ஃபேன்ஸி நம்பருக்காக காசை தண்ணி மாதிரி செலவு செய்த கார் உரிமையாளர்! எவ்ளோனு தெரிஞ்சா அம்பானியே ஆடிப்போயிருவாரு!
ஃபேன்ஸி நம்பரை ஏலத்தில் எடுப்பதற்காக வாகன உரிமையாளர் ஒருவர் செலவிட்ட தொகை, அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மிகவும் விலை உயர்ந்த கார் மற்றும் பைக்குகளை வாங்குவதற்கு, கோடீஸ்வரர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். வாகனத்திற்கு மட்டுமல்லாது, அதில் பொருத்தப்படும் நம்பர் பிளேட்களுக்காகவும் கூட கோடி கோடியாக செலவழிப்பவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். ஃபேன்ஸி நம்பர்களுக்காக எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் செலவழிக்க அவர்கள் தயாராக உள்ளனர்.

சம்பந்தப்பட்ட எண்கள் அதிர்ஷ்டமானது என வாகன உரிமையாளர்கள் கருதுவது இதற்கு முதல் காரணம். தனித்துவமான எண்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும் என்பது இரண்டாவது காரணம். எனவேதான் ஏலத்தில் எவ்வளவு விலை கொடுத்தாவது, தங்களுக்கு பிடித்த தனித்துவமான ஃபேன்ஸி நம்பரை தங்கள் வாகனத்திற்கு வாங்கி விட பலரும் முயற்சி செய்கின்றனர்.

இந்த சூழலில், 'ஏஏ8' (AA8) என்ற வாகன நம்பர் பிளேட் தற்போது 35 மில்லியன் திர்ஹாம்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. திர்ஹாம் என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் கரன்ஸி ஆகும். துபாயில் நடைபெற்ற இந்த ஏலம் தற்போது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. கிட்டத்தட்ட 9.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இந்த 'ஏஏ8' என்ற வாகன நம்பர் பிளேட் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய மதிப்பில் கணக்கிட்டால் சுமார் சுமார் 73 கோடி ரூபாய் ஆகும். இந்த பணத்தில் ஏராளமான ரோல்ஸ் ராய்ஸ் கார்களையே வாங்கலாம். அப்படி இருக்கும்போது 'ஏஏ8' என்ற வாகன நம்பர் பிளேட்டிற்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகைக்கு 'ஏஏ8' நம்பர் பிளேட்டை வாங்கிய நபரை பற்றிய தகவல்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை. ஆனால் அவர் துபாயை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.

ஆனால் அவர் உலகையே திரும்பி பார்க்க வைத்து விட்டார். ஏனெனில் இது உலகில் மிகவும் விலை உயர்ந்த வாகன நம்பர் பிளேட்களில் ஒன்றாகும். ஆனால் இந்த ஏலத்தில் மிகவும் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரே ஒரு வாகன நம்பர் பிளேட் இது மட்டும் கிடையாது. இதனுடன் இன்னும் ஒரு சில வாகன நம்பர் பிளேட்களும் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளன.

எஃப்55 (F55), வி66 (V66) மற்றும் ஒய்66 (Y66) போன்ற வாகன நம்பர் பிளேட்களும் அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், எஃப்55 வாகன நம்பர் பிளேட் 4 மில்லியன் திர்ஹாம்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்திய மதிப்பில் கணக்கிட்டால் தோராயமாக 8.30 கோடி ரூபாய் ஆகும். மறுபக்கம் வி66 வாகன நம்பர் பிளேட்டும் 4 மில்லியன் திர்ஹாம்களுக்குதான் ஏலம் எடுக்கப்பட்டது.

அதே நேரத்தில் ஒய்66 வாகன நம்பர் பிளேட் 3.8 மில்லியன் திர்ஹாம்களுக்கு விற்பனை செய்யப்பட்டது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 7.91 கோடி ரூபாய் ஆகும். பொதுவாக துபாய் உலகின் பணக்கார நகரங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அங்கு நடைபெற்ற ஏலத்தில், வாகன நம்பர் பிளேட்கள் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.

ஆனால் துபாயில் மட்டுமல்லாது இந்தியாவிலும் கூட வாகன நம்பர் பிளேட்களுக்காக பெரிய தொகைகளை செலவழிக்க பலரும் தயாராக உள்ளனர். இந்தியாவை சேர்ந்த ஒருவர் சமீபத்தில், 'CH 01 CJ 0001' என்ற ஃபேன்ஸி பதிவு எண்ணை ஏலத்தில் எடுத்தார். இதற்காக 15 லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை அவர் செலவிட்டார்.

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து ஃபேன்ஸி பதிவு எண்ணை அவர் வாங்கியுள்ளார். இந்த ஸ்கூட்டரின் விலையே வெறும் 71 ஆயிரம் ரூபாய் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்த ஃபேன்ஸி நம்பரை ஏலத்தில் எடுத்தவரின் பெயர் பிரிஜ் மோகன். இவருக்கு தற்போது 42 வயதாகிறது. இவர் விளம்பர நிறுவனம் நடத்தி கொண்டுள்ளார்.

சண்டிகர் பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் சமீபத்தில் நடத்திய ஏலத்தில்தான் பிரிஜ் மோகன் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து ஃபேன்ஸி நம்பரை வாங்கினார். இந்த செய்தி சமூக வலை தளங்களில் காட்டு தீயாய் பரவிய நிலையில் தற்போது இதை காட்டிலும் பல மடங்கு அதிக தொகை கொடுத்து நம்பர் பிளேட்களை ஏலத்தில் எடுத்துள்ள செய்தி வெளியாகியுள்ளது.

இதற்கிடையே பிரிஜ் மோகன் ஆரம்பத்தில் இந்த ஃபேன்ஸி நம்பரை தனது ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் பயன்படுத்தவுள்ளார். ஆனால் அவர் நடப்பாண்டு தீபாவளி பண்டிகையின்போது, புதிய கார் ஒன்றை வாங்க திட்டமிட்டுள்ளார். புதிய காரை வாங்கியவுடன், இந்த ஃபேன்ஸி பதிவு எண் அதற்கு மாற்றப்பட்டு விடும் என கூறப்படுகிறது. தனது எதிர்கால காருக்காக முன்கூட்டியே ஃபேன்ஸி பதிவு எண்ணை அவர் 'ரிசர்வ்' செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications








