E20 பெட்ரோலால் பழைய வாகனங்களில் பழுது வந்தால் எவ்வளவு செலவாகும்?

நாடு முழுவதும் E20 பெட்ரோல் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், பழைய கார் மற்றும் இருசக்கர வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான சந்தேகம் உள்ளது. E20 பெட்ரோல் காரணமாக வாகனத்தின் எரிபொருள் அமைப்பில் பாதிப்பு ஏற்பட்டால், அதை சரிசெய்ய எவ்வளவு செலவாகும் என்பதுதான் அவர்களுடைய பெரிய கவலையாக உள்ளது.

இது தொடர்பாக இருசக்கர வாகன மெக்கானிக்குகள் மற்றும் கார் சர்வீஸ் மையங்களில் கேட்டபோது, தற்போது E20 காரணமாக பழைய வாகனங்களில் பெரிய அளவில் பிரச்னைகள் ஏற்படுவதாக புகார்கள் குறைவாகவே இருப்பதாக தெரிவிக்கின்றனர். இருப்பினும், நீண்ட காலமாக பராமரிப்பு இல்லாமல் பயன்படுத்தப்படும் வாகனங்கள் அல்லது நீண்ட நாட்கள் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் எரிபொருள் அமைப்பில் உள்ள சில ரப்பர் மற்றும் உலோக பாகங்களில் தேய்மானம் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது.

E20 Repair Cost

இருசக்கர வாகனங்களுக்கு எவ்வளவு செலவு?

பழைய பைக்குகளில் எரிபொருள் குழாய், ஓரிங், கேஸ்கெட் போன்ற சிறிய பாகங்களில் பிரச்னை ஏற்பட்டால், அவற்றை மாற்றுவதற்கு பொதுவாக ரூ.350 முதல் ரூ.1,000 வரை செலவாகலாம். கார்ப்புரேட்டரை முழுமையாக மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால், வாகனத்தின் மாடலைப் பொறுத்து ரூ.2,000 முதல் ரூ.4,500 வரை செலவாகும்.

மேலும், உதாரணத்திற்கு பழைய 350சிசி ராயல் என்ஃபீல்டு போன்ற வாகனங்களில் பயன்படுத்தப்படும் சில பாகங்களுக்கான செலவும் மாடலைப் பொறுத்து மாறுபடும். உதாரணமாக, குறிப்பிட்ட BS3 மாடல்களில் சுமார் ரூ.1,650 வரையிலும், BS4 மாடல்களில் ரூ.1,800 வரையிலும் சில பாகங்களுக்கான செலவு இருக்கலாம். இதனுடன் லேபர் சார்ஜ் தனியாக இருக்கலாம். இதுவே பழைய மாடல்களில் கார்ப்புரேட்டரை மாற்றுவதற்கு ரூ.5,000 வரை செலவாகலாம். எனவே, மாடல், வாகனத்தின் வயது, பராமரிப்பு முறை, பயன்படுத்தும் முறைகளை பொறுத்து இந்த செலவு மாறுபடும்.

Ethanol Blended Petrol

கார்களுக்கான செலவு?

கார்களில் எரிபொருள் அமைப்பில் பயன்படுத்தப்படும் குழாய்கள், கேஸ்கெட் உள்ளிட்ட பாகங்களின் தரத்திற்கு இணையாக பாகங்களை மாற்றும்போது, பழுதுபார்ப்பு செலவும் அதிகமாகலாம். சிறிய பாகங்களை மட்டும் மாற்ற வேண்டியிருந்தால் ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை செலவாகும். முழுமையாக பாகங்களை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் ரூ.5,000 முதல் ரூ.15,000 வரையிலும் அல்லது அதற்கு மேலும் செல்லும்.

ஃப்யூவல் பம்ப் போன்ற முக்கியமான பாகத்தை மாற்ற வேண்டியிருந்தால் செலவு கணிசமாக அதிகரிக்கும். வாகனத்தின் மாடலைப் பொறுத்து இதற்கு மட்டும் சுமார் ரூ.4,000 முதல் ரூ.15,000 வரை செலவாகலாம். ஆனால், இந்தப் பழுது E20 பெட்ரோலால் மட்டுமே ஏற்பட்டது என்று ஒவ்வொரு வாகனத்திலும் உறுதியாகக் கூற முடியாது. அதேநேரத்தில், நீண்ட கால பயன்பாட்டில் மிக பழைய வாகனங்களில் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதையும் மறுக்க முடியாது.

Also Read

எந்த அறிகுறிகளை கவனிக்க வேண்டும்?

வாகனத்தில் பெட்ரோல் கசிவு, வழக்கத்தைவிட அதிகமான பெட்ரோல் வாசனை, எரிபொருள் குழாயில் விரிசல் அல்லது வீக்கம் போன்றவை இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்ய வேண்டும். எஞ்சின் ஸ்டார்ட் ஆவதில் பிரச்னை, ஐட்லிங்கில் எஞ்சின் சீராக இயங்காதது, எஞ்சின் தடுமாற்றம், வாகனம் ஓடிக்கொண்டிருக்கும்போது திடீரென எஞ்சின் நிற்பது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் எரிபொருள் அமைப்பைச் சரிபார்ப்பது நல்லது.

ஆனால், இந்த அறிகுறிகள் இருந்தாலே E20 தான் காரணம் என்று முடிவு செய்துவிடக்கூடாது. பழைய வாகனங்களில் இதுபோன்ற பிரச்னைகள் வேறு காரணங்களாலும் ஏற்படலாம். எனவே, முதலில் அனுபவம் வாய்ந்த மெக்கானிக்கிடம் வாகனத்தை பரிசோதித்து, உண்மையில் பழுதடைந்த அல்லது தேய்மானம் ஏற்பட்டுள்ள பாகத்தை மட்டும் மாற்றுவது நல்லது. மேலும், குறிப்பிட்ட இடைவெளிகளில் சர்வீஸ் செய்யாத வாகனங்களில் பிரச்னை வருவது E20 பெட்ரோலை காரணமாக கூற முடியாது.

மத்திய அரசின் விளக்கங்களின்படி, 2005 ஏப்ரல் 1 முதல் 2016க்கு முன் தயாரிக்கப்பட்ட சில BS3 வாகனங்களில் E20 பயன்பாட்டால் குறிப்பிட்ட ரப்பர் பாகங்கள் மற்றும் கேஸ்கெட் உள்ளிட்ட பாகங்களை காலப்போக்கில் மாற்ற வேண்டியிருக்கலாம். இவை வழக்கமான பராமரிப்பின்போதே பரிசோதிக்கக்கூடிய பாகங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read

அச்சம் வேண்டாம்

எனவே, பழைய வாகன உரிமையாளர்கள் E20 குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை. அறிகுறிகள் இருந்தால் முதலில் எரிபொருள் அமைப்பை பரிசோதித்து, உண்மையில் பழுதடைந்த பாகத்தை மட்டும் மாற்றுவது செலவைக் கட்டுப்படுத்த உதவும். தேவையில்லாமல் விலையுயர்ந்த பாகங்களை அறிகுறிகள் இல்லாமல் முன்கூட்டியே மாற்றுவது தேவையற்ற செலவாகவும் மாறக்கூடும்.

E20 பயன்பாட்டால் மைலேஜ் குறைந்துள்ளதாக பல வாகன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதில் உண்மை இருப்பதுடன் மத்திய அரசும் இதனை ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், எரிபொருள் அமைப்பு மற்றும் எஞ்சின் பழுது தொடர்பான பெரிய அளவிலான புகார்கள் தற்போது குறைவாகவே உள்ளன.

நீண்ட கால பயன்பாட்டில் பிரச்னைகள் ஏற்பட்டாலும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் எந்தப் பாகம் பழுதடைந்துள்ளது என்பதை கண்டறிந்து அதை மட்டும் மாற்றுவது போதுமானதாக இருக்கலாம். வாகனத்தை முழுமையாக பரிசோதித்த பிறகே சரியான பழுதுபார்ப்பு செலவை உறுதியாகக் கூற முடியும் என்று பெரும்பாலான மெக்கானிக்குகள் கூறுகின்றனர்.

சந்தேகம் அல்லது பிரச்னை இருக்கும்பட்சத்தில் உடனடியாக வாகனத்தை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு செல்வது அவசியம். சிறிய பராமரிப்பு மூலமாக பிரச்னைகளை சரிசெய்யும் வாய்ப்பு உள்ளதுடன், பெரிய செலவுகளை இது தவிர்க்க உதவும்.

Article Published On: Friday, September 18, 2026, 16:20 [IST]
English summary
E20 petrol old car bike engine fuel system repair cost
மேலும்... #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out