E20 விவகாரத்தில் புதிய திருப்பம்... பழைய வாகனங்களுக்கு மீண்டும் E10 பெட்ரோல்? மத்திய அரசு ஆலோசனை!!
நாடுமுழுவதும் E20 பெட்ரோல் பயன்பாடு மீதான தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், பழைய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மீண்டும் E10 பெட்ரோல் வழங்குவது குறித்து மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் ஆரம்பகட்ட ஆலோசனைகளைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெட்ரோலில் கலக்கப்படும் எத்தனால் அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு, 20 சதவீதம் எத்தனால் கலப்புடன் கூடிய பெட்ரோல் E20 என்ற பெயரில் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2023ம் ஆண்டு முதல் E20 பெட்ரோலுக்கு இணைக்கமாக தயாரிக்கப்பட்ட வாகனங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டாலும், அதற்கு முன் தயாரிக்கப்பட்ட கோடிக்கணக்கான வாகனங்களின் எஞ்சின் மற்றும் எரிபொருள் அமைப்புகளில் பாதிப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. மைலேஜும் குறைவதாக புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.

இதனால், E20 பெட்ரோலுடன் சேர்த்து E0 மற்றும் E10 பெட்ரோலையும் வாகன ஓட்டிகளுக்கு மாற்றுத் தேர்வாக வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அண்மையில் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கூட E20 பெட்ரோலுக்கு இணக்கமில்லாமல் பயன்பாட்டில் இருக்கும் பல கோடிக்கணக்கான இருசக்கர வாகனங்களை கருத்திக்கொண்டு E10 பெட்ரோலையும் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்த சூழலில், E10 பெட்ரோலை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் ஆரம்பகட்ட ஆலோசனைகளை தொடங்கி உள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி கூறுகிறது. தற்போது இறுதி முடிவு எதுவும் இல்லாவிட்டாலும், இரண்டு விதமான பெட்ரோலை நாடு முழுவதும் எப்படி சேமித்து விநியோகிப்பது போன்ற தொழில்நுட்ப ரீதியிலான நடைமுறைகள் குறித்து ஆலோசனைகள் நடந்து வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
E20 பயன்பாட்டால் பழைய வாகனங்களின் எஞ்சின்களில் பாதிப்பு ஏற்படக்கூடும், பராமரிப்பு செலவும் அதிகரிக்கும் என்ற கவலை வாகன உரிமையாளர்களுக்கு ஏற்பட்டு உள்ளது. குறிப்பிட்ட பழைய வாகனங்களில் எரிபொருள் சிக்கனத்தில் 2 முதல் 6 சதவீதம் வரை குறையலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், E20 பயன்படுத்துவதால் பழைய வாகனங்களில் பெரிய அளவில் என்ஜின் சேதம் ஏற்படுகிறது என்பதற்கான உறுதியான ஆதாரம் இல்லை என்றும் அரசு விளக்கம் அளித்துள்ளது.
பெட்ரோல் கலவையில் எத்தனால் அளவு அதிகரிப்பது சுற்றுச்சூழல் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி சார்பை குறைப்பது போன்ற பல நோக்கங்களைக் கொண்டதாகவும் விளக்கம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், E10 பெட்ரோலை மீண்டும் கொண்டு வருவதால், E20 விற்பனையை பின்னுக்குத் தள்ளும் நோக்கம் அரசிடம் இருக்காது.
அதேநேரத்தில், பழைய கார் அல்லது பைக் வைத்திருப்பவர்களுக்கு தங்கள் வாகனத்துக்கு ஏற்ற எரிபொருளை தேர்வு செய்யும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக E10 காலகட்டத்தில் தயாரிக்கப்பட்டு அதற்கேற்ப வடிவமைக்கப்பட்ட பழைய இருசக்கர வாகனங்களுக்கு இது ஒரு நடைமுறை தீர்வாக இருக்கும்.
ஆனால், E10 மற்றும் E20 ஆகிய இரு வகை பெட்ரோலையும் ஒரே நேரத்தில் விற்பனை செய்ய வேண்டுமென்றால் எண்ணெய் நிறுவனங்களுக்கு தனி சேமிப்பு கிடங்குகள், போக்குவரத்து, கலவை மற்றும் விநியோக ஏற்பாடுகள் தேவைப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் நிலையங்களில் இதை செயல்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்று எண்ணெய் நிறுவனங்கள் கருதுகின்றன.
இந்த நிலையில், E20 குறித்த கவலை, புகார்களுக்கு தீர்வு கொடுக்கும் நோக்கில், E10 பெட்ரோலை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் ஆரம்ப கட்ட ஆலோசனைகள் தொடங்கி உள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது. ஆனால், அரசு தரப்பில் இருந்து இதுகுறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.
Source: The Indian Express


Click it and Unblock the Notifications