இங்கே வெயில் பொளக்குது... துபாயில் செம மழை!! வறண்டு கிடக்கும் இண்டர்நேஷ்னல் ஏர்போர்ட்டை இப்போது பாருங்க!
துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இடைவிடாது பெய்த கனமழையால் வெள்ள பெருக்கு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மெட்ரோ இரயில், ஏர்போர்ட் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
உலகின் வறண்ட பகுதிகளாக மத்திய கிழக்கு நாடுகள் விளங்குகின்றன. இந்த பகுதியில்தான், ஐக்கிய அரபு அமீரகம், துபாய், அபுதாபி, ஓமன் போன்ற பாலைவன நாடுகளும், நகரங்களும் அமைந்துள்ளன. இந்த பகுதி வறண்டதாக இருப்பதற்கு முக்கிய காரணம், இந்த பகுதிகளில் மழை போதிய அளவில் பெய்வது இல்லை.

ஆனால், மத்திய கிழக்கு நாடுகளில் எல்லாவற்றிற்கும் சேர்த்து மிகவும் அரிதாக சில நேரங்களில் கனமழை வெளுத்து வாங்கிவிடுகிறது. அப்படியொரு சூழல்தான் துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 16ஆம் தேதி இடைவிடாது பெய்த மழையினால், சாலைகளில் மழைநீர் தேங்கியது. பல இடங்களில் மக்களின் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஒரே நாளில் 12 செ.மீ மழை பொழிப்பை துபாய் பெற்றுள்ளது. இது துபாயில் ஒரு வருடத்தில் பதிவாகும் சராசரி மழை பொழிவை விட அதிகமாகும். அதாவது, துபாயில் 1.5 வருடத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டி தீர்த்துள்ளது. மழை பெய்ததுடன், வலுவான காற்றும் துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் வீசியது.

உலகளவில் பொருளாதாரத்தில் தற்சமயம் வேகமாக முன்னேற்றம் அடைந்துவரும் நகரம் துபாய் என்பதால், கனமழை மற்றும் சூறைக்காற்றால் ஏற்பட்ட சேதங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு நாடுகளின் பொருளாதாரங்களை பாதித்துள்ளன. குறிப்பாக, துபாய் சர்வதேச விமான நிலையத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தொலைத்தூரத்திற்கு இயக்கப்படும் விமானங்கள் பலவற்றின் ஒன்-ஸ்டாப் துபாய் ஆகும். இதனால், துபாய் வழியாக செல்லும் விமானங்களின் பயணங்கள் தாமதமாகி உள்ளன. 1981ஆம் ஆண்டிற்கு பிறகு துபாய் சந்தித்துள்ள மிக பெரிய மழை பொழிவாக கருதப்படும் இதற்கு பல தொழிலதிபர்கள் கூட தங்களது வருத்தங்களை தெரிவித்துள்ளனர். குறிப்பாக, நம் இந்தியாவை சேர்ந்த ஆனந்த் மஹிந்திரா வீடியோ உடன் இதுகுறித்து ஒரு பதிவை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தில் கனமழையால் தாழ்வான பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. பூமிக்கு அடியில் அமைக்கப்பட்ட மெட்ரோ இரயில் நிலையங்களில் முறையாக மழைநீர் வடிகால் அமைப்பு கொடுக்கப்பட்டு இருப்பினும், சுரங்க மெட்ரோ இரயில் நிலையங்களை மழைநீர் ஆக்கிரமித்துள்ளன. அத்துடன், துபாயில் அமைந்துள்ள பெரிய, பெரிய வணிக வளாகங்களுக்கு உள்ளேயும் மழைநீர் புகுந்தன.
1981 சமயத்தில் துபாயில் வணிக வளாகங்கள் அவ்வளவாக இல்லை. ஆதலால், துபாயில் பெரிய, பெரிய ஷாப்பிங் மால்களில் மழைநீர் குளம் போல் தேங்கி இருப்பதை மக்கள் நிறைய பேர் ஆச்சிரியத்துடன் முதல்முறையாக பார்த்தனர். துபாயில் நிறைய இடங்களில் முறையான மழைநீர் வடிகால் அமைப்பு இல்லாததே இந்த வெள்ள பெருக்குக்கு காரணமாக கூறப்படுகிறது.

மழை இத்துடன் நிற்காமல் வரும் நாட்களிலும் பெய்ய கூடும் என அங்கிருக்கும் வானிலை மையங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பனி காலங்களில் மழை பெய்வதே அபூர்வம் எனும் சூழலில், கோடை காலத்தில் மழை பெய்து இருப்பது உலக வெப்பமயமாதலை காட்டுவதாக பல ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: துபாய் எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் அட்வான்ஸாகவே யோசிக்கக்கூடிய நகரம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அரிதாக பெய்யும் மழைக்கு அவர்கள் தயாராக இல்லை. அதாவது, துபாயில் மழைநீர் வடிகால் கட்டமைப்பானது குறைவான மழைநீரை ஏற்கக்கூடியதாகவே உள்ளது. திடீரென இவ்வளவு மழை பொழிவை கண்டவுடன் அவற்றால் சமாளிக்க முடியவில்லை என்பதே உண்மை.
Sources:
https://x.com/capt_ivane/status/1780251244797575668
https://x.com/anandmahindra/status/1780294227852710199
https://x.com/US_Stormwatch/status/1780285846115230171


Click it and Unblock the Notifications









