குடி போதையில் கலாட்டா: ரூ.1 கோடி அபராதம், 6 வருடம் சிறை... அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்!
குடிபோதையில் கலாட்டா செய்தவருக்கு ரூ. 1 கோடி அபராதமும், 6 வருடம் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தென் கொரியாவைச் சேர்ந்தவர் கிம். 48 வயதான இவர், குடிப்பழக்கம் கொண்டவர் என கூறப்படுகின்றது. இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஹோனோலுலுவில் இருந்து தென்கொரியாவிற்கு ஹவாயியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானத்தைப் பயன்படுத்தி தென் கொரியா பயணித்துள்ளார்.

அவர், விமானத்தில் ஏறுவதற்கு முன்பே மதுபானம் அருந்தியதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில், குடிபோதையில் தன்னுடன் பயணித்த சக பயணியின் குழந்தையை சீண்டியுள்ளார். ஆகையால், கிம்-மின் நடவடிக்கையில் எரிச்சலடைந்த சக பயணி அவரின் அடாவடியான நடவடிக்கைக் குறித்து விமான பணியாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, கிம்மை கண்டிப்பதற்காக விமான பணிப் பெண்கள் அங்கு திரண்டனர். அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிம், தனக்கு வயிறு வலிப்பதாகக் கூறி, விமானத்தை ஹோனோலுலுவிற்கு திருப்பும்படி வலியுறுத்தியுள்ளார். அவரை, விமான ஊழியர்கள் சமாதானம் செய்தும் பலனளிக்கவில்லை. மேலும், அவர் பணியாளர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால், விமானத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், விமானம் ஹோனோலுலு பகுதிக்கு திருப்பப்பட்டது. இந்த சம்பவத்தால், விமானத்தில் பயணித்த நூற்றுக் கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டது. மேலும், அவர் குறிப்பிட்ட நேரத்தில் அவர்களின் இலக்கை சென்றடைய முடியாமல், காலம் தாழ்த்தப்பட்டனர். இதனால், விமானம் மற்றும் விமான நிலையம் சற்று பரப்பாக காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து, விமானம் ஹோனோலுலு பகுதியில் தரையிறங்கிய பின்னர், விமான நிலையப் போலீஸார், கிம்மை கைது செய்தனர். மேலும், அவர் மீது பல்வேறு பிரிவுகளின் வழக்கு செய்தனர். இந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்தநிலையில், சமீபத்தில் அதன்மீது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதில், கிம்-மிற்கு 172,000 அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.1.2 கோடியாகும். இத்துடன், அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
அபராதத் தொகையானது, விமானத்தை பாதி வழியிலேயே திருப்பியதற்காகவும், அதற்கு ஹவாயியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் செய்த செலவீணத்தை ஈடுபடுத்தும் வகையிலும் விதிக்கப்பட்டுள்ளது.

மதுபோதையானது வாகனத்தை இயக்கும்போது மட்டுமின்றி, பயணத்தின்போதும் ஆபத்தை விளைவிக்கும் என்பதை விளக்கும் வகையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதேசமயம், இவ்வாறு மதுசார்ந்த குற்றச் சம்பவங்களைத் தவிர்க்க, தற்போது தென்கொரியாவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கையைப் போன்று, கடுமையானதாக மேற்கொண்டால் மட்டுமே, தற்போது இந்தியாச் சந்தித்து வரும் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும்.

அண்மைக் காலங்களாக சாலைகளில் நிகழும் விபத்து சம்பவங்களில், குடிமகன்களால் நிகழும் விபத்துகளே அதிமாக இருக்கின்றன. அதேசமயம், குடிபோதையால் செய்யப்படும் குற்றச் சம்பவங்களாலும் அண்மைக் காலங்களாக அதிகரித்து வருகின்றன. ஆகையால், இதுபோன்ற கடுமையான சட்டங்களைக் கொண்டு குற்றவாளிகளின் கைகளைக் கட்டிப்போட வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








