துபாயில் ரெட் சிக்னலுக்கு நிற்காமல் சென்றால், சொத்தையே எழுதி வைக்கனும்!! அபராதத்திற்கு மேல் அபராதம்
துபாயில் போக்குவரத்தை மதிக்காமல் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகை அதிரடியாக பல லட்சங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆம் சரியாக தான் படித்துள்ளீர்கள்... பல லட்சங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. எந்தெந்த விதிமீறல்களுக்கு எவ்வளவு அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ள என்பது குறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
துபாய் என்றவுடன் பளபளப்பான அடுக்குமாடி கட்டிடங்களும், லக்சரி வாழ்க்கையும், அதற்கு மத்தியில் நிலவும் மத்திய கிழக்கு நாடுகளுக்கே உண்டான வெப்பமும் தான் முதலில் நம் ஞாபகத்திற்கு வரும். ஆனால், இந்த நாட்டில் போக்குவரத்து விதிமீறல்கள் உள்ளிட்டவற்றிற்காக விதிக்கப்படும் அபராதங்களும் அதிகப்படியானதாக இருக்கும் என்பது துபாய்க்கு சென்றவர்களுக்கு தெரிந்திருக்கும்.

குறிப்பாக, போக்குவரத்து விதிமீறல்களை தடுக்க அதிக தொகையில் அபராதம் பெறப்படும் நாடுகளுள் துபாயும் ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், துபாயில் கடந்த ஜூலை 6ஆம் தேதி முதல் திருத்தப்பட்ட போக்குவரத்து விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன்படி, சிவப்பு சிக்னலுக்கு நிற்காமல் செல்வது மற்றும் ஆக்ரோஷமாக வாகன ஓட்டுவது மிகவும் தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த விதிமீறல்களில் ஈடுப்படுவோர்க்கு விதிக்கப்படும் அபராதங்களும் அதிரடியாக துபாய் நாட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளன. திருத்தப்பட்டுள்ள விதிகளின்படி, துபாயில் இனி சாலையில் சிவப்பு சிக்னலுக்கு நிற்காமல் செல்வோர் 50,000 திர்கமை அபராதமாக செலுத்த வேண்டும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் ரூ.11 லட்சத்திற்கும் அதிகமாகும்.

அதேபோல், பாதசாரிகள் நடந்து செல்லும் நடைப்பாதையில் வாகனம் ஓட்டினாலும் 50,000 திர்கம் அபராதம் ஆகும். இதுவாவது பரவாயில்லை, போலீஸாரின் அனுமதியின்றி பொது சாலையில் ரேஸ்களை மேற்கொண்டால் 1 லட்சம் திர்கமை (ரூ.22 லட்சத்திற்கும் அதிகம்) செலுத்த வேண்டியிருக்கும். ரூ.22 லட்சத்திற்கும் அதிகமான அபராதத்தை செலுத்துவது மட்டுமின்றி, இந்த விதிமீறலில் உட்படுத்தப்பட்ட வாகனமும் போலீஸாரால் பறிமுதல் செய்யப்படுமாம்.
வெளிநாட்டினர் கனரக லாரியை சிவப்பு சிக்னலில் நிறுத்தாமல் சென்றால், அபராதத்தை செலுத்துவதுடன், உடனடியாக அவர் துபாயை விட்டு வெளியேற்றப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பை மீறி வாகனம் ஓட்டினாலோ அல்லது அதிக ஒலி இரைச்சலை ஏற்படுத்தும் விதமாக வாகனத்தை சட்டத்திற்கு விரோதமாக மாடிஃபை செய்தாலோ அந்த வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்துவிடுவர்.

போலி வாகன பதிவெண்ணை பொருத்துவது, மற்றவர்களை பயமுறுத்தும் வகையில் ஆக்ரோஷமாக வாகனம் ஓட்டுவது, அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக ஜன்னல் கண்ணாடிகளை டிண்ட் செய்வது (கருப்பாக்குவது), அனுமதி பெறாமல் வாகனத்தின் முன்பக்க விண்ட்ஷீல்டை டிண்ட் செய்வது, போலீஸ் வாகனத்துடன் மோதி சேதமடைய செய்வது மற்றும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களால் வாகன இயக்கப்படுவது உள்ளிட்ட குற்றங்களுக்கு 6,000 திர்கம் (ரூ.1.35 லட்சம்) அபராதம் ஆகும்.
அபராதத்தை செலுத்தும் வரையில், இந்த போக்குவரத்து விதிமீறல்களில் உட்படுத்தப்பட்ட வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்துவிடுவர். இந்த குற்றங்களுக்காக அபராதத்தை செலுத்தாமல், போலீஸாரிடம் இருந்து தப்பித்து செல்ல முயன்றால் அதற்கு கூடுதலாக ரூ.1.35 லட்சத்தை அபராதமாக செலுத்த வேண்டியிருக்கும். ஏற்கனவே கூறியதுபோல், துபாய் நாட்டில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான இந்த புதிய அபராதங்கள் கடந்த ஜூலை 6ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்த செய்தியில் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருப்பதற்கு அர்த்தம் என்னவென்றால், அபராத தொகையை செலுத்தும் வரையில் வாகனம் போலீஸாரின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதாகும். நம் இந்தியாவிலும் இவ்வாறுதான் அபராதம் செலுத்தும் வரையில் வாகனத்தை போலீஸார் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பர். ஆனால் நம் நாட்டில் இவ்வளவு லட்சங்களில் அபராதங்கள் கிடையாது.


Click it and Unblock the Notifications









