வெறும் 4 மணிநேரத்தில் காஷ்மீர்- கன்னியாக்குமரி போய்டலாம்!! பைலட் சம்பளம் மிச்சம்... எல்லாமே ஆட்டோமேட்டிக்!
துபாய் ஏர்ஷோ 2023 (Dubai Airshow)-இல் எட்ஜ் குழுமத்தின் சார்பில் சின்யார் (Sinyar) என்ற பெயரில் புதிய ஆளில்லா-இயங்கும் ஜெட் விமானம் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. கண்காட்சியில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ள இந்த ஜெட் விமானத்தை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 2023ஆம் ஆண்டிற்கான துபாய் ஏர்ஷோ விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் பல்வேறு நிறுவனங்களின் புது கண்டுப்பிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த வரிசையில், UAE-ஐ சேர்ந்த எட்ஜ் குழுமம் தனது புது வான் வழி வாகனங்களை பார்வையாளர்கள் முன் காட்சிக்கு நிறுத்தியுள்ளது.

மொத்தம் 11 விதமான வான் பாதுகாப்பு வாகனங்கள் எட்ஜ் குழுமத்தின் சார்பில் 2023 துபாய் ஏர்ஷோவில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் ஒன்றாக, எச்.டி-100 என்ற ஆளில்லா-இயங்கும் மல்டி-ரோல் ஹெலிகாப்டரை பற்றி ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். அந்த வரிசையில், சின்யார் என்ற முற்றிலும் புதுமையான ஜெட் விமானத்தை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.
எச்.டி-100ஐ போல சின்யாரும் ஆளில்லாமல் இயங்கக்கூடிய விமானம் ஆகும். இந்த விமானத்தில் ஜெட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. போலாந்து நாட்டின் ஃப்ளாரிஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஃப்ளாரிஸ் எல்.ஏ.ஆர்01 பெர்சனல் ஜெட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள சின்யார் ஜெட் விமானத்தின் மூலம் தானியங்கி வான்வழி வாகனங்களில் ஓர் புரட்சியை ஏற்படுத்தும் அளவிற்கு எட்ஜ் குழுமம் முனைப்புடன் உள்ளது.

இதற்காக, ஃப்ளாரிஸ் நிறுவனத்தில் எட்ஜ் குழுமம் 50% முதலீடு செய்துள்ளது. இந்த விமானம் மூலமாக பல்வேறு மிஷன்களில் ஒரே நேரத்தில் ஈடுப்பட முடியும் என்பது மட்டுமின்றி, அதிக சுமைகளையும் இந்த ஆளில்லா-இயங்கும் விமானத்தில் ஏற்றிச் செல்ல முடியும். அதிகப்பட்சமாக 30,000 அடி உயரத்திற்கு பறக்கும் அளவிற்கு திறன் கொண்டதாக உள்ள சின்யார் விமானத்தில் 450 கிலோவிற்கு சுமைகளை ஏற்றிச் செல்ல முடியும்.
சின்யார் ஜெட் விமானத்தில் 5 இருக்கைகள் உள்ளன. இதில் ஒரு இருக்கை பைலட்டிற்கானது. எடை குறைவான ஜெட் விமானமான இதனை அன்றாட போக்குவரத்துகளுக்கு வான் படை பயன்படுத்தலாம். 2013ஆம் ஆண்டில் முதல்முறையாக பாரிஸ் ஏர்ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட ஃப்ளாரிஸ் நிறுவனத்தின் எல்.ஏ.ஆர்01 விமானத்தில் சிங்கிள்-வில்லியம்ஸ் எஃப்.ஜே33-5ஏ ஜெட் என்ஜின் பொருத்தப்படுகிறது.

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 8.3 கிலோ நியூட்டன் விசையில் விமானத்தை முன்னோக்கி தள்ளும். ஃப்ளாரிஸ் எல்.ஏ.ஆர்01 விமானத்தின் டாப்-ஸ்பீடு 889கிமீ/ நேரம் ஆகும். க்ரூஸிங் ஸ்பீடு 800கிமீ/ நேரம் ஆகும். இந்த ஜெட் விமானத்தின் எரிபொருள் டேங்கை முழுவதுமாக நிரப்பிக் கொண்டு அதிகப்பட்சமாக 3,500கிமீ தொலைவிற்கு நிறுத்தாமல் பயணிக்கலாம்.
இதுகுறித்து எட்ஜ் குழுமத்தின் சிஇஓ-வும் நிர்வாக இயக்குனருமான மன்சூர் அல் முல்லா கூறுகையில், "துபாய் ஏர்ஷோ உலகின் முன்னணி வான் கண்காட்சிகளில் ஒன்றாகும். மேலும், எட்ஜ் தனது மேம்பட்ட ஏரோஸ்பேஸ், வான் பாதுகாப்பு தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளுக்கான வாகனங்களை காட்சிப்படுத்தக்கூடிய சரியான தளம் துபாய் ஏர்ஷோ ஆகும்" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எச்.டி-100 போன்ற பல்வேறு வான்வழி வாகனங்களை எட்ஜ் குழுமம் துபாய் ஏர்ஷோ 2023 கண்காட்சியில் காட்சிப்படுத்தி உள்ளது. ஆனால், அவை எல்லாவற்றையும் விட சின்யார் ஜெட் விமானம் எட்ஜ் குழுமத்திற்கு முக்கியமான மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. தானியங்கி வான் அமைப்புகள் துறையில் முன்னணி வகிக்க வேண்டும் என எட்ஜ் குழுமம் எண்ணுவதும் இதில் இருந்து தெரியவருகிறது.


Click it and Unblock the Notifications









