பாயிண்ட் 17ஏ தான் ரயில் விபத்துக்கு காரணம்னு சொல்றாங்களே அப்படின்னா என்ன தெரியுமா?
ஒடிசா மாநிலத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த ரயில் விபத்து இந்தியாவையே உலுக்கியுள்ளது. இந்த ரயில் விபத்து குறித்த விசாரணை நடந்துவரும் நிலையில் ரயில் விபத்து ஏற்பட்டதற்கான சில முக்கியமான காரணங்கள் தற்போது வெளியாகி உள்ளது. இன்டர் லாக்கிங் மற்றும் பாண்டிங் முறையில் தான் பிரச்சினை இருப்பதாகக் கூறப்படுகிறது. இதைப் பற்றி விரிவாகக் காணலாம் வாருங்கள்.
கடந்த ஜூன் மாதம் 2 தேதி இரவு 7 மணிக்கு ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியை எடுத்த பஜார் ரயில் நிலையம் பகுதியில் ஷாலிமரிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன. இது இந்தியாவின் 3வது மிகப்பெரிய ரயில் விபத்தாக அமைந்தது.

இந்த விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர் சுமார் 1000 பேர் வரை படுகாயம் அடைந்தனர். இந்தியாவையே உலுக்கிய இந்த ரயில் விபத்து சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது. இந்த ரயில் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. முதற்கட்டமாக நடந்த ஆய்வில் இந்த விபத்திற்குக் காரணம் எலெக்ட்ரானிக் இன்டர்லாக்கின் முறை மற்றும் பாயிண்டிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட பிரச்சனை தான் எனக் கூறப்படுகிறது.
இதைப் பற்றித் தெரிந்து கொள்ளும் முன் இந்த விபத்து எப்படி நடந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பாலசோர் பகுதியை அடுத்த பஜார் ரயில் நிலையத்தில் மொத்தம் இரண்டு மெயின் லைன்களும் இரண்டு லூப் லைன்களும் இருக்கிறது. பஜார் ரயில் நிலையம் பகுதி சிறிய ஸ்டேஷன் என்பதால் அங்கு பெரும்பாலான ரயில்கள் நிற்காது.

இதில் லூப் லைன்களை மற்ற முக்கியமான ரயில்கள் வரும் பொழுது சாதாரண ரயில்கள் ஓரங்கட்டி நிறுத்தப்படுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த அன்று இந்தப் பகுதியில் உள்ள இரண்டு லூப் லைன்களிலும் சரக்கு ரயில்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஒரு மெயின் லைனில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும் மற்றொரு மெயின் லைனில் பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் கடந்து செல்ல சிக்னல் வழங்கப்பட்டது.
அப்பொழுது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மெயின் லைனில் செல்லாமல் லூப் லைனில் மாறி சென்று சரக்கு ரயிலுடன் மோதியதாகக் கூறப்படுகிறது. சிலர் இந்த ரயில் லூப் லைனில் மாறுவதற்கு முன்பே டிரெயில் ஆகிவிட்டது அதாவது தடம் புரண்டு விட்டது என்று கூறுகின்றனர். மெயின் லைனில் செல்ல வேண்டிய ரயில் எப்படி லூப் லைனுக்கு மாறியது என்பது தான் தற்போது கேள்விக்குறியாக உள்ளது.

லூப் லைனில் மாறிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் முன் பக்கம் இருந்த சரக்கு ரயிலுடன் மோதியதில் அதன் பெட்டிகள் தடம் புரண்டு பக்கத்து டிராக்கில் சென்று கொண்டிருந்த பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் கடைசி சில பெட்டிகளில் மட்டும் தாக்கியது இதில் மூன்று ரயில்களுமே சேதம் அடைந்தன. பயணிகள் ரயிலில் இருந்த பலர் உயிரிழந்தனர் பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
லூப் லைனுக்கும் மெயின் லைனுக்கும் மாறிச்செல்லும் முறை இன்டர் லாக்கிங் எனப்படும் சிஸ்டம் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இன்டர் லாக்கிங் சிஸ்டம் என்பது தண்டவாளத்தின் பொசிஷன், சிக்னலிங் சிஸ்டம், சிக்னல் கட்டுப்பாட்டறை ஆகியவற்றை இணைத்ததுதான். கட்டுப்பாட்டு அறையில் வழங்கப்படும் சிக்னலுக்கு ஏற்பட தண்டவாளத்தின் பேசிஷன் மற்றும் சிக்னல்கள் தானியங்கியாக மாறிக்கொள்ளும்.

முன்னர் இந்தியாவில் இந்த இன்டர்லாக்கிங் முறை மேனுவல் ஆக லிவர் மூலம் இழுப்பது போன்று இருந்தது. ஆனால் தற்போது இது முழுவதும் எலெக்ட்ரானிக் இன்டர்லாக்கிங் முறையாக மாற்றப்பட்டு ஒரு பட்டனை அழுத்தினாலே சிக்னல் தண்டவாள போசிஷன் என அனைத்தும் ஒரே நேரத்தில் மாறும்படி உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் சிக்னல் லைட்டும் இன்டர்லாக்கிங் ஆன தண்டவாளமும் இணைக்கப்பட்டிருக்கும். ஒருவேளை கட்டுப்பாட்டு அறையின் சிக்னல் கிடைத்த பின்பும் தண்டவாளம் அதற்குத் தகுந்தார் போல் மாறாமல் இருக்கிறது என்றால் அதை உடனடியாக சிக்னல் கண்டுபிடித்து சிக்னலும் பச்சைக்கு மாறாமல் சிவப்பு விளக்கு மாறிவிடும். இந்த இன்டர்லாக்கிங் சிஸ்டம் ஆட்டோமேட்டிக்காக இருப்பதால் இதில் எந்த குழப்பமும் ஏற்படாது.

மெயின் லைனில் இருந்து லூப் லைனுக்கு மாற பாயிண்டிங் சிஸ்டம் இருக்கிறது. குறிப்பிட்ட இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மெயின் லைனிலேயே செல்ல வேண்டுமென்றால் பாயிண்டிங் 17 இல் இருக்க வேண்டும். லூப் லைனில் செல்ல வேண்டுமென்றால் 17 ஏ வில் இருக்க வேண்டும்.
இந்த ரயிலுக்காகக் கட்டுப்பாட்டு அறையில் பாயிண்ட் பதினேழு சிக்னல் தான் வழங்கப்பட்டது. ஆனால் தண்டவாளம் பாயிண்ட் 17ஏ -ஐ நோக்கி இருந்தது. இது நடப்பதற்கான சாத்தியமே இல்லை. அனைத்தும் ஆட்டோமேட்டிக் முறையிலிருந்திருந்தால் கட்டுப்பாட்டு அறை சிக்னல் பாய்ண்ட் 17 சிக்னல் இருக்கும்போது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மெயின் லைனில் தான் சென்றிருக்க வேண்டும்.

சரக்கு ரயிலுக்காக 17ஏக்கு மாற்றப்பட்ட தண்டவாளம் பாயிண்ட் 17 ஏ வில் இருந்து 17க்கு மாறாமல் இருந்திருந்தால் சிக்னல்கள் எல்லாம் சிவப்பு விளக்குகள் இருந்திருக்கும். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மெயின் லைனிலேயே நின்றிருக்கும். ஆனால் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மெயில் லைனில் செல்ல சிக்னல் கிடைக்கும் அது லூப் லைனிற்கு மாறி உள்ளது.
இது நடக்க இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று மெயின் லைனுக்கான சிக்னல் கிடைத்த பின்பு யாரோ ஒருவர் இதை மேனுவலாக தண்டவாளத்தை மட்டும் 17ஏக்கு மாற்றி இருக்க வேண்டும். அல்லது இந்த தண்டவாளம், சிக்னல் மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை இணைக்கும் வகையிலான கேபிள் மற்றும் ராடுகள் இடையே ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு இதற்குரிய சரியான சிக்னல் கட்டுப்பாட்டு அறைக்குச் செல்லாமல் இருந்திருக்கும்.
அல்லது இந்த சிக்னல்கள் எல்லாம் கட்டுப்பாடுகள் அறையில் லைட்டிங் கொண்ட ஒரு பேனலில் இணைக்கப்பட்டிருக்கும். அந்த பேனலில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டுச் சிவப்பு விளக்கிற்குப் பதிலாகப் பச்சை விளக்கு மாற்றி எரிந்திருக்கக்கூடும். இதைக் கவனிக்காமல் விட்டிருப்பார்கள் இதனால் கூட விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.
இந்த விபத்திற்கான காரணம் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தான். ஆனால் இந்த ரயிலை ஓட்டி சென்றவர் இதற்குக் காரணமாக இருக்க முடியாது. ரயில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான வேகத்தில் செல்லவில்லை. எந்த ட்ராக்கில் செல்ல வேண்டும் என்பது ஸ்டேஷன் சிக்னல் கட்டுப்பாட்டாளர்களின் கையில் தான் இருக்கிறது இதில் ரயிலின் லோகோ பைலட் செய்ய எந்த வேலையும் இல்லை.
இது குறித்து மத்திய ரயில்வே துறை அமைச்சர் கூறும் போது இந்த பிரச்சனைக்குக் காரணமான நபர் கண்டுபிடிக்கப்பட்டார் எனத் தெரிவித்தார். தற்போது அவரிடம் இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட விபத்தா அல்லது மனித தவறுகளால் நடந்த விபத்தா, அல்லது சிக்னலிங் முறையில் உள்ள டெக்னிக்கல் பிரச்சனையால் வந்த விபத்தா என்பது விசாரணை முடிவில் தெரிய வரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரயில் மிக முக்கியமான போக்குவரத்து வசதியாக இருக்கிறது. ரயில் விபத்தில் சிக்கினால் அதன் பாதிப்பு பெரிய அளவில் இருக்கும். இதனால் ரயில்வே துறை பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும். இந்த விபத்திற்கான காரணம் தொழிற்நுட்ப பிரச்சனை என்றால் இந்த பிரச்சனை எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுப்பது எப்படி என ரயில்வே நிர்வாகம் யோசிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









