மத்திய அரசு கொண்டு வந்த திட்டத்தால் இத்தனை லட்சம் பேருக்கு வேலை கிடைச்சிடுச்சா? முழு விபரம் இதோ!
உள்நாட்டிலேயே ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் மற்றும் வாகனங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் பிஎல்ஐ என்ற திட்டத்தின் மூலம் இந்தியாவிற்கு ரூபாய் 67,690 கோடி முதலீடு வந்துள்ளதாக தற்போது வெளியாகி உள்ள பொருளாதார சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டிற்கு முன்னதாக இந்த சர்வே ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ள நிலையில், இதில் என்னென்ன தகவல்கள் எல்லாம் உள்ளன என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
பாராளுமன்றத்தில் நாளை முழு பட்ஜெட் தாக்கலாக உள்ளது. இந்த பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் செக்டாரில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்ற பெரும் எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நிலையில், பட்ஜெட்டிற்கு முன்னதாக பொருளாதார சர்வே 2023-24 இன்று வெளியாகி உள்ளது. இதில் கடந்த நிதியாண்டில் இந்தியாவில் பொருளாதார நிலைகள் எப்படி இருந்தன என்ற தகவல் இடம் பெற்றுள்ளது.

மத்திய அரசு இந்தியாவிலேயே வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கும் ஆட்டோமொபைல் உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் பி எல் ஏ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன் மூலம் ஊக்கத்தொகைகளை வழங்கி வருகிறது. 2023ம் நிதியாண்டு முதல் 2027ம் நிதியாண்டு வரை மொத்தம் ரூபாய் 25,938 கோடியை மானியமாக வழங்க நிதி ஒதுக்கியுள்ளது
மானியமாக பெற வேண்டுமென்றால் இந்தியாவில் வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களை தயார் செய்யும் நிறுவனங்கள் முற்றிலுமாக அதை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள மக்களுக்கு அதன் மூலம் வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும். இப்படியான பல்வேறு கண்டிஷன்கள் இருக்கிறது. இந்த கண்டிஷன்கள் எல்லாம் பின்பற்றும் நிறுவனங்கள் தங்கள் தயாரித்து விற்பனை செய்யும் பொருட்களுக்கு மானியம் பெற முடியும்.

இவ்வளவு மதிப்பு கொண்ட பொருளுக்கு இவ்வளவு மானியம் என்ற வரைமுறையையும் மத்திய அரசு வகுத்துள்ளது. இதன் மூலமும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் நல்ல வருமானத்தை பெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவில் எவ்வளவு கோடி முதலீடுகள் வந்துள்ளன? எவ்வளவு பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது? என்ற விபரங்கள் எல்லாம் தற்போது வெளியாகியுள்ள பொருளாதார சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் வரை மொத்தம் 85 நிறுவனங்கள் இந்த திட்டத்தில் கீழ் இணைந்துள்ளன. இதன் மூலம் 1.48 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் 28,884 வேலை வாய்ப்புகள் இந்த திட்டத்தினால் புதிதாக உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்புகளாக உள்ளன என்று அந்த சர்வே ரிப்போர்ட் தெரிவிக்கிறது. இது மட்டுமல்லாமல் அட்வான்ஸ் கெமிஸ்ட்ரி செல் தயாரிப்புக்காக ரூபாய் 18,500 கோடியை மத்திய அரசு ஏற்கனவே ஒதுக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சர்வே ரிப்போர்ட்டின் படி இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பயணிகள் மற்றும் யூட்டிலிட்டி வாகனங்களின் விற்பனை என்பது அதிகரித்துள்ளது. கடந்த நிதியாண்டில் மொத்தம் 49 லட்சம் பயணிகள் வாகனங்களும், 9.9 லட்சம் 3 வீலர்களும், 214.7 லட்சம் டூவீலர்களும், 10.7 லட்சம் கமர்ஷியல் வாகனங்களும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்புக்கு பிறகு ஆட்டோமொபைல் செக்டார் ஓரளவு வளர்ச்சியை சந்தித்துள்ளது என இந்த சர்வே ரிப்போர்ட் தெளிவாக நமக்கு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த திட்டத்தின் கீழ் மானியத்தை பெற வாக தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் வெளிநாடுகளில் இருந்து வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதை விட்டுவிட்டு உள்நாட்டிலேயே அதை தயாரிக்க திட்டமிட்டு வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்து விற்பனை செய்தாலோ அல்லது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்களை இறக்குமதி செய்து வாகனங்களில் பொருத்தி விற்பனை செய்தாலோ அதற்கு இந்த மானியம் என்பது வழங்கப்படாது. முற்றிலுமாக இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு மட்டுமே மானியங்கள் வழங்கப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அரசு இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கு மானியங்கள் வழங்குவதன் மூலம் இந்தியாவில் அதிகமான வேலை வாய்ப்புகள் உருவாகிறது. மேலும் மக்கள் இந்திய தயாரிப்புகளை அதிகமாக வாங்குவார்கள். வாகன தயாரிப்புக்காக நாம் வெளிநாட்டை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. நிச்சயம் இந்த திட்டம் பாராட்டத்தக்கது தான்.


Click it and Unblock the Notifications









