கார் வாங்கினால் இந்த மாதிரி ஒரு டிரைவரை வேலைக்கு வைக்கனும்... இந்த செல்லத்த நம்ம ஊருக்கு கூட்டினு வாங்கப்பா!!
நகரங்களில் வசிப்போர்க்கு வாகனங்களை பார்க் செய்வதும், அவற்றை பின்னர் அந்த இடத்தில் இருந்து எடுத்து செல்வதும் எந்த அளவிற்கு கடினம் என்பது தெரிந்திருக்கும். இதனாலேயே, ஒரு சில திரையரங்குகள் மற்றும் உணவகங்களில் காரை பார்க் செய்வதற்கு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ஒரு சில நாடுகளில் காரை பிசியான சாலையில் நிறுத்துவதற்கு கூட கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. அப்படியிருந்தும் தொடர்ந்து பெருகிவரும் கார்களின் எண்ணிக்கையினால், பல கார்களுக்கு மத்தியில் காரை பார்க் செய்து வெளியே எடுப்பதற்குள் போதும், போதும் என்றாகி விடுகிறது.
ஆனால், இங்கு ஒருவர் மிகவும் நெருக்கமான இடத்தில் இருந்து காரை எந்தவொரு சேதாரமும் இன்றி, மிகவும் விரைவாக வெளியே எடுத்து அசத்தி உள்ளார். பார்க்கிங்கில் இருந்து எடுக்கப்பட்ட டொயோட்டா கரோல்லா (Toyota Corolla) காருக்கு முன்னாலும், பின்னாலும் வெறும் 4 விரல்கள் அளவிற்கு மட்டுமே இடைவெளி உடன் நிறுத்தப்பட்டு இருந்த கார்களை லேசாக கூட தொடாமல் வெளியே எடுத்துள்ளார்.

இதில் ஹைலைட் என்னவென்றால், இதனை அவர் மிகவும் விரைவாக செய்துள்ளார். இவ்வாறு, நெருக்கமாக வாகனங்கள் இருக்கும் இடத்தில் இருந்து காரை வெளியே கொண்டுவருவது மற்றும் மிகவும் குறுகலான சாலையில் காரை யு-டர்ன் செய்வது போன்ற செயல்களை வீடியோக்களில் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். காரை மிகவும் மெதுவாக இயக்கியப்படி அந்த செயல்களில் ஈடுப்பட்டு இருப்பார்கள்.
ஆனால், இந்த நபரோ இரு கார்களுக்கு இடையில் மிகவும் நெருக்கமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை மிகவும் வேகமாக வெளியே எடுத்து பிரம்மிக்க வைத்துள்ளார். இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ மொத்தமாகவே வெறும் 35 நொடிகள் மட்டுமே ஓடுகிறது. வீடியோவில் காட்சித்தரும் நபர் காருக்குள் நுழைந்ததும் 10 நொடிகளுக்கு உள்ளாகவே காரை அங்கிருந்து வெளியே கொண்டுவருவது மிகுந்த ஆச்சிரியத்தை ஏற்படுத்துகிறது.

வைரலாக வேண்டும் என்பதற்காக வீடியோவை எடிட்டிங் செய்துள்ளனரா என்பது தெரியவில்லை. இந்த வீடியோ இந்தியாவில் எடுக்கப்படவில்லை. ஏனெனில், காரினுள் இடதுப்பக்கத்தில் ஸ்டேரிங் சக்கரம் உள்ளதை காணலாம். சில வெளிநாடுகளில் தான் இவ்வாறு இடதுப்பக்கத்தில் ஸ்டேரிங் சக்கரம் வழங்கப்படுகிறது. இந்தியாவில் அனைத்து வாகனங்களிலும் வலதுப்பக்கத்தில் ஸ்டேரிங் சக்கரம் கொடுக்கப்படுகிறது.
முன் மற்றும் பின் கார்களுக்கு இடையேயான இடைவெளியை தன் விரல்களை வைத்து அளந்துக்காட்டிய இந்த நபர் காருக்குள் ஏறியதும் முதலவாதாக, காரை ஸ்டார்ட் செய்து கார் நியூட்ரலில் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறார். அதன்பின், முதல் கியரை கொடுத்ததும் ஹேண்ட் பிரேக்கை பிடித்துக் கொண்டு ஆக்ஸலரேஷன் பெடலை அழுத்தி என்ஜினை ஓட விடுகிறார். என்ஜின் இயங்கும் வேகம் 5- 6 ஆயிரம் ஆர்பிஎம் (RPM)-ஆக இருப்பதை டச்சோமீட்டர் (Tachometer)-இல் காட்டப்படுகிறது.

என்ஜின் வேகமாக இயங்கி கொண்டிருந்த சமயத்தில், ஆக்ஸலரேஷனை ரிலீஸ் செய்து க்ளட்ச் பெடலை பிடித்துக் கொண்டார். பின்னர், ஸ்டேரிங் சக்கரத்தை திருப்பி காரின் முன் சக்கரங்களை இடதுப்பக்கம் திரும்பிக் கொண்டு அதே திசையில் அவற்றை லாக் செய்துக் கொண்டார். அதன்பின், க்ளட்ச் பெடலை ரிலீஸ் செய்து வேகமாக அங்கிருந்து காரை வெளியே கொண்டுவந்துவிட்டார். காரை வெளியே கொண்ட வந்த பின் ஹேண்ட் பிரேக் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, வழக்கம்போல் காரை ஓட்ட ஆரம்பித்துவிட்டார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இது பார்ப்பதற்கு வேண்டுமாயின் எளியதாக இருக்கலாம். ஆனால், அதிக கவனம் தேவை. மேற்கூறப்பட்ட வழிமுறைகளில் ஒன்றை தவறாக செய்தால் கூட கார் சேதாரமாக கூடும். குறிப்பாக, என்ஜினின் வேகம் மிகவும் குறைவாகவும், அதேநேரம் அதிகமாகவும் இருக்கக் கூடாது. ஆதலால், இரு கார்களுக்கு இடையே இதனை செய்து பார்க்கும் முன், காலியான இடத்தில் இரு கோடுகளை கிழித்து முயற்சி செய்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









