மேட்-இன் சீனா மெட்ரோ இரயில் நம்ம சென்னையில்!! டிரைவர் சம்பளம் மிச்சம் ஆகும்... ஆர்டர் பண்ணது யார் தெரியுமா?
பெங்களூரு மெட்ரோ (Bengaluru Metro)-இன் மஞ்சள் லைனில் இயக்கப்படவுள்ள டிரைவர்-இல்லா இயங்கும் மெட்ரோ இரயில்கள் நம் சென்னையை வந்தடைந்துள்ளன. இதுதொடர்பான படங்கள் டெக்கான் ஹெரால்ட் செய்தித்தளத்தின் வாயிலாக இணையத்தில் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம், வாங்க.
டிரைவர் இல்லா இயங்கும் மெட்ரோ இரயில்களின் பயன்பாடு இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், பெங்களூரின் நம்ம மெட்ரோவில் முதல்முறையாக டிரைவர் இல்லா இயங்கும் மெட்ரோ இரயில் சேவை விரைவில் துவங்கப்பட உள்ளது. பெங்களூரு மெட்ரோ இரயில் கட்டமைப்பில் மஞ்சள் லைனில் இந்த இரயில் இயக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட டிரைவர் இல்லா இயங்கும் மெட்ரோ இரயில் ஒன்று சீனாவில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு கப்பல் வழியாக வந்துள்ளது. பெங்களூர் நம்ம மெட்ரோவில் மஞ்சள் லைன் வழித்தடம் பயன்பாட்டிற்கு வருவது நீண்ட வருடங்களாக தாமதமாகி வருகிறது. ஆனால், தற்போது சென்னையில் இருந்து வெளியாகி உள்ள படங்கள் மூலம் மஞ்சள் லைனில் மெட்ரோ சேவை விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்தம் 6 பெட்டிகளை கொண்ட மெட்ரோ இரயில்களுடன் செயல்பட உள்ள நம்ம மெட்ரோவின் மஞ்சள் லைன் மொத்த 19.15 கிமீ தொலைவு நீளம் கொண்டதாக உள்ளது. பெங்களூரின் ஆர்வி சாலையில் இருந்து பொம்மசந்த்ரா வரையில் எழுப்பப்பட்டு வரும் மஞ்சள் லைன் வழித்தடத்தில் ஜெயதேவா மருத்துவமனை, சில்க் போர்டு சந்திப்பு மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சிட்டி உள்ளிட்ட முக்கியமான பகுதிகள் ஒருங்கிணைக்கப்பட உள்ளன.
தற்போது சென்னை துறைமுகத்துக்கு வந்திருக்கும் டிரைவர் இல்லாமல் இயங்கும் மெட்ரோ இரயில்களை சீனாவை சேர்ந்த சி.ஆர்.ஆர்.சி நாஞ்ஜிங் பார்க் ஜின் என்ற மாகாண அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த இரயில் உற்பத்திகான ஒப்பந்தம் கடந்த 2019ஆம் ஆண்டில் சுமார் ரூ.1,578 கோடியில் இந்த சீன நிறுவனத்துக்கும், பெங்களூரு மெட்ரோ இரயில் நிர்வாகத்திற்கும் இடையே கையெழுத்தாகியது.
இந்த ஒப்பந்தத்தின்படி, மேலே குறிப்பிட்ட சீன நிறுவனம் மொத்தம் 216 மெட்ரோ இரயில் பெட்டிகளை உருவாக்கி பெங்களூர் மெட்ரோ இரயில் நிர்வாகத்திற்கு வழங்கவுள்ளது. தற்போது சென்னை துறைமுகத்திற்கு வந்திருக்கும் இந்த சீன தயாரிப்பை உடனடியாக பெங்களூரு கொண்டு செல்ல முடியாது. அதற்கு முன்னதாக, சுங்க வரி கட்டணம் என சில வழக்கமான வழிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது.
இதற்காக 5 நாட்கள் வரை இந்த மெட்ரோ இரயில் பெட்டிகள் சென்னை துறைமுகத்தில் தான் இருக்கும். அதன்பின், பெரிய பெரிய கண்டெயினர் லாரிகள் மூலமாக இவை சாலை வழியாக பெங்களூருக்கு கொண்டுச் செல்லப்பட உள்ளன. இதற்கு மேலும், 3 -4 நாட்கள் ஆகிவிடும். ஒன்றன்பின் ஒன்றாக, பெங்களூருக்கு கொண்டு செல்லப்படும் இந்த இரயில் பெட்டிகள் எலக்ட்ரானிக்ஸ் சிட்டியில் உள்ள ஹெப்பாகோடி டிப்போவில் அசெம்பிள் செய்யப்பட உள்ளன.
இதற்காகவே சீனாவில் இருந்து நிபுணத்துவம் வாய்ந்த பொறியியலாளர்கள் பெங்களூர் வந்துள்ளனர். அதன்பின், வெவ்வேறு விதமாக 32 சோதனைகள் மேற்கொள்ளப்படும். இந்த சோதனை முடிவுகள் முதன்மை இரயில்வே பாதுகாப்பு ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த ஒட்டுமொத்த பணிகள் நிறைவடைய 5- 6 மாதங்கள் ஆகிவிடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மனிதர்கள் என்னதான் பாதுகாப்பாக இரயில்களை இயக்கினாலும், சில சமயங்களில் நம்மை தாண்டி மனித பிழைகள் ஏற்பட்டுவிடுகின்றன. அதுமட்டுமின்றி, இரயில்கள் தாமதத்திற்கும் பல நேரங்களில் டிரைவர்கள் செய்யும் தவறுகளே காரணமாக அமைகின்றன. ஆதலால், எதிர்காலத்தில் இந்த குறைகளை தவிர்க்க வேண்டுமெனில், ஆளில்லா-இயங்கும் மெட்ரோ இரயில் சேவைகள் அவசியமானதாக விளங்குகின்றன.


Click it and Unblock the Notifications








