நம்ம ஊர் போலீஸார் எப்போ இந்த காரை எல்லாம் பார்ப்பார்களோ... துபாய் போலீஸ் படையில் விலைமிக்க ஆடி எலக்ட்ரிக் கார்
ஆடி ஆர்.எஸ் இ-ட்ரான் ஜிடி (Audi RS e-tron GT) எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் துபாய் போலீஸாரின் ரோந்து வாகன படையில் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்தும், இந்த ஆடி எலக்ட்ரிக் கார் குறித்தும் விரிவான தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.
துபாய் என்றாலே நமது நினைவிற்கு சட்டென்று உதிப்பது லக்சரி தரத்திலான வாழ்க்கையும், பெரிய பெரிய அடுக்குமாடி கட்டிடங்களும் தான். இதனால் துபாய் போலீஸார் விலைமிக்க கார்களை தங்களது ரோந்து பணிகளுக்கும், மற்ற அலுவலக பணிகளுக்கும் பயன்படுத்துவதில் எந்த ஆச்சிரியமும் இல்லை. துபாய் போலீஸாரிடம் பல்வேறு சூப்பர் கார்களும், லக்சரி கார்களும் உள்ளன.

இந்த வரிசையில் புதியதாக இணைந்திருப்பது, ஆடி ஆர்.எஸ் இ-ட்ரான் ஜிடி எலக்ட்ரிக் கார் ஆகும். துபாய் போலீஸாரின் படையில் இணைந்துள்ள ஆடி ஆர்.எஸ் இ-ட்ரான் ஜிடி கார் போலீஸ் வாகனம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக வெள்ளை மற்றும் பச்சை நிற வ்ராப்-ஆல் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த போலீஸ் வ்ராப் ஒட்டப்பட்ட ஆடி ஆர்.எஸ் இ-ட்ரான் ஜிடி கார் முதன்முதலாக துபாயில் நடைபெற்றுள்ள அரேபியன் டிராவல் மார்கெட் கலந்தாய்வு கூட்டத்தில் பொது மக்களின் பார்வைக்கு நிறுத்தப்பட்டுள்ளது.
துபாய் போலீஸாரின் பயன்பாட்டிற்காக கொண்டுவரப்பட்டுள்ள முதல் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் இந்த ஆடி ஆர்.எஸ் இ-ட்ரான் ஜிடி ஆகும். ஆனால் எலக்ட்ரிக் கார் என்று பார்த்தால், ஏற்கனவே ஹாங்கி இ-எச்.எஸ்9 எலக்ட்ரிக் எஸ்யூவி கார் துபாய் போலீஸாரிடம் உள்ளது. சீன எலக்ட்ரிக் காரான இது கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் துபாய் போலீஸாரின் படையில் முதல் எலக்ட்ரிக் காராக இணைக்கப்பட்டது.
Dubai Police showcases its new addition to the fleet of luxury patrols: the Audi RS e-tron GT electric car. Catch a glimpse of this impressive vehicle at the #ATMDubai 2023, alongside 12 innovative services @DWTC. pic.twitter.com/sFJFWjHH9D
— Dubai Policeشرطة دبي (@DubaiPoliceHQ) May 1, 2023
தற்போது 2வது எலக்ட்ரிக் காராக இணைந்துள்ள ஆடி இ-ட்ரான் ஜிடி காருக்கு '28' என்ற பதிவெண் வழங்கப்பட்டுள்ளது. துபாயில் இந்த 2023ஆம் ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள 2023 ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்றம் கூட்டமைப்பு (COP28)-ஐ நினைவுக்கூறும் விதமாக இந்த 28 என்ற பதிவெண் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஆடி இ-ட்ரான் ஜிடி எலக்ட்ரிக் கார் விற்பனையில் உள்ளது. இது வழக்கமான ஆடி இ-ட்ரான் எலக்ட்ரிக் காரின் செயல்திறன்மிக்க ஜிடி வெர்சனாக விளங்குகிறது.
இந்த எலக்ட்ரிக் காரில் வழங்கப்படும் இரட்டை எலக்ட்ரிக் மோட்டார் செட்-அப்பின் மூலமாக அதிகப்பட்சமாக 637 பிஎச்பி மற்றும் 830 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெற முடியும். 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 3.3 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த எலக்ட்ரிக் காரின் டாப்-ஸ்பீடு 250kmph ஆகும். இந்த எலக்ட்ரிக் காரில் 84kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 501கிமீ தொலைவிற்கு பயணிக்க முடியும்.

துபாய் போலீஸாரிடம் உள்ள மற்ற பிரபலமான லக்சரி கார்கள் என்று பார்த்தால், ஆடி ஆர்8, லம்போர்கினி உருஸ், அஸ்டன் மார்டீன் வண்டேஜ், புகாட்டி வெய்ரோன், மெர்சிடிஸ்-பென்ஸ் எஸ்.எல்.எஸ் ஏஎம்ஜி, பிஎம்டபிள்யூ ஐ8, ஃபெராரி எஃப்.எஃப், மெக்லாரன் எம்பி4-12சி, லெக்ஸஸ் ஆர்சி எஃப், நிஸான் ஜிடி-ஆர், மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜி63 உள்ளிட்டவற்றை சொல்லலாம். துபாய் போலீஸார் தங்களிடம் உள்ள கார்களில் 25%-ஐ 2030ஆம் ஆண்டிற்கு உள்ளாக ஹைப்ரீட் அல்லது எலக்ட்ரிக் காராக மாற்ற திட்டமிட்டுள்ளனர்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மேற்கூறப்பட்ட லக்சரி கார்களை வைத்திருக்கும் துபாய் போலீஸாரால் ஆடி இ-ட்ரான் ஜிடி எலக்ட்ரிக் காரை வாங்க முடியாமல் போனால் தான் ஆச்சிரியம். அதுவுமில்லாமல், ஆடி இ-ட்ரான் ஜிடி ஆனது ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் அளவிற்கு விலைமிக்கது கிடையாது. இத்தகைய கார்கள் எல்லாம் நம் நாட்டு போலீஸாரின் பயன்பாட்டிற்கு வருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகி விடும்.


Click it and Unblock the Notifications