நம்ம ஊர் போலீசாருக்கு எல்லாம் இது கனவு! வரிசையா நிற்க வைத்து வெறுப்பேற்றுகிறார்களே!!
துபாய் (Dubai), குறுகிய காலத்தில் பெரிய பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ள நகரம். வெறும் பாலைவன மணலில் உருவான பொக்கிஷம் என அரபுக்காரர்கள் சொல்வார்கள். அந்த அளவிற்கு லக்சரியான வாழ்க்கையை வழங்கக்கூடிய நகரமாக ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் துபாய் உள்ளது. எந்த அளவிற்கு லக்சரியான வாழ்க்கை தரம் என்றால், துபாயில் அதிவேகமான கார்களில் யாரேனும் குற்ற செயல்களில் ஈடுப்பட்டால், அவர்களை பிடிப்பதற்கு போலீசார் அதனை காட்டிலும் பவர்ஃபுல்லான காரில் துரத்தி செல்வர்.
இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால், துபாய் போலீசாரின் ரோந்து படையில் புதியதாக டொயோட்டா லேண்ட் க்ரூஸர் (Toyota Land Cruiser) என்கிற பவர்ஃபுல்லான கார்கள் இணைந்துள்ளன. ஒன்றல்ல, இரண்டல்ல சுமார் 200க்கும் அதிகமான லேண்ட் க்ரூஸர் கார்கள் துபாய் போலீசாரால் வாங்கப்பட்டுள்ளன. இவற்றுள் சில லேண்ட் க்ரூஸர் கார்களை ஒன்றாக நிற்க வைத்து ட்ரோன் கேமராவில் எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மற்றொரு போட்டோவில், துபாயின் சுட்டெரிக்கும் வெயிலில் லேண்ட் க்ரூஸர் கார்கள் வரிசையாக கம்பீரமாக நிற்பதை பார்க்க முடிகிறது. இந்த படங்களை வெளியிட்டு இருப்பது வேறு யாருமில்லை... துபாய் போலீசாரின் தலைமையகம் ஆகும். துபாய் போலீசாரின் ரோந்து வாகன படையில் இருப்பவை எல்லாமே இவ்வாறான விலையுயர்ந்த கார்கள் ஆகும்.
இன்னும் சொல்லப்போனால், எங்களுக்கு தெரிந்தவரையில், துபாய் போலீசார் வாங்கியுள்ள விலை குறைவான கார், டொயோட்டா லேண்ட் க்ரூஸர் ஆகும். ஏனெனில், இதற்கு முன்னர் லம்போர்கினி, ஃபெராரி கார்களை எல்லாம் துபாய் போலீசார் வாங்குவதை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அவற்றுடன் ஒப்பிடுகையில் லேண்ட் க்ரூஸர் சற்று விலை குறைவான கார் ஆகும்.

துபாயில் செயல்படும் அல்-ஃபுதைம் மோட்டார்ஸ் நிறுவனத்தால் இந்த 200க்கும் மேற்பட்ட லேண்ட் க்ரூஸர் கார்களை துபாய் போலீசார் வாங்கியுள்ளனர். இவ்வாறான விலைமிக்க கார்களை போலீசாரின் பயன்பாட்டிற்காக துபாய் அரசாங்கம் வாங்குவதற்கு காரணம், குற்ற செயல்களில் ஈடுப்படுவோரை எளிதாக பிடிப்பதற்கு மட்டுமின்றி, துபாய்க்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதும் ஆகும்.
தற்போதும் கூட, துபாய் போலீசாரின் பாதுகாப்பு ரோந்து படையில் சேர்க்கப்பட்டுள்ள இந்த 200க்கும் அதிகமான லேண்ட் க்ரூஸர் கார்களுள் பெரும்பாலானவை சுற்றுலா பயணிகள் அதிகமாக கூடும் இடங்களில் போலீசாரால் பயன்படுத்தப்பட உள்ளன. தற்போது புதியதாக வாங்கப்பட்டுள்ள லேண்ட் க்ரூஸர் கார்களில் அதிநவீன தொழிற்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளதாக துபாயின் துணை முதன்மை கமெண்டர் தெரிவித்துள்ளார்.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் காரை பற்றி சொல்ல வேண்டுமென்றால், லம்போர்கினி, ஃபெராரி கார்கள் அளவிற்கு இல்லையென்றாலும், இந்தியாவில் டொயோட்டா விற்பனை செய்யும் மிக விலையுயர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் டீசல் என்ஜின் உடன் கிடைக்கும் லேண்ட் க்ரூஸர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.2.10 கோடியாக உள்ளது. ஆனால், துபாயில் இந்திய ரூபாய் மதிப்பில் வெறும் ரூ.55 லட்சம் மட்டுமே ஆகும்.
3.5 லிட்டர் என்ஜின் மற்றும் 4.0 லிட்டர் என்ஜின் ஆப்ஷன்களில் இந்த டொயோட்டா கார் துபாயில் கிடைக்கிறது. அதிகப்பட்சமாக, இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.95 லட்சம் வரையிலான விலையில் அந்த நாட்டில் லேண்ட் க்ரூஸர் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் இசட்.எக்ஸ் என்கிற வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும் இந்த கார் துபாயில் 3 விதமான வேரியண்ட்டில் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி, லேண்ட் க்ரூஸர் ஜிஆர்-ஸ்போர்ட் வெர்சன் மற்றும் பிளாக் எடிசன் கார்களும் அங்கு விற்பனை செய்யப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், துபாய் போலீசாரின் மற்ற விலையுயர்ந்த கார்களுடன் ஒப்பிடுகையில், டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. ஆனால், அதற்காக இந்த டொயோட்டா காரின் ஆற்றலை குறைந்து மதிப்பிட வேண்டாம். மேலும், உலகளவில் மக்களால் அதிகம் வாங்கப்படும் நம்பிக்கைக்குரிய காராக லேண்ட் க்ரூஸர் விளங்குவதையும் மறந்துவிட வேண்டாம்.


Click it and Unblock the Notifications









