடியோ எடுப்பது ஒன்றும் தவறில்லை. ஆனால் இந்த சம்பவத்தில், பலேனோ காரின் பின்பக்க பூட் பகுதியில் அமர்ந்துக் கொண்டு இளைஞர்கள் இருவர் பின்னால் வந்துக் கொண்டிருந்த பி.எம்.டபிள்யூ (BMW) காரை தங்களது கேமராக்களில் படம் பிடித்தப்படி சென்றுள்ளனர்.
அதாவது, பிஎம்டபிள்யூ காரினுள் இருப்பவர்களை காருடன் சேர்த்து வீடியோவாக காட்சிப்படுத்த வேண்டும் என்பதுதான் இவர்களது நோக்கம். இந்த சம்பவங்கள் அனைத்தையும் வேறொரு காரில் சென்றவர்கள் படமாக்கி இணையத்தில் வெளியிட, அது வைரலாகியது மட்டுமில்லாமல், இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வைத்துள்ளது.
இவ்வாறு சிலர் தங்களது காரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியப்படி செல்வதை வீடியோ எடுத்தவர் கேரள மோட்டார் வாகன துறையை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இதனால்தான், சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு சுடச்சுட தண்டனை விரைவாக கிடைத்துள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த சம்பவம் கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்றுள்ளது.

கேரளா மாநிலத்திலேயே முக்கியமான சாலையான கொச்சி சர்வதேச விமான நிலையத்தையும், கொச்சி துறைமுகத்தையும் இணைக்கக்கூடிய சாலையில் தைரியமாக இவ்வாறு ரீல்ஸ் வீடியோ எடுக்க முயற்சித்துள்ளனர். இதனையடுத்து, பலேனோ காரை ஓட்டிய வயநாட்டை சேர்ந்த டிரைவர் அமல் தேவ்வின் ஓட்டுனர் உரிமம் மோட்டார் வாகன துறையினரால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
அமல் தேவ் பலேனோ காரை ஓட்ட, அவரது 2 நண்பர்கள் காரின் பின்பக்க பூட் பகுதியில் ஆபத்தான வகையில் அமர்ந்துக் கொண்டு பின்னால் வந்த பிஎம்டபிள்யூ காரை வீடியோவாக காட்சிப்படுத்தி உள்ளனர். ஒரு சடர்ன் பிரேக் காரின் பின்னால் அமர்ந்திருந்தவர்களின் வாழ்க்கையை முடித்துவிட கூடும் என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரின் பூட் பகுதியில் அமர்ந்திருந்தவர்கள் இருவரும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்வதில் கைத்தேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இருப்பினும், காரின் பூட் பகுதியில் அமர்ந்து வீடியோவை காட்சிப்படுத்திய அனுபவம் அவர்களுக்கு இருந்திருக்குமா என்பது சந்தேகமே. இவ்வாறான சம்பவங்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி, சாலையில் செல்லும் மற்றவர்களுக்கும் ஆபத்தாக அமையக்கூடும் என்பதை மறவாதீர்கள்.


Click it and Unblock the Notifications








