இந்தியாவுக்கு ஜனாதிபதி ஆனதுக்கு அப்புறம் தான் இது நடக்குது!! திரௌபதி முர்முவுக்கு சந்தோஷம் பொறுக்கல!
ஜனாதிபதி திரௌபதி முர்மு (Droupadi Murmu)-இன் சொந்த ஊரில் முதல்முறையாக இரயில் போக்குவரத்து துவங்கப்பட்டு உள்ளது. இதன் மூலமாக, கிட்டத்தட்ட 91 வருடங்களில் முதல்முறையாக படாம்பஹார் என்ற ஒடிசாவில் உள்ள ஒரு பகுதியில் இருந்து முதல் விரைவு இரயில் தனது பயணத்தை துவங்கி உள்ளது.
இந்தியாவின் பொது போக்குவரத்தில் இரயில்வே முதுகெலும்பாக விளங்குகிறது. ஆனால் உண்மையில், இந்தியாவில் இன்னும் பல பகுதிகளில் இரயில் சேவை இல்லாமல் உள்ளது. அந்த அளவிற்கு பரந்து விரிந்த நாடு நம் இந்தியா ஆகும். சில பகுதிகளில் ஆங்கிலேயர் காலத்தில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு இரயில் சேவை வழங்கப்பட்டிருக்கலாம்.

ஆனால், இப்போது அந்த தளவாடங்களில் இரயில் போக்குவரத்து இல்லாமல் இருக்கலாம் அல்லது சரக்கு இரயில்களுக்காக மட்டும் அந்த தண்டவாளம் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவ்வாறான ஒரு இந்திய இரயில் நிலையம் தான் படாம்பஹார். ஒடிசா மாநிலத்தின் மயுர்பஞ்ச் என்ற பகுதியில் அமைந்துள்ள படாம்பஹார் இரயில் நிலையத்திற்கு சுமார் 91 வருடங்களில் முதல்முறையாக விரைவு இரயில் போக்குவரத்து கொண்டுவரப்பட்டு உள்ளது.
தற்போதைய இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் சொந்த மாவட்டம் மயுர்பஞ்ச் ஆகும். மயுர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள உபெர்பெடா என்கிற கிராமத்தில் திரௌபதி முர்மு பிறந்தார். படாம்பஹாரில் இருந்து ராய்ராங்புருக்கு தற்போது இயக்க ஆரம்பிக்கப்பட்டு உள்ள இரயில் ஆனது உபெர்பெடாவுக்கு அருகில் தான் செல்கிறது.

இதனால்தான், படாம்பஹாரில் இருந்து முதல் விரைவு இரயில் சேவை துவங்கப்படுவதை ஒட்டி ஜனாதிபதி திரௌபதி முர்முவை அழைத்து சிறப்பித்துள்ளனர். இந்த இரயில் நிலையத்தில் விரைவு இரயில் சேவையை முர்மு கொடியசைத்து துவங்கி வைத்துள்ளார். இரயில் சேவையை துவங்கி வைத்தது மட்டுமில்லாமல், முதல் இரயிலில் படாம்பஹாரில் இருந்து ராய்ராங்புருக்கு ஜனாதிபதி பயணம் செய்துள்ளார்.
அத்துடன், அம்ரித் பாரத் இரயில் நிலைய திட்டத்திற்கான அடிக்கல்லையும் ஜனாதிபதி முர்மு நிறுவியுள்ளார். ஏழை குடும்பத்தில் இருந்து இவ்வளவு உயரிய பதவிக்கு வந்துள்ள இவர் தனது பெரும்பான்மையான வாழ்க்கையை ராய்ராங்புரில் தான் கழித்தார். ஒரு சிறு நகரத்தில் கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்ட திரௌபதி முர்மு, அதன்பின் ராய்ராங்புர் நகர துணைத் தலைவர் பதவியை வகித்தார்.

2000 மற்றும் 2009ஆம் ஆண்டுகளில் இருமுறை ராய்ராங்புரில் இருந்து ஒடிசா மாநில சட்டசபைக்கு சென்றுள்ளார். இத்தகைய தனக்கு நெருக்கமான பகுதியில் முதல் விரைவு இரயில் சேவையை துவங்கி இருப்பது குறித்து ஜனாதிபதி முர்மு கூறுகையில், "எந்த பகுதியின் வளர்ச்சியும் அது எந்த பகுதியுடன் இணைப்பில் உள்ளது என்பதை பொறுத்தது. இரயில், சாலைகள் மற்றும் தபால் சேவைகள் அனைத்து மக்களின் வாழ்க்கையை எளிதாக்குகின்றன" என்றார்.
தென்கிழக்கு இந்திய இரயில்வேக்கு கீழ் வரும் படாம்பஹார் இரயில் நிலையத்தில் இருந்து மொத்தம் 3 விதமான பகுதிகளுக்கு இரயில் சேவையை ஜனாதிபதி துவங்கி வைத்துள்ளார். இதில் 1 வழித்தடத்தில் மெமு சர்வீஸாக இரயில் இயக்கப்பட உள்ளது. படாம்பஹார் இரயில் நிலையத்தில் இருந்து இந்த பகுதிகளுக்கு செல்ல வெறும் ஒரேயொரு விரைவு இரயில் மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எல்லாரும் விமானங்களில் பறந்து கொண்டிருக்கும் காலத்தில், இரயில் போக்குவரத்து கூட இல்லாத பகுதியில் இருந்து நாட்டின் முதல் குடிமகன் என்ற உயரிய இடத்திற்கு வந்துள்ளார் என்றால் ஜனாதிபதி திரௌபதி முர்முவை பற்றி நினைக்கும்போது ஆச்சிரியமாக உள்ளது. விரைவில், ஜனாதிபதி பிறந்த ஊரான உபெர்பெடாவுக்கும் இரயில் சேவை வரட்டும்.


Click it and Unblock the Notifications









