மத்திய அரசின் மானியம் மட்டும் இல்லைனா!! லடாக்கில் டீசல் பேருந்துகள் குறைஞ்சிக்கிட்டே வருது...
லடாக் (Ladakh)-இல் எலக்ட்ரிக் பேருந்துகள் ஒரே வருடத்தில் 10 லட்ச கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு பயணத்தை கடந்துள்ளன. லடாக்கில் எந்தெந்த பகுதிகளில் எலக்ட்ரிக் பேருந்து சேவையை பெறலாம் என்பதையும், எலக்ட்ரிக் பேருந்துகளை அங்கு எத்தனை பேர் பயன்படுத்துகின்றனர் என்பதை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
உலக வெப்பமயமாதலை தடுக்க, இந்தியா மட்டுமின்றி உலகளவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் நம் மத்திய அரசு எலக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக, பொது சேவையில் எலக்ட்ரிக் வாகனங்களை கொண்டுவருவதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

இதன் விளைவாக எலக்ட்ரிக் பேருந்து சேவைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் விரிவாக்கம் அடைந்துள்ளன. இன்னும் சொல்லப்போனால், லடாக்கில் கூட எலக்ட்ரிக் பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. லடாக்கில் கடந்த 2022ஆம் வருடத்தில் பிஎம்ஐ எலக்ட்ரோ மொபைலிட்டி நிறுவனம் அதன் எலக்ட்ரிக் பேருந்துகளை பொது பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தியது.
கடந்த ஒரு வருடத்தில் லடாக்கில் எலக்ட்ரிக் பேருந்துகள் சுமார் 10 இலட்ச கிமீ தொலைவிற்கும் அதிகமாக இயக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக, கடந்த 1 வருடத்தில் லடாக்கில் மட்டும் சுமார் 25 இலட்ச கிலோ கார்பன் உமிழப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதலில் வாகனங்களில் இருந்து வெளிவரும் கார்பன் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்தியாவில் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாக லடாக்கை சொல்லலாம். ஏனெனில், அந்த அளவிற்கு இயற்கை வளமிக்க பகுதியாகவும், மனித ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களை அதிகம் கொண்ட பகுதியாகவும் லடாக் விளங்குகிறது. இதன் காரணமாகவே, பெட்ரோல்/ டீசல் பேருந்துகளுக்கு எலக்ட்ரிக் பேருந்துகளை கொண்டுவர வேண்டும் என்பதில் பொது போக்குவரத்து துறை தீவிரமாக இருந்தது.
இதன்படி, கடந்த 2022ஆம் ஆண்டில் 19 எலக்ட்ரிக் பேருந்துகள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டன. லடாக்கில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 1,500 பயணிகள் எலக்ட்ரிக் பேருந்தை பயன்படுத்துகின்றனர். லடாக்கின் லே பகுதியில் இருந்து கார்கில் பகுதிக்கு எலக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சாலை வழியாக இவை இரண்டிற்கும் இடையேயான தொலைவு 216 கிமீ ஆகும்.

லடாக்கின் உறைய வைக்கும் குளிர் சூழலிலும், உலகின் உயரமான சாலைகளிலும் எலக்ட்ரிக் பேருந்துகள் 10.50 இலட்ச கிமீ தொலைவிற்கு இயக்கப்பட்டுள்ளதாக பொது போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். லடாக்கில் இயக்கப்படும் எலக்ட்ரிக் பேருந்துகளில் பெரும்பாலானவை 180கிமீ ரேஞ்சை கொண்டுள்ளன. அதாவது, அவற்றை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 180 கிமீ தொலைவிற்கு இயக்கி செல்லலாம்.
இருப்பினும், லடாக் போன்ற பகுதிக்கு 180கிமீ ரேஞ்சும் போதாது என்பதால், பயணத்திற்கு இடையே ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றின் உதவியுடன் வெறும் 1 மணிநேரத்திற்கு உள்ளாகவே சார்ஜ் ஏற்றிக் கொள்ள முடிகிறது. பி.எம்.ஐ எலக்ட்ரோ நிறுவனம் தற்சமயம் இந்தியாவின் 27 நகரங்களில் 1200க்கும் அதிகமான எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்கி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் கார்களை மக்கள் வாங்குவது ஒருபக்கம் இருந்தாலும், பொது போக்குவரத்தில் எலக்ட்ரிக் பேருந்துகளை கொண்டுவருவது முக்கியமாகும். ஏனெனில், அப்போதுதான் மக்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டு அதிகளவில் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க ஆரம்பிப்பர். ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களும் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications









