ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தான் மெயின் டார்க்கெட்!! உ.பி அரசின் அடுத்த அசத்தலான திட்டம்!
ராமர் கோயில் திறப்பை முன்னிட்டு அயோத்தியில் சுற்றுலா பயணிகளுக்காக டாக்ஸி சேவையில் பயன்படுத்தப்பட உள்ள எலக்ட்ரிக் கார்கள் பொது இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இதுதொடர்பான படங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இன்னும் சில வாரங்களில் இந்தியா முழுவதுமே அயோத்தியை பற்றிய பேச்சாக இருக்க போகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் உத்தர பிரதேசம் மாநிலத்தின் அயோத்திக்கு வருகை தர உள்ளனர். இதற்கெல்லாம் காரணம், நம் அனைவருக்கும் தெரிந்ததுதான், பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வருகிற ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது.

பிரதமர் திறந்து வைப்பார் என எதிர்பார்க்கும் அளவிற்கு முக்கியமானதாக கருதப்படுவதால், இதற்கான பணிகளில் மத்திய மற்றும் உத்தர பிரதேச மாநில அரசாங்கங்கள் ஏற்கனவே ஈடுப்பட ஆரம்பித்துவிட்டன. கோயில் திறக்கப்பட்ட பின், இலட்சக்கணக்கிலான பயணிகள் அயோத்திக்கு வருகை தருவர் என்பதால், அயோத்தியில் புதிய விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீராம் என்ற பெயரில் திறக்கப்பட்டுள்ள அயோத்தி விமான நிலையத்தில் விரைவில் விமான சேவைகள் துவங்கப்பட உள்ளன. இதுமட்டுமின்றி, அயோத்தி இரயில் நிலையம் கூடுதல் செலவில் மறுசீரமைக்கப்பட்டு உள்ளது. புதிய அயோத்தி இரயில் நிலையத்தை சமீபத்தில் பிரதமர் நேரில் திறந்து வைத்ததை செய்திகளில் பார்த்திருப்பீர்கள். இந்த நிலையில், ராமர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக டாக்ஸி சேவைகளையும் அதிகப்படுத்தும் முனைப்பில் மாநில அரசு உள்ளது.

குறிப்பாக, டாக்ஸி சேவையில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்த உ.பி அரசு திட்டமிட்டுள்ளது. அயோத்தி மற்றும் லக்னோவுக்கு இடையே மட்டும் 15 எலக்ட்ரிக் கார்களை போக்குவரத்துக்காக யோகி ஆதித்யநாத்தின் அரசு நியமிக்க உள்ளது. இவை மட்டுமின்றி, அயோத்தி முழுவதுமே சுற்றுலா பயணிகளுக்காக முக்கியமான பகுதிகளில் கூடுதல் எலக்ட்ரிக் கார்கள் டாக்ஸி சேவையில் விரைவில் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்த எலக்ட்ரிக் கார் டாக்ஸியை மொபைல் செயலி மூலமாகவே எளிமையாக புக் செய்துக் கொள்ளும் வகையில் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10கிமீ பயணத்திற்கு சராசரியாக ரூ.250 கட்டணமாகவும், 20கிமீ-க்கு ரூ.400 கட்டணமாகவும் விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை இல்லாமல், எலக்ட்ரிக் கார்களை வாடகைக்கும் விடவும் உ.பி அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த டாக்ஸி சேவைகளில் அதிகளவில் டாடா மோட்டார்ஸின் எலக்ட்ரிக் காரான டியாகோ இவி பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள படங்களிலும், டாடா டியாகோ இவி எலக்ட்ரிக் கார்கள் தான் வரிசையாக அயோத்தி இரயில் நிலையத்திற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
ஒருமுறை பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் டாடா டியாகோ இவி அதிகப்பட்சமாக 315கிமீ தொலைவிற்கு இயங்கக்கூடியதாக உள்ளது. இந்த எலக்ட்ரிக் கார்களின் சோதனை ஓட்டங்கள் ஏற்கனவே அயோத்தியில் துவங்கிவிட்டன. மக்களும் இந்த கார்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இந்த எலக்ட்ரிக் கார் டாக்ஸி மட்டுமின்றி, இ-கார்ட் சேவையும் அயோத்தியில் துவங்கப்பட்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜன.22ஆம் தேதி திறக்கப்பட உள்ள ராமர் கோவிலுக்கு எல்லா விதங்களிலும் உத்தர பிரதேச அரசு தயாராகி வருவதை இதன் மூலம் அறிய முடிகிறது. கோயிலுக்கு வருவோர்க்காக டாக்ஸி சேவைகள் துவங்கப்பட்டு இருப்பது நாம் எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், எலக்ட்ரிக் கார்கள் இந்த டாக்ஸி சேவையில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு இருப்பது வரவேற்கக்கூடிய ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications









