கரண்டே தேவையில்ல... சூரிய ஒளி போதும்!! முறுக்கிவிட்டால் தண்ணிய கிழிச்சிக்கிட்டு போகும்!
இ பர்ராகுடா (eBarracuda), இந்தியாவின் அதிவிரைவான சோலார்-எலக்ட்ரிக் படகு பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொச்சியை சேர்ந்த நாவால்ட் நிறுவனத்துடன் இணைந்து மசகோன் டாக் ஷிப் பில்டர்ஸ் என்ற கப்பல் கட்டும் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த படகை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கேரளாவின் ஸ்டேட்-ஆஃப்-தி-ஆர்ட் படகாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இ பர்ராகுடா, எல்லாவற்றையும் விட முக்கியமாக, பசுமை போக்குவரத்துக்கு ஏற்ப எலக்ட்ரிக்கில் இயங்கக் கூடியதாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆலப்புழாவில் நவகாதி என்ற பகுதியில் உள்ள பனவள்ளி பண்ணை தோட்டத்தில் இந்த புதிய சோலார்-எலக்ட்ரிக் படகின் அறிமுக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மசகோன் டாக் லிமிடெட் நிறுவனத்தின் மேலாளர் சஞ்சய் குமார் சிங், நாவால்ட் நிறுவனத்தின் சிஇஓ சந்தித் தண்டசேரி உள்பட இந்த இரு நிறுவனங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர். இந்த படகின் பெயரில் உள்ள பர்ராகுடா என்பது கடலில் வாழக்கூடிய, பெரிய வாய் உடைய ஓர் மீனின் பெயர் ஆகும்.
அந்த மீனை போன்று பெரிய வாய் போன்றதான தோற்றத்தை கொண்டிருப்பதால் இந்த படகுக்கு இவ்வாறான ஒரு பெயர் வைக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரிக்கில் இயங்கக்கூடிய படகு என்பதால், முன்னால் ஒரு 'இ' சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த படகு இயங்குவதற்கு தேவையான இயக்க ஆற்றல் சூரிய ஒளி மூலமாக கிடைக்கும்.

முன்பகுதியை அகலமாக கொண்டிருப்பதுதான் இந்த படகின் சிறப்பே. ஏனெனில், கரையில் இருந்து இவ்வாறான படகுகளில் விரைவாக பொருட்களை ஏற்றி, இறக்க முடியும். அத்துடன், கரைக்கு மிக நெருக்கமாகவும் இத்தகைய தோற்றம் கொண்ட படகுகளால் செல்ல முடியும். இந்த படகின் தோற்றத்தை நாவால்ட் நிறுவனம் வடிவமைத்தது. மசகோன் டாக் நிறுவனம் படகை உருவாக்கியது.
அதிகப்பட்சமாக மணிக்கு 12 நாட்டில் மைல் வேகத்திற்கு இயங்கக்கூடிய புதிய இ பர்ராகுடா படகின் பேட்டரிகளை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிவிட்டால், அதன்பின் சார்ஜ் ஏற்றாமல் 7 மணிநேரத்திற்கு படகை இயக்க முடியும். இந்த சோலார்-எலக்ட்ரிக் படகு மொத்தம் 14 மீட்டர் நீளம் கொண்டது, 4.4 மீட்டர் அகலம் கொண்டது.
இந்த படகில் பொருத்தப்பட்டுள்ள 50 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார்களில் லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலமாக அதிகப்பட்சமாக 6 கிலோவாட்ஸ் வரையில் சூரிய ஆற்றலை பெறலாம். இ பர்ராகுடா படகில் 12 பேர் வரையில் சவுகரியமாக பயணம் செய்யலாம். பொதுவாகவே படகுகள் மற்ற வாகனங்களை காட்டிலும் சற்று அதிக இரைச்சலை ஏற்படுத்தக்கூடியவைகளாக இருக்கும்.
ஆனால், இ பர்ராகுடா ஆனது எலக்ட்ரிக் படகு என்பதால், பயணத்தின் போது எந்தவொரு இரைச்சலும், அதிர்வுகளும் இருக்காது. 4 மீட்டர்கள் உயரத்திற்கு அலைகள் உருவாகினாலும் பிரச்சனையின்றி இயங்கும் வகையில் இந்த சோலார்-எலக்ட்ரிக் படகு வடிவமைக்கப்பட்டுள்ளது. நாவால்ட்டின் பல்வேறு எலக்ட்ரிக் படகுகள் அவற்றின் தொழிற்நுட்ப தரத்தின் காரணமாக சர்வதேச அளவிலான விருதுகளை பெற்றுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவது மக்களிடத்தில் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இப்போது எலக்ட்ரிக் படகுகள் கூட வர ஆரம்பித்துவிட்டன. இன்னும் சொல்லப்போனால், இவ்வாறான சோலார்-எலக்ட்ரிக் படகுகள் இன்னும் சிறந்தவை என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், இவற்றிற்கான ஆற்றல் மூலமாக நேரடியாக சூரியனில் இருந்து பெறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








