E20 பெட்ரோலுக்கு எதிராக முதல் போராட்டம்! நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி அறிவித்த டாக்ஸி ஓட்டுனர்கள்
இந்தியாவில் E20 பெட்ரோல் அமல்படுத்தப்பட்டதிலிருந்து வாகன ஓட்டிகள் மத்தியில் மைலேஜ் குறைவு, பழைய வாகனங்களின் செயல்திறன் மற்றும் பராமரிப்பு செலவு அதிகரிப்பு போன்ற விவாதங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இதுவரை இந்த எதிர்ப்புகள் பெரும்பாலும் சமூக வலைதளங்கள், வாகன உரிமையாளர்களின் தனிப்பட்ட புகார்கள் மற்றும் அரசியல் விவாதங்களாகவே இருக்கின்றன. ஆனால் தற்போது முதல் முறையாக, நாடு முழுவதும் உள்ள வர்த்தக வாகன ஓட்டுநர்களை ஒன்றிணைத்து, நாடாளுமன்றத்தை நோக்கி பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்று டெல்லி டாக்ஸி மற்றும் சுற்றுலா போக்குவரத்து சங்கம் அறிவித்துள்ளது.
வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்த உள்ளதாக இந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்தப் பேரணியில் டெல்லி மட்டுமின்றி பல மாநிலங்களைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர்கள், சுற்றுலா வாகன உரிமையாளர்கள், லாரி உரிமையாளர்கள் மற்றும் வர்த்தக வாகனப் போக்குவரத்து சங்கங்களும் பங்கேற்க உள்ளதாக அந்த சங்கத் தலைவர் சஞ்சய் சம்ராட் தெரிவித்துள்ளார். E20 பெட்ரோல் தொடர்பாக இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஆய்வு செய்ய வேண்டும்
இந்தப் பேரணியின் முக்கிய கோரிக்கையாக E20 பெட்ரோல் திட்டத்தை புதிய நிபுணர் குழுவின் மூலம் அறிவியல் பூர்வமாக மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்று முன்வைக்கப்பட்டுள்ளது. வாகன உரிமையாளர்கள், நுகர்வோர், ஆட்டோமொபைல் நிறுவனங்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் போக்குவரத்து துறையினருடன் விரிவான ஆலோசனை நடத்தாமல் இந்தத் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டதாக சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், 2015-க்கு முன்பு தயாரிக்கப்பட்ட பல வாகனங்கள் E20 பெட்ரோலுக்காக வடிவமைக்கப்படவில்லை என்றும், அதனால் மைலேஜ் குறைவது, பராமரிப்பு செலவு அதிகரிப்பது மற்றும் வாகனங்களின் செயல்திறன் பாதிக்கப்படுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளது. அதோடு, E20 பெட்ரோலுடன் சேர்த்து பொதுமக்களின் விருப்பத்திற்கேற்ப சுத்தமான பெட்ரோலையும் (Pure Petrol/E0) விற்பனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளுடன் போராட்டம்
E20 பெட்ரோல் மட்டுமல்லாமல், டெல்லியில் பழைய BS-IV டீசல் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கை, அதிகரித்து வரும் சுங்கக் கட்டணங்கள், சுற்றுலா வாகனங்களுக்கு 80 கி.மீ. வேக வரம்பு மற்றும் வாகனங்களில் கட்டாயமாக பொருத்தப்பட்டுள்ள வாகன கண்காணிப்பு சாதனங்கள் (VLTD) உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளையும் இந்தப் பேரணியில் எழுப்ப உள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. இதனால், இது E20-க்கு எதிரான போராட்டம் மட்டுமல்லாமல், வர்த்தக போக்குவரத்து துறையின் பல்வேறு கோரிக்கைகளையும் உள்ளடக்கியதாக மாறியுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியாகும் சில நாட்களுக்கு முன்பே, E20 பெட்ரோல் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் கேள்விகள் எழுந்தன. போக்குவரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, E20-க்கு பொருந்தாத பழைய வாகனங்களின் உரிமையாளர்களுக்கு மைலேஜ் குறையக்கூடும் என்ற தகவலை அரசு ஏன் முன்கூட்டியே தெளிவாக தெரிவிக்கவில்லை என்று அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டது. இதன் மூலம் E20 திட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் வெளிப்படைத்தன்மை குறித்த விவாதம் தேசிய அளவில் தீவிரமடைந்துள்ளது.
அரசின் நிலைப்பாடு
மறுபுறம், மத்திய அரசு E20 திட்டத்தில் இருந்து பின்வாங்கும் எண்ணம் இல்லை என்பதை மிகவும் தெளிவாக தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் அண்மையில் அளிக்கப்பட்ட பதிலில், E20 பெட்ரோல் விற்பனையை திரும்பப் பெறும் திட்டம் எதுவும் இல்லை என்றும், மீண்டும் நாடு முழுவதும் சுத்தமான பெட்ரோல் (Pure Petrol/E0) விற்பனையை தொடங்கும் திட்டமும் தற்போது பரிசீலனையில் இல்லை என்றும் அரசு விளக்கமளித்துள்ளது. எரிசக்தி இறக்குமதியை குறைப்பது, கரும்பு உள்ளிட்ட விவசாய விளைபொருட்களுக்கு கூடுதல் சந்தையை உருவாக்குவது மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைப்பது ஆகியவை E20 திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக இருப்பதால், இந்தக் கொள்கையை தொடர்வதில் அரசு உறுதியாக உள்ளது.
மைலேஜ் குறைவு பிரச்னை
அதே நேரத்தில், E20 பெட்ரோல் பயன்படுத்தும்போது E10-க்கு வடிவமைக்கப்பட்ட சில பழைய வாகனங்களில் 3 முதல் 5 சதவீதம் வரை மைலேஜ் குறைய வாய்ப்புள்ளது என்பதையும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது. இருப்பினும், E20 காரணமாக நாடு முழுவதும் வாகன எஞ்சின்கள் சேதமடைந்தன அல்லது பரவலான இயந்திரக் கோளாறுகள் ஏற்பட்டன என்பதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் அரசிடம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், E20-ஐ விட அதிகமான எத்தனால் கலவை கொண்ட பெட்ரோலை அறிமுகப்படுத்தும் திட்டமும் தற்போதைக்கு இல்லை என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
ஒருபுறம், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து, எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தி, விவசாயிகளுக்கு கூடுதல் வருமான வாய்ப்பை உருவாக்கும் நீண்டகால திட்டமாக E20 பெட்ரோலை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. மறுபுறம், அதன் நடைமுறை தாக்கம் குறித்து வர்த்தக வாகன ஓட்டுநர்கள் மற்றும் போக்குவரத்து அமைப்புகள் தொடர்ந்து கவலை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தப் பேரணி E20 பெட்ரோல் கொள்கை தொடர்பான தேசிய அளவிலான விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தும் முக்கிய நிகழ்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications