கசக்கும் சர்க்கரை விலை... தமிழ்நாட்டில் ரூ.67 வரை உயர்வு! E20 பெட்ரோல்தான் காரணமா?
பெட்ரோலில் எத்தனால் கலப்பு 20 சதவீதமாக உயர்த்தி E20 பெட்ரோல் நாடுமுழுவதும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டம் E20 பெட்ரோல் குறித்து வாகன உரிமையாளர்கள் மத்தியில் புகார்களும், விவாதமும் எழுந்துள்ள நிலையில், தற்போது உயர்ந்து வரும் சர்க்கரை விலையும் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இதற்கு காரணம், பெட்ரோலில் பயன்படுத்தப்படும் எத்தனால் தயாரிப்பில் கரும்பு மற்றும் சர்க்கரை சார்ந்த மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் E20 பெட்ரோலுக்காக கரும்பு அதிக அளவில் பயன்படுத்தப்படுவது சர்க்கரை விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சர்க்கரை விலை உயர்வு
தமிழ்நாட்டில் சில சந்தைகளில் சர்க்கரை விலை கிலோ ரூ.67 வரை உயர்ந்துள்ளதாக சர்க்கரை விலை கண்காணிப்பு அமைப்பின் தரவுகள் தெரிவிக்கிறது. கடந்த மாதம் சுமார் ரூ.45க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை, தற்போது ரூ.67 வரை சென்றுள்ளதாக அந்த தரவுகள் மூலமாக தெரிய வருகிறது. இது சில்லறை சந்தையில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய உயர்வாக பார்க்கப்படுகிறது. உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் சர்க்கரை விநியோகத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தம் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பல மாநிலங்களில் சர்க்கரை அளவு இதுவரை இல்லாத அளவுக்கு உச்சத்தை தொட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அந்த மாநிலங்களில் உள்ள சில சர்க்கரை ஆலைகள் பண்டிகை காலத்தில் ஏற்படும் தேவையை கருத்தில்கொண்டு அதிக அளவில் சர்க்கரையை பதுக்கி கையிருப்பில் வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்திய அளவில் என்ன நிலை?
தமிழ்நாட்டின் ரூ.67 விலையை இந்தியாவின் சராசரி விலையுடன் குழப்பக்கூடாது. மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் தகவல்படி, நாடு முழுவதும் சராசரி சில்லறை சர்க்கரை விலை ஜூலை 20ல் கிலோ ரூ.48.18 ஆக இருந்தது. ஆகஸ்ட் 20ல் அது ரூ.55.70 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கிறது. இதன்மூலமாக நாடு முழுவதும் சர்க்கரை விலை உயர்ந்திருப்பது உறுதியாகிறது. ஆனால் தமிழ்நாட்டில் சில சந்தைகளில் ஏற்பட்டுள்ள உயர்வு தேசிய சராசரியைவிட அதிகமாக உள்ளது.

உற்பத்தி குறைந்தது ஏன்?
சர்க்கரை விலை உயர்வுக்கு உள்நாட்டு உற்பத்தியும் முக்கிய காரணமாக உள்ளது. நடப்பு சர்க்கரை பருவத்தில் ஆரம்பமாக 343 லட்சம் டன் உற்பத்தி இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போது அந்த மதிப்பீடு சுமார் 306 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. அதாவது ஆரம்ப மதிப்பீட்டுடன் ஒப்பிடும்போது சுமார் 11 சதவீதம் குறைவு.
கரும்பை பாதித்த ரெட் ரூட், டாப் போரர் போன்ற நோய் தாக்கம் மற்றும் அதிகப்படியான மழையால் ஏற்பட்ட விவசாய நிலங்களில் நீர்த்தேக்கம் உள்ளிட்ட காரணங்களால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனுடன் பண்டிகை கால தேவையும் அதிகரித்துள்ளது. உலகளாவிய சர்க்கரை வினியோகத்திலும் இறுக்கமான நிலை இருப்பதாக அரசு கூறியுள்ளது. எனினும், E20 பெட்ரோலுக்கு அதிக அளவில் எத்தனால் தேவைப்படுவதால், கரும்புக்கான தேவை அதிகரித்துள்ளதால், அது சர்க்கரை விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்ற கேள்வி பொதுவாக எழுந்துள்ளது.

E20 காரணமா?
E20 பெட்ரோலில் 20 சதவீதம் அளவுக்கு எத்தனால் கலக்கப்படுகிறது. இந்தியாவில் எத்தனால் தயாரிப்புக்கு கரும்பு மட்டுமின்றி சோளம் உள்ளிட்ட தானியங்களும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், கரும்பு மற்றும் சர்க்கரை தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருட்கள் E20 பெட்ரோலுக்கு தேவையான எத்தனால் உற்பத்திக்கு திருப்பி விடப்படுவதால் சர்க்கரை உற்பத்தி குறைந்து விலை உயர்ந்ததாக சில தரப்பினர் கூறுகின்றனர். இதை அடிப்படையாகக் கொண்டு E20 கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
ஆனால் மத்திய அரசு இந்த தொடர்பை அறவே மறுத்து வருகிறது. தற்போதைய சர்க்கரை விலை உயர்வுக்கு எத்தனால் உற்பத்திக்காக சர்க்கரை மூலப்பொருட்கள் மாற்றிவிடப்படுவதாக சொல்வதே தவறு என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும், எத்தனால் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் சர்க்கரை உற்பத்தியிலிருந்து மாற்றிவிடப்படும் அளவு 2022-23ல் சுமார் 12 சதவீதமாக இருந்த நிலையில், 2025-26ல் சுமார் 9 சதவீதமாக குறைந்துள்ளதாகவும் அரசு கூறியுள்ளது. நாட்டில் உற்பத்தியாகும் எத்தனால் முக்கால்வாசி அளவு தற்போது தானியங்களில், குறிப்பாக சோளத்தில் இருந்து உற்பத்தி வருகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, வாகனத் துறையில் E20 தொடர்பான மற்றொரு முக்கிய விவாதமும் தொடங்கியுள்ளது. பழைய இருசக்கர வாகனங்களுக்கு E10 போன்ற குறைந்த எத்தனால் கலவை கொண்ட பெட்ரோலை மீண்டும் வழங்குவது குறித்து மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கருத்து தெரிவித்துள்ளார். குறிப்பாக பழைய வாகனங்களின் எஞ்சின் இணக்கத்தன்மை மற்றும் பயன்பாட்டு சிக்கல்களை கருத்தில் கொண்டு இந்த E10 பெட்ரோல் அறிமுகம் செய்வது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார். இதுகுறித்து மத்திய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், E20 பெட்ரோல் மற்றும் சர்க்கரை வினியோகத்தில் பிரச்னைகள் ஏற்படாத வண்ணம் அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதுடன், சர்க்கரை விலையை கட்டுப்படுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சர்க்கரை கையிருப்பு வரம்புகள் குறைக்கப்பட்டுள்ளன. உள்நாட்டு வினியோகத்தை சீராக்கும் வகையில் 10 லட்சம் டன் சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. பண்டிகை கால தேவை அதிகரிக்கும் நிலையில் இந்த நடவடிக்கைகள் விலையை கட்டுப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, தமிழ்நாட்டில் சர்க்கரை விலை ரூ.67 வரை உயர்ந்திருப்பது உண்மை என்றாலும், இதற்கு E20 பெட்ரோல் மட்டுமே காரணம் என்று கூறுவது சரியாக இருக்காது. குறைந்த உற்பத்தி, கரும்பு பயிர் பாதிப்பு, வினியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள், பண்டிகை கால தேவை, கையிருப்பு மற்றும் சந்தை நடவடிக்கைகள் என பல காரணிகள் இணைந்து தற்போது விலை உயர்வை செயற்கையாக உருவாக்கியுள்ளதாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் E20 காரணமாக உணவு மற்றும் எரிபொருள் தேவைகளுக்கு இடையே உருவாகும் போட்டி குறித்து எழுந்துள்ள விவாதம், வரும் நாட்களில் இந்தியாவின் எத்தனால் கொள்கையில் முக்கியமானதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
