டிரைவரே இல்லாமல் ஓட இருக்கும் சென்னை மெட்ரோ ரயில்... கரெக்டா எல்லா ஸ்டாப்புலையும் நின்னு போகுமா!!
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (Chennai Metro Rail Limited), சென்னையில் டிரைவரே இல்லாமல் இயங்கும் ரயிலை பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டு இருக்கும் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
சென்னை வாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சொகுசான ரைடு அனுபவத்தை குறைவான கட்டணத்தில் வழங்கக் கூடிய சேவையாக மெட்ரோ ரயில் சேவை இருக்கின்றது. இதனால்தான் பலர் தற்போது மெட்ரோ ரயில் சேவையை அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர்.

அதுதவிர, விரைவான போக்குவரத்தையும் இதன் வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும். இந்த நிலையிலேயே சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், தன்னுடைய மெட்ரோ ரயில் சேவையில் விரைவில் ஓட்டுநர்கள் இல்லாமல் இயங்கும் ரயில்களை (Driverless Trains) பயன்பாட்டிற்குக் கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அடுத்து வரும் ஒரு சில மாதங்களிலேயே பைலட் இல்லாமல் இயங்கும் ரயில் சென்னையில் பயன்பாட்டிற்கு வரும் என டைம்ஸ் ஆஃப் இந்தியா அது வெளியிட்டிருக்கும் செய்தியில் கூறி இருக்கின்றது. மூன்று பெட்டிகள் கொண்டதாகவே இந்த ரயில்கள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது.

முதல் டிரைவர் இல்லாமல் இயங்கும் ரயில் வருகின்ற ஆகஸ்டு மாதத்திலேயே எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு அடுத்தபடியாக மேலும் ஆறு ரயில்கள் அடுத்த இரண்டு மாதங்களில் களமிறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே சீக்கிரமே ஓட்டுநர்கள் இல்லாமல் இயங்கும் ரயில்கள் சென்னையில் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த ரயில்கள் பயன்பாட்டிற்கு வரும் முன் சில மாற்றங்கள் ரயில் வழித்தடங்களில் செய்யப்பட இருப்பதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து இருக்கின்றது. இந்த மாற்றங்களுக்கான பணிகள் வருகின்ற ஜூலை மாதத்தில் தொடங்கப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, கோடம்பாக்கம் - பூந்தமல்லி பைபாஸ் இடையே கட்டப்பட்டு வரும் புதிய மெட்ரோ ரயில் பாதையும் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
2025 ஆம் ஆண்டிற்குள் இந்த வழித்தடம் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. பூந்தமல்லி டெப்போ கட்டுமான பணிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பணிகளே விரைவில் முடிவடைய இருப்பதாகவும், அந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கட்டம் 2 மெட்ரோ ரயில் திட்டத்திற்காக 138 மூன்று பெட்டிகள் கொண்ட ரயில்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த ரயில்கள் 116.1 கிமீ வழித்தடத்தை சுழற்சி முறையில் பயணிக்கும். 2025 ஆம் ஆண்டு தொடங்கி 2028 ஆம் ஆண்டு வரை கட்டம் கட்டமாக இது திறக்கப்பட இருக்கின்றது.
டிரைவர்கள் இல்லாமல் இயங்கும் ரயில் அதிக பாதுகாப்பானதாகவும் பயணிகளுக்கு உகந்த ரயிலாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், ரயிலின் உள் மற்றும் வெளிப்பக்கத்தில் சிசிடிவி கேமிரா, செல்போன்களைச் சார்ஜ் செய்துக் கொள்வதற்கான சார்ஜிங் போர்ட், கைப் பிடிகள், ரயில் செல்லும் வழித்தடத்தைக் காண்பிக்கும் திரைகள், பொழுதுபோக்கு திரைகள் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும் என கூறப்படுகின்றது. இதுதவிர நிற்பவர்கள் சாய்ந்துக் கொள்ள ஏதுவாக 'பெர்ச் இருக்கைகள்'-ம் இதில் இடம் பெற்றிருக்கும்.
இந்த ரயில்களில் ஆயிரம் பேர் வரை பயணிக்க முடியும் என கூறப்படுகின்றது. உச்சபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் டிரைவர் தேவைப்படா மெட்ரோ ரயில்கள் தயார் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆனால், ரயில்கள் பயன்பாட்டின்போது மணிக்கு 80 கிமீ வேகத்திலேயே இயக்கப்பட இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மெட்ரோ ரயில் சேவை சென்னையில் மட்டுமல்ல இந்தியாவின் மற்ற முன்னணி நகரங்களிலும் பிரபலமடைந்துக் காணப்படுகின்றது. குறிப்பாக, மும்பையில் பிரபலங்கள் சிலரே போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மெட்ரோ ரயில்களைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர். அந்தவகையில், ஷாருக்கான் தொடங்கி பிரபல தொழிலதிபர் ஹிராநந்தனி வரை பலர் மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்தி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








