அந்த கம்பெனி வண்டியா இது! ஏன் இப்படி நொறுங்குச்சு தெரியுமா? நடந்த விஷயம் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!
கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் சக்க கொம்பன் (Chakka Komban) என்ற யானை அட்டகாசம் செய்து வருகிறது. பலாப்பழங்களை சாப்பிடுவதில் இந்த யானை அதிக ஆர்வம் காட்டும். எனவேதான் இதனை சக்க கொம்பன் என உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். மலையாளத்தில் சக்க என்றால், பலாப்பழம் என்று அர்த்தம்.
இந்த சூழலில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விபத்தில், சக்க கொம்பன் காயமடைந்துள்ளது. கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் இரவு 7 மணியளவில் சக்க கொம்பன் யானை உலாவி கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக வந்த ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) கார் மோதியதில், யானைக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்திற்கு பிறகு, யானைக்கு கடுமையான ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. எனவே காரை சரமாரியாக தாக்கியுள்ளது. இதன் காரணமாக காரின் மேற்கூரை, முன் பக்க கண்ணாடி மற்றும் பானெட் ஆகியவை பலத்த சேதமடைந்துள்ளன. சிறிது நேரத்தில் அங்கிருந்து நகர்ந்த யானை, காட்டுக்குள் சென்று விட்டது.
அந்த யானையை தேடும் பணியில் வனத்துறை அதிகாரிகள் தற்போது ஈடுபட்டுள்ளனர். காயம் அடைந்திருப்பதால், யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த சம்பவத்தால், காருக்கு உள்ளே இருந்த பயணிகளுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகில் மருத்துவமனைக்கு அவர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.
ஆனால் யாருக்கும் மிகப்பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் யானை காட்டுக்கு உள்ளே சென்று விட்டதால், அதற்கு எந்த அளவிற்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன? என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை. இடுக்கி பகுதியில் சுமார் 2 ஆண்டுகளாக இந்த யானை சுற்றி கொண்டிருப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
வன விலங்குகள், குறிப்பான யானைகள், எப்போதும் மிகவும் அமைதியாகவே காணப்படும். அவற்றுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தும் வரை, அவை வாகனங்களையோ அல்லது மனிதர்களையோ தாக்காது. மனிதர்களால் தங்களுக்கு அச்சுறுத்தல் என வன விலங்குகள் உணர்ந்தால் மட்டுமே அவை திடீரென தாக்குதல் நடத்த தொடங்கும்.
எனவே வன விலங்குகளிடம் இருந்து நாம் பாதுகாப்பான முறையில் இடைவெளியை பின்பற்ற வேண்டும். வன விலங்குகளை நாம் கணிக்க முடியாது என்பதால், அவற்றுக்கு மிகவும் நெருக்கமாக செல்ல வேண்டாம். வனப்பகுதிகள் வழியாக செல்லும் சாலைகளில், யானைகள் சாலையை கடப்பதை வழக்கமாக வைத்துள்ளன.
அத்தகைய சூழல்களில் வாகனங்களை நிறுத்தி விட்டு பொறுமையாக இருப்பது நல்லது. யானைகள் சாலையை கடந்து சென்ற பின்பு, வாகனத்தை எடுத்து கொண்டு கிளம்புங்கள். அதுவரை அமைதியாக இருங்கள். ஏனெனில் யானைகளின் பயணத்தை இடையூறு ஏற்பட்டால், அவை தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் யானைகள், வாகனங்களை தாக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று கொண்டே உள்ளன. வாகன ஓட்டிகள் தங்கள் நடவடிக்கைகள் மூலம் யானைகளை கோபமூட்டுவதுதான் இதற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. எனவே யானைகள் கடந்து செல்லும் வரை அவசரப்படாமல் பொறுமையாக இருங்கள்.
பொதுவாக கார்களின் மேற்கூரை உள்ளிட்ட பாகங்கள் நீங்கள் நினைக்கும் அளவிற்கு எல்லாம் வலுவாக இருக்காது. மனிதர்கள் ஏறி அமர்ந்ததற்கே மேற்கூரைகளில் பள்ளம் ஏற்பட்ட சம்பவங்கள் கடந்த காலங்களில் நடைபெற்றுள்ளன. நிலைமை இப்படி இருக்கும்போது, யானை போன்ற விலங்குகள் தாக்கினால், என்ன ஆகும்? என்பதை கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
கார்கள் நிச்சயமாக அப்பளம் போல நொறுங்கி விடும். எனவே வனப்பகுதி சாலைகள் வழியாக பயணம் செய்யும்போது, யானை உள்ளிட்ட வன விலங்குகளிடம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக இருங்கள். இதுதான் உங்களுக்கும், உங்கள் காருக்கும் நல்லது. வன விலங்குகள் நம் இருப்பிடத்திற்கு வரவில்லை. நாம்தான் அவற்றின் வாழ்விடத்தின் வழியே சென்று கொண்டுள்ளோம் என்பதை உணர்ந்து செயல்படுவது நன்மை பயக்கும்.


Click it and Unblock the Notifications








