பூந்தமல்லி-போரூர் மெட்ரோ ரயிலை இவங்கதான் ஓட்ட போறாங்களா! எல்லா ஸ்டாப்லையும் கரெக்ட்டா டிரெயின் நிக்குமா?
மெட்ரோ ரயில்கள் (Metro Rail) சென்னை வாசிகளின் போக்குவரத்தில் முக்கிய பங்கினை வகித்துக் கொண்டிருக்கின்றன. சாலை மார்க்கமாக செல்வதைக் காட்டிலும் விரைவான பயணத்தை மெட்ரோ ரயில்கள் வழங்குவதால் அவற்றிற்கு நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் வரவேற்பு அமோகமாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.
குறிப்பாக, ஏசி வசதி உடன் சொகுசான பயண அனுபவத்தை வழங்குவதாலும் மெட்ரோ ரயிலை நாடி செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே கூடுதல் வழித் தடங்களில் மெட்ரோ ரயில்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் பணியில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.

இதன் அடிப்படையில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் மிக மும்பரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்த பணிகள் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் சூழல் தற்போது உருவாகி இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே யார் இந்த புதிய மெட்ரோ ரயில் வழித்தடங்களில் ரயில்களை இயக்க இருக்கின்றார் என்கிற தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது.
இப்போதைய நிலவரப்படி சென்னையில் பயன்பாட்டில் இருக்கும் பெரும்பாலான மெட்ரோ ரயில்களை பெண்கள் இயக்கிக் கொண்டிருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது. இந்த நிலையில், ஆண்-பெண் என இருவரும், விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கும் மெட்ரோ ரயில்களை இயக்கப் போவதில்லை என்கிற தகவலே வெளியாகி இருக்கின்றது.

"அப்படினா யாருதான் அதை இயக்கப் போறாங்க, அது தானாவா ஓட போகுது" என்கிற கேள்வி உங்களுக்கு எழும்பி இருந்தால், இங்கு ஓர் டுவிஸ்டே இருக்கின்றது. ஆம், அவை தானாகவே ஓட இருக்கின்றன. இந்த முறை மனித உதவியே இல்லாமல் மெட்ரோ ரயில்கள் சென்னையில் இயங்க போகின்றதாம்.
ஹாலிவுட் திரைப்படங்களில் நாம் பார்த்திருப்போம். ரயில்கள், விமானங்கள் மற்றும் பேருந்துகளை தானியங்கி எந்திரங்கள் (கணினிகள்) இயக்குவதைக் கண்டிருப்போம். இதுபோலவே நமது சென்னையிலும் ரயில்கள் டிரைவர் இல்லாமல் (driverless trains) இயங்க இருக்கின்றன. இந்த தகவல் தற்போது வெளியாகி ஒட்டுமொத்த சென்னை வாசிகளையும் பூரிப்படையச் செய்திருக்கின்றது.
ஆனால் என்ன இந்த மெட்ரோ ரயில்கள் பயன்பாட்டிற்கு வரும்போது இன்னும் ஒரு சிலருக்கு மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என பலர் எண்ணிக் கொண்டிருந்தனர். ஒரு சிலர் தாங்கள் இதில் பங்குபெற்று சேவையாற்றலாம் என எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால், அதற்கு தற்போது ஆப்பு உருவாகி இருக்கின்றது.
சென்னை மெட்ரோல் ரயில் லிமிடெட் அதிகாரிகள் சிலர் கூறியிருப்பதன்படி, இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 138 மூன்று கோச்சுகள் அடங்கிய டிரைவர்கள் தேவைப்படா ரயில்கள் வாங்கப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இந்த ரயில்களே, மாதாவரம் முதல் சிப்காட், கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி மற்றும் மாதாவரம் முதல் சோழிங்கநல்லூர் ஆகிய வழித் தடங்களில் இயக்கப்பட இருக்கின்றன.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட கட்டுமானப் பணிகள் மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2026 ஆம் ஆண்டிற்குள் இந்த கட்டுமான பணிகள் அனைத்தும் நிறைவுற்று அவை பயன்பாட்டிற்கு வந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையிலேயே இந்த ஃபேஸ்-2 மெட்ரோ ரயில்கள் ஓட்டுநரே இல்லாமல் இயங்கப் போகின்றன என்பது தெரிய வந்திருக்கின்றது.
இதற்கு முன்னதாக இதுகுறித்த தகவல்கள் வெளியாகிய நிலையில் இப்போதே அவை உறுதி செய்யப்பட்டு இருக்கின்றன. ஆள் இருக்கும்போதே இந்தியாவில் ரயில் விபத்துகள் அசால்டாக நடைபெறுகின்றன. இதேபோல், ரயில் நிலையங்களில் ரயில்கள் நிற்காமல் சென்ற செய்திகளையும் நாம் படித்திருக்கின்றோம். சூழல் இப்படியாக இருக்க இந்த பைலட் தேவைப்படா ரயில்கள் சரியாக ரயில் நிலையங்களில் நின்று செல்லுமா?, பாதுகாப்பு இருக்குமா? என்கிற கேள்வி உங்களுக்கு எழும்பி இருக்கலாம்.
இந்த கேள்விகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக ஆளில்லாமல் ஓட இருக்கும் புதிய மெட்ரோ ரயில்களை ஒரு வருடத்திற்கு வரை விரிவான சோதனைகளுக்கு உட்படுத்த சென்னை மெட்ரோல் ரயில் நிர்வாகம் திட்டமிட்டு இருக்கின்றது. அதேவேளையில், ஆரம்ப கட்டத்தில் சிக்கல் ஏதேனும் நடைபெறாமல் இருக்க ரோவிங் உதவியாளர்களை பணியமர்த்தவும் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.
இவர்கள் முதல் மூன்று ஆண்டுகளுக்கு ரயில் நடமாட்டத்தைத் தீவிரமாகக் கண்கானிப்பார்கள். இதற்கு பின்னர் அவர்கள் படிப்படியாக வெளியேற்றம் செய்யப்பட்டு முழுமையாக ஆளே இல்லாமல் இயங்கும் வகையில் ரயில்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். ஆகையால், இன்னும் விரைவில் சென்னையும் வெளிநாடுகளுக்கு இணையாக மாற இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வெளிநாடுகள் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே நாம் இதுபோன்று ஆளில்லாமல் ஓடும் வாகனங்களை பார்த்திருப்போம். முதல் முறையாக நம்முடைய தமிழகத்தில் இத்தகைய வாகனம் பயன்பாட்டிற்கு வர இருப்பது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருக்கின்றது. பூந்தமல்லி-போரூர் இடையில் இயங்க இருக்கும் ஆளில்லாமல் ஓடக் கூடிய 26 மெட்ரோ ரயில்கள் இன்னும் ஒரு சில மாதங்களில் தயாராகிவிடும் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications








