இத்தாலி நாட்டு நிறுவனத்துக்கு 200 ஏக்கர் நிலத்தை இலவசமாக கொடுக்கும் யோகி ஆதித்யநாத் அரசாங்கம்! ஏன் தெரியுமா?
உலக புகழ்பெற்ற பைக் உற்பத்தி நிறுவனம் ஒன்றிற்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை யோகி ஆதித்யநாத் அரசாங்கம் இலவசமாக வாரி வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இத்தாலி நாட்டைச் சேர்ந்த முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் டுகாட்டி (Ducati). இந்த நிறுவனத்திற்கே உபி அரசாங்கம் நிலத்தை இலவசமாக வழங்கி இருக்கின்றது. சுமார் 200 ஏக்கர் நிலமே வழங்கப்பட்டு இருக்கின்றது. யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில்துறை மேம்பாட்டு ஆணையம் (YEIDA)-தான் டுகாட்டிக்கு 200 ஏக்கர் நிலத்தை இலவசமாக வழங்கி உள்ளது.
பிரீமியம் மற்றும் அதிக திறனை வெளியேற்றக் கூடிய மோட்டார்சைக்கிளை தயாரித்துக் கொண்டிருக்கும் டுகாட்டி நிறுவனம், உத்தரபிரதேசத்தில் வாகனங்களுக்கான பந்தய தடம் (ரேஸ் டிராக்) மற்றும் பயிற்சி மையத்தை உருவாக்க இருப்பதாகக் கூறப்படுகின்றது. இதை அமைக்கவே உபி அரசாங்கம் டுகாட்டி நிறுவனத்திற்கு இலவசமாக 200 ஏக்கர் இடத்தை வழங்கி இருக்கின்றது.

இந்த பந்தய தடம் உருவாக்கப்படும் எனில், அதுவே நாட்டின் முதல் மோட்டார்சைக்கிள்களுக்கான பிரத்யேக ரேசிங் டிராக்காக இருக்கும் என யெய்டா தெரிவித்து இருக்கின்றது. இதுதவிர, இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பிரிவு வளர்ச்சி காணவும் இந்த ரேஸ் டிராக் பெரும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது.
இந்த மாதிரியான கருத்துக்களின் அடிப்படையிலேயே டுகாட்டிக்கு இலவசமாக இடம் ஒதுக்கப்பட்டு இருக்கின்றது. ஒதுக்கப்பட்ட நிலமானது கிரேட்டர் நொய்டாவில் உள்ள செக்டார் 22 எஃப் பகுதியில் அமைந்திருப்பதாகக் கூறப்படுகின்றது. மேலும், நிறுவத்திற்காக ஒதுக்கப்பட்டு இருக்கும் நிலம், வழக்குகள் எதுவும் இல்லாத, ஏற்கனவே மக்களிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட இடம் என்பதையும் யெய்டா அமைப்பின் தலைவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆகையால், புதிய ரேஸ் டிராக் அமைய எந்த தடையும் இருக்காது என தெரிகின்றது. இந்த பகுதியை இணைக்கும் வகையில் வரவிருக்கும் மெட்ரோ ரயில் திட்டம் இருப்பதாகக் கூறப்படுகின்றது. மேலும், இதன் அருகாமையிலேயே புதிய ஜெவார் சர்வதேச விமான நிலையமும் அமைய இருப்பது அதற்கு கூடுதல் பிளஸ்ஸாக அமைந்துள்ளது.
ஆகையால், சர்வதேச அளவில் பார்வையாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் வந்து செல்ல ஏதுவான ரேஸ் டிராக்காகவே புதிய ரேஸ் டிராக் இருக்கும். அதேவேளையில், டுகாட்டி நிறுவனம் ரேஸ் டிராக்கை அமைக்க இருப்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. நிறுவனம், விரைவில் இதுகுறித்த தன்னுடைய முடிவை அறிவிக்கும் என நிறுவனம் சார்பில் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
தொடர்ந்து, யெய்டா மற்றும் டுகாட்டி அதிகாரிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள மோட்டோஜிபி பாரத் ரேஸ் குறித்தும் விவாதித்து வருவதாகவும் கூறப்படுகின்றது. உலகளவில் சிறந்த ரேஸ் டிராக்குகளை உருவாக்குவதில் கைதேர்ந்த நிறுவனமாக டுகாட்டி உள்ளது. மேலும் பந்தய நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் அனுபவமிக்க நிறுவனமாக டுகாட்டி காட்சியளிக்கின்றது.
இதனால்தான் அவர்களுக்கு இங்கு நிலம் வழங்கினோம் என யெய்டாவைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஏவி சிங் கூறியுள்ளார். இன்றைய நிலவரப்படி இந்தியாவில் மூன்று பந்தய தடங்களே உள்ளன. அதில் இரண்டு தமிழகத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது. சென்னையில், மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக்கும், கோயம்புத்தூரில் காரி மோட்டார் ஸ்பீட்வே ஆகியவைதான் அவை ஆகும்.
இதற்கு அடுத்தபடியாக கிரேட்டர் நொய்டாவில் புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் எனும் பந்தய தடமும் நாட்டில் செயல்பட்டு வருகிறது. இவையே இந்தியாவின் மிக முக்கியமான பந்தய தடங்கள் ஆகும். இவற்றுடனேயே விரைவில் நான்காவது புதிய ரேஸ் டிராக்காக டுகாட்டியின் பந்தய தடயம் இணையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் புதிய ரேஸ் டிராக்குகள் அமைவதனால், அந்த பிரிவு குறிப்பிட்ட வளர்ச்சியை நாட்டில் காணும். குறிப்பாக, இந்த துறை சார்ந்திருப்பவர்களுக்கு கூடுதல் ஊக்கமளிக்கவும் அது உதவியாக இருக்கும். மேலும், நாட்டில் அதிக அளவில் சர்வதேச அளவிலான பந்தய நிகழ்வுகளை நடப்பதற்கான சூழலையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.


Click it and Unblock the Notifications








