புதிய பெட்ரோலை களத்தில் இறக்கும் இந்தியா! இன்னும் ஒரு சில நாட்களில் வரப்போகுது! கலக்கத்தில் அரபு நாடுகள்!
10 சதவீதம் எத்தனால் (Ethanol) கலக்கப்பட்ட பெட்ரோல் (Petrol) விற்பனை செய்யும் இலக்கை இந்தியா அடைந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை இன்னும் ஒரு சில நாட்களில் அறிமுகம் செய்யும் முயற்சிகளில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலின் சப்ளை சோதனை அடிப்படையில் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி (Hardeep Singh Puri) தற்போது தெரிவித்துள்ளார். 2022ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் 10 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை (10 சதவீதம் எத்தனால், 90 சதவீதம் பெட்ரோல்) விற்பனை செய்ய வேண்டும் என்றுதான் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

ஆனால் இந்த இலக்கு, 2022ம் ஆண்டு ஜூன் மாதமே எட்டப்பட்டு விட்டது. இதை தொடர்ந்து 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை அறிமுகம் செய்யும் பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. ''சோதனை அடிப்படையில், இன்னும் ஒரு சில நாட்களில், குறிப்பிட்ட சந்தைகளில் இ20 (E20) எரிபொருள் கிடைக்கும்'' என பெட்ரோலிய துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இ20 என்பது, 80 சதவீதம் பெட்ரோலும், 20 சதவீதம் எத்தனாலும் கொண்ட எரிபொருள் ஆகும்.
கரும்பு போன்ற விவசாய பொருட்களில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. இதை பெட்ரோலுடன் கலந்து பயன்படுத்துவதன் மூலம், கச்சா எண்ணெய் தேவைக்காக வெளிநாடுகளை இந்தியா சார்ந்திருக்கும் நிலை குறையும். பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இந்தியாவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதில்லை. எனவே வெளிநாடுகளைதான் இந்தியா சார்ந்துள்ளது. இதற்காக இந்தியா அதிக தொகையை செலவு செய்ய வேண்டியுள்ளது. இது இந்தியாவின் பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
ஆனால் இந்த பிரச்னைகளுக்கு எல்லாம் எத்தனால் நல்ல தீர்வாக இருக்கும். அத்துடன் எத்தனால் சுற்றுச்சூழலுக்கும் நட்பானது. எனவே இந்தியா தனது சுற்றுச்சூழலை பாதுகாத்து கொள்வதற்கும் எத்தனால் உதவி செய்யும். டெல்லி, பீஹார், உத்தரகாண்ட், ஹிமாச்சல பிரதேசம், உத்தர பிரதேசம், ஹரியானா, மஹாராஷ்டிரா, கர்நாடகா, டாமன் டையூ மற்றும் தாத்ரா & நாகர் ஹவேலி ஆகிய 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை அறிமுகம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
முதலில் 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம்தான் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலுக்கான இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு முன்பாகவே இந்த இலக்கையும் இந்தியா எட்டவுள்ளது. முதற்கட்டமாக மேற்கண்ட 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 15 நகரங்களில் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் விற்பனை செய்யப்படவுள்ளது. இதை தொடர்ந்து படிப்படியாக நாடு முழுவதும் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோல் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
இதன் மூலம் இந்தியாவால் அந்நிய செலாவணியில் (Forex) 41,500 கோடி ரூபாய்க்கும் மேல் சேமிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வு 27 லட்சம் டன்கள் குறையும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கரும்பு போன்ற விவசாய பொருட்களில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுவதால், இந்தியாவின் விவசாயிகளுக்கும் இது நன்மையை ஏற்படுத்தும். இப்படி பல்வேறு நன்மைகள் இருப்பதால்தான், எத்தனாலை எரிபொருளாக பயன்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசு மிகவும் ஆர்வமாக உள்ளது.
இதுதவிர இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் (EV Charging Stations) மற்றும் சிஎன்ஜி (CNG) போன்ற மாற்று எரிபொருள் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சிகளிலும் மத்திய அரசு மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி வாகனங்களை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை உயரும். எனவே இந்த முயற்சியும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும், காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்துவதற்கும் உதவி செய்யும்.


Click it and Unblock the Notifications








