E10 பெட்ரோல் மீண்டும் கொண்டு வரலாமா? அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் முக்கிய பரிந்துரை!
நாடுமுழுவதும் E20 பெட்ரோல் பரவலாக்கப்பட்டு விட்ட நிலையில், E10 பெட்ரோலையும் ஒரு தேர்வாக வழங்க வேண்டும் என்ற முக்கிய யோசனையை மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அனந்த நாகேஸ்வரன் மற்றும் பொருளாதார விவகாரத் துறையின் ஆலோசகர் ஆகாஷ் பூஜாரி இணைந்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் எழுதி உள்ள கட்டுரையில் இந்த யோசனை தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக, E20 பெட்ரோல் தவிர்த்து, பழைய வாகனங்களுக்கு E10 பெட்ரோலையும் விற்பனை செய்யும் திட்டத்தை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

E20 பெட்ரோலுக்கு இணங்க வடிவமைக்கப்படாத பழைய வாகனங்களுக்கு இந்த புதிய E10 பெட்ரோல் தேர்வு வாகன உரிமையாளர்களின் கவலைகளை போக்குவதற்கான வாய்ப்பாக அமையும் என்று அவர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, E20 இணக்கமில்லாத 7.5 கோடி முதல் 8 கோடி இருசக்கர வாகனங்கள் இருப்பதாக நாகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று, பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட இதர கார் உள்ளிட்ட வாகனங்களும் இதில் அடங்குகின்றன.
அதாவது, E20 பெட்ரோல் விற்பனையுடன் சேர்த்து E10 பெட்ரோலையும் மற்றொரு தேர்வாக பெட்ரோல் நிலையங்களில் வழங்கலாம் என்பது அவரது கருத்தகாக முன்வைக்கப்பட்டுள்ளது. E20 குறித்து பழைய வாகன உரிமையாளர்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ள நிலையில், மத்திய தலைமை பொருளாதார ஆலோசகரின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும், எதிர்காலத்தில் E27, E30 போன்ற அதிக எத்தனால் கலப்பு பெட்ரோலை அறிமுகம் செய்வதற்கு முன்னதாக எத்தனாலை உற்பத்தி செய்வதற்கு தேவையான மக்காச்சோளம், அரிசி உள்ளிட்ட உணவு பயிர்கள் கால்நடை தீவனத்திற்கும் பயன்படுத்தப்படுவதால், மூலப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படுமா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறி இருக்கிறார்.
கடந்த ஜூலை மாதம் E0 அல்லது E10 பெட்ரோல் வகைக்கு திரும்புவது குறித்த திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது. E20 பெட்ரோலால் வாகன எஞ்சின்களில் அதிக பாதிப்பு ஏற்படாது என்றும் விளக்கம் அளித்திருந்தது. எனினும், பழைய வாகனங்களில் 2 முதல் 6 சதவீதம் வரை மைலேஜ் குறையவும், எஞ்சின் மற்றும் எரிபொருள் அமைப்பில் சில ரப்பர் பாகங்கள், கேஸ்கெட்டுகளை மாற்ற வேண்டி வரலாம் என்றும் மத்திய அரசு கூறியிருந்தது.
மேலும், E0, E10, E20 போன்ற எரிபொருள்களை தனித்தனியாக நாடுமுழுவதும் வினியோகம் செய்வதிலும் செலவு அதிகரிக்கும் என்று அரசு கூறியது. இதனால், மீண்டும் E10 கொண்டு வரப்படாது என்ற நிலை உள்ளது. ஆனால், E20 குறித்த வாகன உரிமையாளர்களின் கவலைக்கு அரசின் உயர்மட்ட பொருளாதார ஆலோசகரே E10 பெட்ரோலை மற்றொரு தேர்வாக வாகன ஓட்டிகளுக்கு வழங்குவதற்கு பரிசீலிக்க வேண்டும் என்று கூறி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Source: The Indian Express


Click it and Unblock the Notifications