1 கோடி ரூபாய் மதிப்புடைய பாகங்களை திருடினது அவங்களா... விஷயத்தை கேட்டதும் இந்தியாவே ஆடி போயிருச்சு...
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற மக்கள் தயக்கம் காட்டி கொண்டிருப்பதற்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருப்பது சார்ஜிங் ஸ்டேஷன்களின் பற்றாக்குறை ஆகும். இங்கு பெட்ரோல் பங்க்குகள் அளவிற்கு, சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவில்லை. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களையே வாங்கியாக வேண்டிய கட்டாயத்தில் பலரும் உள்ளனர்.
இதை உணர்ந்துள்ள மத்திய மற்றும் மாநில அரசுகள், இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதுதவிர தனியார் நிறுவனங்கள் பலவும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த வரிசையில் சண்டிகரின் பல்வேறு பகுதிகளில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கப்பட்டு கொண்டுள்ளன. ஆனால் கடந்த 2 மாத கால அளவில், இந்த சார்ஜிங் ஸ்டேஷன்களின் உபகரணங்கள் பலவும் கொள்ளையடிக்கப்பட்டு வந்தன. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறை அதிகாரிகள், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த விசாரணை மூலம் தற்போது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் யார்? என தெரிந்தால், நீங்கள் அதிர்ச்சியடைய கூடும். ஆம், காவல் துறையால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்கள் ஆவர். இவர்களுக்கு 8-11 வயது மட்டுமே ஆகிறது. காவல் துறை அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்பாக 5 பேரை கைது செய்துள்ளனர்.

இவர்கள் அனைவருக்குமே 8-11 வயதுதான் ஆகிறது. இவர்களால் கொள்ளையடிக்கப்பட்ட சார்ஜிங் ஸ்டேஷன் உபகரணங்களின் மதிப்பு 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கள்ள மார்க்கெட்டில் இந்த உபகரணங்களை மிகவும் குறைவான விலைக்கு அவர்கள் விற்பனை செய்துள்ளனர்.
எனவே இந்த சிறுவர்களிடம் இருந்து, சார்ஜிங் ஸ்டேஷன்களின் உபகரணங்களை வாங்கிய வியாபாரிகளும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் சார்ஜிங் ஸ்டேஷன்களுக்கு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ள பகுதிகளில் கூடுதல் காவல் துறை அதிகாரிகள் ரோந்து செல்ல தொடங்கியுள்ளனர். இது குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 8-11 வயதுடைய சிறுவர்கள், 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட சார்ஜிங் ஸ்டேஷன் உபகரணங்களை கொள்ளையடித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. இவர்கள் சிறுவர்கள் என்பதால், அவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து, அனைவருக்கும் கவுன்சிலிங் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால் இது போன்ற விபரீத செயல்களின் எண்ணிக்கை அதிகரித்து விடும். இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்தால் அது, இந்தியா எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறும் வேகத்தை குறைத்து விடும். இது இந்தியாவின் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரம் ஆகிய 2 விஷயங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே அரசு விழித்து கொள்வது நல்லது.


Click it and Unblock the Notifications








