வாடகை கார் ஓட்டுநர்கள் 8 மணி நேரத்திற்கு மேல் கார் ஓட்ட தடை... சாலைப் பாதுகாப்பு ஆணையம் எச்சரிக்கை..
8 மணிநேரத்திற்கு மேல் கார் ஓட்டும் வாடகை கார் ஒட்டுநர்கள் ஓட்டுநர் உரிமம் தடை செய்யப்படும்.
ஒரு நாளில் 8 மணி நேரத்திற்கு மேலாக வாடகை கார்களை ஓட்டினால், ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என சாலை பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சாலை விபத்துகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரழப்புகள் பற்றி தமிழக சாலைப் பாதுகாப்பு ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், 2016ல்- 17,128 பேரும், 2017ல்- 14,077 பேரும் தமிழக அளவில் நடைபெற்ற சாலை விபத்துகளில் சிக்கி உயிரழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற சாலை விபத்துகளுக்கான காரணங்களை ஆராய்ந்து பார்த்த போது, 90 விழுக்காடு சாலை விபத்துகள் நீண்ட நேரம் வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களால் தான் ஏற்படுகின்றன என்பது தெரிய வந்துள்ளது.

குறிப்பாக தமிழகளவில் ஏற்படும் சாலை விபத்துகள் மற்றும் அதில் நடக்கும் உயிரழப்புகளுக்கு சுற்றுலா வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு பெரிய பங்கு உள்ளது.
Recommended Video


பெரும்பாலான வாடகை மற்றும் சுற்றுலா தளங்களுக்காக வாகனங்களை வழங்கும் நிறுவனங்கள், பணி நேரம் முடிந்த பின்பும் தங்களது ஓட்டுநர்களை தொடர்ச்சியாக பணி செய்ய வலியுறுத்துக்கின்றனர்.

இதனால் பல ஓட்டுநர்கள் ஓய்வின்றி அதிக மணிநேரம் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதன்காரணமாக அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது.

ஓட்டுநர்கள் தொடர்ச்சியாக வாகனம் ஓட்டுவதால் உண்டாகும் களைப்பு மற்றும் மன அழுத்தம் இரண்டும் பல்வேறு சாலை விபத்துகளுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன.

தற்போது இதன் மீது கவனம் கொண்டுள்ள தமிழக அரசின் சாலை பாதுகாப்பு ஆணையம், 1988-ம் ஆண்டு மோட்டார் வாகன சட்டம் மற்றும் மோட்டார் போக்குவரத்து தொழிலாளர்கள் சட்டம் 1961-ல் குறிப்பிடப்பட்டுள்ள சட்ட வரையறைகளை வாடகை கார் ஓட்டுநர்கள் கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளது.

இதன்காரணமாக இனி சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் 8 மணி நேரத்திற்கு மிகாமலும் ஒரு வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மிகாமலும் மற்றும் வாரத்துக்கு ஒரு நாள் ஓய்வுடன் வாகனங்களை இயக்க அறிவுரைத்துள்ளது.

இவற்றுடன் எல்லா வாடகை வாகன ஓட்டுநர்கள் மருத்துவ பரிசோதனை மற்றும் தனிநபர் விபத்து காப்பீடு ஆகியவற்றை வைத்திருத்தல் அவசியம் என்றும் கூறியுள்ளது.

குறிப்பிடப்பட்டுள்ள இந்த விதிகளை ஓட்டுநர்கள் மீறினால், அவர்களது ஓட்டுநர் உரிமத்தை சாலை பாதுகாப்பு ஆணையம் தற்காலிகமாக தடை செய்ய நடவடிக்கைகள் எடுக்கும்.

இவற்றுடன் சட்ட விதிகளை மீறி, வாகனங்களுக்கான அனுமதி சீட்டு மற்றும் தகுதி சான்றுகள் போக்குவரத்து துறை அதிகாரிகளால் புதுப்பிக்கப்பட்டமாட்டாது.

சாலை பாதுகாப்பு மீது தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த புதிய உத்தரவிற்கு பல சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த நடைமுறைகள் அனைத்தையும் ஓட்டுநர்கள் மற்றும அவர்கள் சார்ந்திருக்கும் நிறுவனங்கள் சரியாக பின்பற்றிட தொடர் கண்காணிப்பில் ஈடுபடவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications








