50 வருஷமா எங்கயா இருந்த! அம்பாஸிடர் காருக்காக குடும்பம் நடத்திய பாச போராட்டம்! நாடே கண் கலங்கீருச்சு!
ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் (Hindustan Ambassador) கார், இந்தியர்களுக்கு எப்போதுமே ஸ்பெஷலான ஒன்றுதான். இதை வெறும் காராக பார்க்காமல், குடும்ப உறுப்பினரை போல் பார்ப்பவர்கள் மிகவும் அதிகம். அந்த அளவிற்கு மக்களின் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் இருந்து வருகிறது.
ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, பல வருடங்கள் கடந்து விட்டன. ஆனால் இன்னமும் கூட ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரை பற்றிய செய்திகள், அனைவரின் கவனத்தையும் ஈர்க்க கூடியதாக உள்ளன. இந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு செய்தி, இந்தியா முழுவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் தந்தை ஓட்டிய ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரை, மகன்கள் மிகப்பெரிய தேடுதல் வேட்டைக்கு பிறகு கண்டறிந்துள்ளனர். அத்துடன் அந்த காரின் தற்போதைய உரிமையாளரிடம் பேசி, தங்களது தந்தைக்கு பரிசாக வழங்கியுள்ளனர். இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் அச்யுதன் நாயர். இவருக்கு தற்போது 84 வயதாகிறது. கடந்த 1970களில், அச்யுதன் நாயர், டாக்டர் ஒருவருக்கு டிரைவராக பணியாற்றினார். அந்த டாக்டரிடம் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் கார் சொந்தமாக இருந்தது. அந்த காரைதான், அச்யுதன் நாயர் ஓட்டி கொண்டிருந்தார்.

1970களில் எல்லாம் சொந்தமாக கார் வைத்திருப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரை வைத்திருப்பதெல்லாம் உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம்தான். ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் கார் வைத்திருப்பவர்களுக்கு சமூகத்தில் தனி மரியாதை கிடைத்த கால கட்டம் அது. அப்படிப்பட்ட ஒரு சூழலில், டாக்டரின் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரை, அச்யுதன் நாயர் வீட்டிற்கு எடுத்து வந்து விடுவாராம்.
அந்த காரில்தான் அச்யுதன் நாயரின் மகன்களான சுஜீத் மற்றும் அஜீத் ஆகிய இருவரும் டிரைவிங்கே பழகினர். அத்துடன் அச்யுதன் நாயரின் அக்கம் பக்கத்தினர் நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு கூட அந்த ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரை பயன்படுத்தியுள்ளனர். இப்படி அனைத்தும் மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த சூழலில், அச்யுதன் நாயர் பணியாற்றி வந்த டாக்டர் ஒருநாள் மரணமடைந்தார்.

இதன்பின் அவரது குடும்பம் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரை விற்பனை செய்து விட்டு, வெளிநாட்டிற்கு சென்று விட்டது. எனவே அச்யுதன் நாயர் மன வருத்தத்துடன் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரை பிரிய நேரிட்டது. அந்த சமயத்தில் அச்யுதன் நாயரின் மகன்களான சுஜீத்தும், அஜீத்தும் சொந்தமாக தொழில் தொடங்கியிருந்தனர். தங்களது தந்தை ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரை பற்றியே நினைத்து கொண்டிருந்தது அவர்களின் கவனத்திற்கு சென்றது.
ஆனால் நாங்கள் ஏற்கனவே கூறியபடி டாக்டரின் குடும்பம் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரை வேறு ஒருவருக்கு விற்பனை செய்து விட்டதால், அது கை மாறியிருந்தது. இருப்பினும் அந்த நபரை கண்டறிந்து, சுஜீத் மற்றும் அஜீத் ஆகிய இருவரும் பேசி பார்த்தனர். ஆனால் அவர் கேட்ட தொகையை, சுஜீத் மற்றும் அஜீத் ஆகியோரால் அப்போது கொடுக்க முடியவில்லை. இதன்பின் சுஜீத் மற்றும் அஜீத் ஆகிய இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாகி விட்டனர்.
ஆனால் அச்யுதன் நாயர் தான் ஓட்டிய ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரை மறக்கவில்லை. பல வருடங்கள் உருண்டோடிய நிலையில், சமீபத்தில் அந்த காரை பற்றிய பேச்சை அச்யுதன் நாயர் எடுத்துள்ளார். எனவே இம்முறை எப்படியாவது அந்த கார் எங்கே உள்ளது? என்பதை கண்டறிந்து வாங்கி விட வேண்டும் என சுஜீத்தும், அஜீத்தும் முடிவு செய்தனர். முடிவு செய்ததுடன் நின்று விடாமல், உடனடியாக தேடுதல் வேட்டையை தொடங்கினர்.
மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக தங்களது தந்தை ஓட்டிய ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் கார் தற்போது எங்கே உள்ளது? என்பதை சுஜீத்தும், அஜீத்தும் கண்டறிந்தனர். இதன்பின் அந்த காரின் தற்போதைய உரிமையாளரிடம் அவர்கள் பேசினர். இந்த கார் தங்களது தந்தைக்கு எவ்வளவு முக்கியமானது? என்பதை அவர்கள் எடுத்துரைத்தனர்.
இந்த ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காருக்கு பின்னால் உள்ள நெகிழ்ச்சியான கதையை கேட்டதும், அதன் தற்போதைய உரிமையாளர் மன மகிழ்ச்சியுடன், சுஜீத் மற்றும் அஜீத் ஆகிய இருவரிடமும் மீண்டும் ஒப்படைத்து விட்டார். இதுபற்றிய விஷயங்கள் எதுவுமே தெரியாத அச்யுதன் நாயர், சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் தான் ஓட்டிய ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் கார் திடீரென மீண்டும் தனது கைக்கு வந்ததை அறிந்ததும், மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்து விட்டார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தங்களது தந்தைக்கு மகன்கள் ஒரு காரை பரிசளிப்பதே பெரிய விஷயம்தான். அதுவும் 50 வருடங்களுக்கு முன்னால் தந்தை ஓட்டிய காரை தேடி கண்டுபிடித்து வாங்கி, மீண்டும் அவருக்கே பரிசளிப்பது என்பதெல்லாம் வேற லெவல்! இதற்காக சுஜீத் மற்றும் அஜீத் ஆகிய இருவருக்கும் எங்களது மனமார்ந்த பாராட்டுக்கள்.


Click it and Unblock the Notifications
