ஓலா, ஊபர்-ல போனவங்க எல்லாம் இனி பறக்கும் டாக்சில போக போறாங்க.. 2026க்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒப்பந்தம்!
பறக்கும் டாக்சி (Flying Taxi)-யை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் உலக நாடுகள் பல தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, இந்த பணியில் துபாய் சற்று அதிக தீவிரமாகவே ஈடுபட்டு வருகின்றது. இதன் அடிப்படையிலேயே அது தற்போது முக்கிய மைல்கல்லை எட்டி இருக்கின்றது.
இதனால் அந்த நகரத்தில் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் பறக்கும் டாக்சிகள் பயன்பாட்டிற்கு வரும் என்கிற சூழல் உருவாகி இருக்கின்றது. இதற்கான ஒப்பந்தத்தையே தற்போது துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (Dubai Road and Transport Authority) பறக்கும் டாக்சி சேவையை வழங்கும் நிறுவனத்துடன் போட்டு இருக்கின்றது.

வானுயர்ந்த கட்டிடங்களையும், அழகிய கடல் நகரத்தையும் காண உலக நாடுகளில் இருந்து பலர் துபாய் சென்ற வண்ணம் இருக்கின்றனர். இந்த மாதிரியான சூழலிலேயே துபாய் அரசாங்கம் இன்னும் பலரை கவரும் நோக்கில் பறக்கும் டாக்சிகளை நிஜ வாழ்க்கையில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது.
இதற்காக அந்நிறுவனம் பறக்கும் டாக்சி நிறுவனமான ஜோபி ஏவியேஷன் (Joby Aviation) உடன் ஒப்பந்தம் போட்டிருக்கின்றது. இதன் வாயிலாகவே மின்சாரத்தில் இயங்கும் பறக்கும் வாகனங்களை துபாய் பயன்பாட்டிற்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த ஒப்பந்தமானது ஜோபி ஏவியேஷன் நிறுவனத்தை துபாயில் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு பறக்கும் டாக்சிகளை செயல்படுத்த அனுமதிக்கும்.

மேலும், துபாயின் முக்கிய பகுதிகளான துபாய் இன்டர்நேஷனல் முனையம், துபாய் டவுண்டவுன், பால்ம் ஜெமைரா மற்றும் துபாய் மெரினா ஆகிய பகுதிகளையே இணைக்கும் வகையில் பறக்கும் டாக்சி இயங்க இருக்கின்றது. 2026 ஆம் ஆண்டிற்குள் பறக்கும் டாக்சிகள் பயன்பாட்டிற்கு வர வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கின்றது.
இந்த விமானங்கள் மணிக்கு 320 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் திறன் கொண்டவை என கூறப்படுகின்றது. மேலே குறிப்பிடப்பட்டு உள்ள இடங்களுக்கு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல அது வெறும் 10 நிமிடங்களையே எடுத்துக் கொள்ளும் என கூறப்படுகின்றது.

அதேவேளையில், இதே இடைவெளியை காரில் அடையே வேண்டும் என்றால் சுமார் 45 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளுமாம். இத்தகைய அதிக நேரத்தையே மிகவும் குறுகியதாக மாற்ற இருக்கின்றன பறக்கும் டாக்சிகள். ஆகையால், இது துபாயின் அதி வேக இணைப்பு பறக்கும் வாகனங்களாக செயல்படும் என தெரிகின்றது.
மேலும், ஒவ்வொரு பறக்கும் டாக்சியிலும் விமானி உடன் சேர்த்து சுமார் 5 பேர் வரை பயணிக்க முடியும். எனவே இந்த பறக்கும் டாக்சியில் வானில் பறக்கும்போது பிரைவேட் ஜெட்டில் பயணித்த அனுபவம் கிடைக்கும். அத்துடன், சொகுசான ரைடு அனபவமும் இதன் வாயிலாகக் கிடைக்கும்.
துபாயில் பறக்கும் டாக்சியைக் கொண்டு வரும் முயற்சியில் ஜோபி ஏவியேஷன் மட்டுமல்ல, முன்னணி இங்கிலாந்து நிறுவனமும் இணைந்து செயல்பட இருக்கின்றது. ஸ்கைபோர்ட்ஸ் நிறுவனமே அது ஆகும். இது பறக்கும் டாக்சிகளின் போக்குவரத்து உள்கட்டமைப்பை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ள இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
அதாவது, விமான நிலையம் போன்ற மினி நிறுத்தங்களை பறக்கும் டாக்சிகள் வந்து செல்வதற்கு ஏதுவாக அது உருவாக்கி தர இருக்கின்றது. இது தவிர பயணிகளுக்கான அத்தியாவசியே தேவைகள் மற்றும் டிக்கெட்டிங் போன்றவற்றிற்கான வசதிகளையும் ஸ்கைபோர்ட்ஸே ஏற்படுத்தி தர இருக்கின்றது என்பது தெரிய வந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக நாடுகள் பல அதிக முனைப்புடன் பறக்கும் டாக்சியை பயன்பாட்டிற்குக் கொண்டு முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த பறக்கும் வாகனங்கள் டாக்சியாக மட்டுமின்றி எதிர்காலத்தில் உயிர்காக்கும் காக்கும் ஆம்புலன்ஸ் வாகனங்களாகவும் பயன்பட இருக்கின்றன. இதுதவிர, டெலிவரி, மருத்துவம் போன்ற பிற முக்கிய சேவையிலும் அது ஈடுபடுத்தப்பட இருக்கின்றன.


Click it and Unblock the Notifications









