மறுபேச்சுக்கு இடமே இல்ல!! லைசன்ஸை காப்பாற்றி கொள்வது உங்கள் கையில்... தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு சட்டம் வரணும்
போக்குவரத்து விதிமுறைகளை 3 தடவைகளுக்கு மேல் மீறினால், ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என ஓர் மாநகராட்சி சார்பில் அதிரடியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் எந்த மாநகராட்சி அது? எதற்காக இப்படியொரு அதிரடி நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது? என்பது குறித்த விபரங்களை இனி பார்க்கலாம், வாங்க.
போக்குவரத்து நெரிசலும், அதிவேக பயணங்களினால் ஏற்படும் பிரச்சனைகளும் நாளுக்கு நாள் போலீஸாரின் தலைவலியாக மாறி வருகின்றன. இதற்கு முக்கிய காரணம், போக்குவரத்து விதிமுறைகள் குறித்த போதிய விழிப்புணர்வு நம் மக்களிடத்தில் இல்லாததை ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். இதனை மனதில் கொண்டு, மொத்த இந்திய அளவில் கூட சில நடவடிக்கைகள் அவ்வப்போது எடுக்கப்படுகின்றன.

அதேநேரம், போக்குவரத்து போலீஸாரும் புது, புது தொழிற்நுட்ப கண்டுப்பிடிப்புகளை உபயோகித்து போக்குவரத்து விதிமீறல்களை குறைக்க முயற்சிக்கின்றனர். ஆனால், ஒருபக்கம் விதிமுறைகளை மீறுவோர் மீறிக் கொண்டுத்தான் இருக்கின்றனர். இந்த நிலையில், தேசிய தலைநகர் டெல்லிக்கு அருகே அமைந்துள்ள நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா போலீஸார் போக்குவரத்து விதிமுறைகளை மேலும் இறுக்கி உள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அனைத்து வாகன ஓட்டிகளும் தங்களுக்கு ஏதேனும் அபராத செல்லான் வந்துள்ளதா என அவ்வப்போது சரிப்பார்த்துக் கொள்ளுமாறும், 3 தடவைக்கு மேல் யாராவது செல்லானை பெற நேர்ந்தால் அவர்களது ஓட்டுனர் உரிமம் எந்தவொரு பாரப்பட்சமும் இன்றி ரத்து செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டா மாநகரங்களில் போக்குவரத்து விதிமுறைகள் மீறப்படுவது தொடர் கதையாகி வந்த நிலையில், தற்போது இவ்வாறான ஓர் அறிவிப்பு வெளிவந்துள்ளது. குறிப்பாக, நொய்டாவில் அமைந்துள்ள கௌதம் புத்தா நகரில் ஹெல்மெட் அணியாமல் 2-வீலர் ஓட்டுவது, சிக்னலில் நிற்காமல் செல்வது, தவறான திசையில் வாகனம் ஓட்டுவது மற்றும் அதிவேக பயணம் உள்ளிட்ட விதிமீறல்கள் சமீப காலமாக அதிகளவில் பதிவாகி வருகின்றன.
உத்திர பிரதேசம் மாநிலத்திலேயே முதல்முறையாக நொய்டாவில் சமீபத்தில்தான் ஒருங்கிணைந்த டிராஃபிக் மேனேஜ்மெண்ட் சிஸ்டம் அமல்படுத்தப்பட்டது. மொத்த நொய்டா நகரத்தையும் ஒருங்கிணைக்கும் இந்த சிஸ்டம் முழுக்க முழுக்க டிஜிட்டல் தரத்திலானது. இந்த சிஸ்டத்தின்படி, நொய்டா போலீஸார் அதிநவீன கேமராக்களை உபயோகப்படுத்தி இருக்கும் இடத்தில் இருந்தே போக்குவரத்தை கண்காணிக்கின்றனர்.

3 தடவைக்கு மேல் செல்லானை பெற நேர்ந்தால் ஓட்டுனர் உரிமம் ரத்தாகும் என்ற அறிவிப்பு குறித்து நொய்டா போலீஸார் கூறுகையில், "சாலை பாதுகாப்புக்கான உச்ச நீதிமன்ற குழுவின் அறிவுறுத்தல்களின்படி மற்றும் உத்தர பிரதேச சாலை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சிவப்பு விளக்கிற்கு நிற்காமல் செல்வது, அதிக வேகம், அதிக பாரத்தை ஏற்றிச் செல்வது, சரக்கு வாகனங்களில் பயணிகளை ஏற்றிச் செல்வது, வாகனம் ஓட்டும்போது மொபைல் போனை பயன்படுத்துவது போன்றவற்றிற்காக தொடர்ச்சியாக 3 முறைக்கு மேல் அபராத செல்லான்கள் வழங்கப்பட்டால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த 2023ஆம் ஆண்டில், செப்டம்பர் மாதம் வரையில் மட்டும் சுமார் 14 இலட்சத்திற்கும் அதிகமான அபராத செல்லான்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு நொய்டா போலீஸார் வழங்கி உள்ளனர். இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும். இந்த 14 இலட்ச அபராத செல்லான்களில் கிட்டத்தட்ட 70 ஆயிரம் செல்லான்கள் அதிவேக பயணத்திற்காக வழங்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 3 தடவைக்கு மேல் போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் ஓட்டுனர் உரிமம் ரத்து என்பது சிலருக்கு அதிகப்படியான தண்டனையாக தோன்றலாம். ஆனால், உண்மையில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நம் இந்தியா போன்ற ஓர் நாட்டில் இவ்வாறான அதிரடி தண்டனைகள் அவசியமாகின்றன.


Click it and Unblock the Notifications









