E20-க்கு அடுத்தது E25 பெட்ரோலா? மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்!

நாடு முழுவதும் தற்போது E20 பெட்ரோல் (20% எத்தனால் + 80% பெட்ரோல்) விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், பழைய வாகன உரிமையாளர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களும், விவாதங்களும் எழுந்துள்ளன. இந்த விவாதம் இன்னும் ஓயாத நிலையில், அடுத்த கட்டமாக E25 அல்லது அதற்கு மேல் எத்தனால் கலவையை அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருப்பதாக கடந்த சில வாரங்களாக அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், E25 பெட்ரோல் குறித்து மத்திய அரசு தற்போது தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி, "தற்போது விற்பனையில் உள்ள E20-ஐ தாண்டி பெட்ரோலில் எத்தனால் கலவை சதவீதத்தை உயர்த்துவதற்கான எந்த முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அத்தகைய முடிவு எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால், அதற்கு முன் அறிவியல் ஆய்வுகள், தொழில்நுட்ப மதிப்பீடுகள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் ஆலோசனை நடத்தப்பட்ட பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் விளக்கியுள்ளார்".

E25 Petrol

ஏன் இந்த விளக்கம் முக்கியம்?

E20 பெட்ரோல் நாடு முழுவதும் பயன்பாட்டுக்கு வந்த பிறகு, E20 எரிபொருளுக்காக வடிவமைக்கப்படாத பழைய வாகனங்களில் இந்த எத்தனால் கலவை பெட்ரோல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று வாகன உரிமையாளர்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, E20 பெட்ரோலை பயன்படுத்தினால் மைலேஜ் குறையும், இன்ஜின் ஆயுள் பாதிக்கப்படும், பராமரிப்பு செலவு அதிகரிக்கும் போன்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, E25 அல்லது அதற்கு மேல் எத்தனால் கலவை விரைவில் அறிமுகமாகும் என்ற தகவல்களும் வெளியாகி, வாகன உரிமையாளர்கள் மத்தியில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தின. இந்த சூழலில், தற்போது E20-ஐ விட அதிக எத்தனால் கலவையை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என்று அரசு கூறியிருப்பது வாகன உரிமையாளர்களுக்கு ஒரு முக்கியமான தெளிவை அளித்துள்ளது.

E20 குறித்து அரசின் நிலைப்பாடு என்ன?

எத்தனால் கலவை தொடர்பாக அரசுக்கு பெரிய அளவில் உறுதிப்படுத்தப்பட்ட புகார்கள் எதுவும் வரவில்லை என்றும், E20 பயன்பாட்டால் நாடு முழுவதும் பரவலாக இன்ஜின் சேதம் ஏற்பட்டதாக நிரூபிக்கப்பட்ட ஆதாரங்கள் இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், E10 பெட்ரோலுக்காக வடிவமைக்கப்பட்ட சில பழைய வாகனங்களில் E20 பயன்படுத்தும்போது எரிபொருள் சிக்கனம் சுமார் 3 முதல் 5 சதவீதம் வரை மட்டுமே குறையக்கூடும் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது. இதற்கு காரணம், எத்தனாலின் எரிசக்தி அடர்த்தி (Energy Density) பெட்ரோலை விட சற்றுக் குறைவாக இருப்பதுதான் என்றும் விளக்கப்பட்டுள்ளது.

எத்தனால் கலப்பின் நோக்கம்?

இந்தியாவின் எத்தனால் கலவை திட்டத்தின் முக்கிய நோக்கம் கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பது, அந்நிய செலாவணியை சேமிப்பது மற்றும் உள்நாட்டு விவசாயிகளுக்கு கூடுதல் வருமான வாய்ப்பை உருவாக்குவதுதான்.

முன்பு பெரும்பாலும் கரும்பிலிருந்து எத்தனால் தயாரிக்கப்பட்ட நிலையில், தற்போது மக்காச்சோளம், குருணை அரிசி மற்றும் உணவாக பயன்படுத்த முடியாத தானியங்களிலிருந்தும் எத்தனால் உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரே பயிரை மட்டுமே சார்ந்திருக்கும் நிலையை குறைக்க அரசு முயற்சி செய்து வருகிறது.

அடுத்த கட்டமாக என்ன நடக்கும்?

எதிர்காலத்தில் E25 அல்லது அதற்கு மேற்பட்ட எத்தனால் கலவை அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்து அரசு எந்த காலக்கெடுவையும் அறிவிக்கவில்லை. வாகன உற்பத்தியாளர்களின் தொழில்நுட்ப தயார்நிலை, விரிவான சோதனைகள் மற்றும் விஞ்ஞான ஆதாரங்களின் அடிப்படையில்தான் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து

E20 பெட்ரோல் குறித்து இன்னும் பல சந்தேகங்கள் வாகன ஓட்டிகளிடம் இருந்தாலும், E20-ஐ தாண்டி உடனடியாக E25 அல்லது அதற்கு மேல் எத்தனால் கலவை கொண்ட பெட்ரோலை அறிமுகப்படுத்தும் திட்டம் தற்போது இல்லை என்று மத்திய அரசு தெரிவித்திருப்பது தற்போதைய விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் உள்ளது. அதே நேரத்தில், இந்தியாவின் மாற்று எரிபொருள் கொள்கை தொடர்ந்து முன்னேறி வருவதால், எதிர்காலத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்கள், விஞ்ஞான ஆய்வுகள் மற்றும் வாகனத் துறையின் தயார்நிலையைப் பொறுத்து புதிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த காரணத்தால், E25 குறித்து தற்போது கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றே சொல்லலாம்.

Article Published On: Tuesday, July 21, 2026, 13:13 [IST]
English summary
E25 petrol launch plan central government clarification
மேலும்... #petrol #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
Sign Out