உலகின் நம்பர்.1 பணக்காரர் என்றால் சும்மாவா... எலான் மஸ்க்கிடம் உள்ள சொகுசு கார்களின் லிஸ்ட்!!
உலகின் பெரும் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் எலான் மஸ்க் வைத்துள்ள சொகுசு கார்கள் என்னென்ன? வாருங்கள் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

எலான் மஸ்க்கை பற்றி தெரியாதவர்கள் இருக்க மாட்டீர்கள் என்றுதான் நினைக்கிறேன். இவரை வேற்றுகிரகவாசி என கூட சொல்லலாம். ஏனெனில் அந்த அளவிற்கு இவர் எந்த சமயத்தில் எவ்வாறு யோசிப்பார் என்பதை யாராலும் அவ்வளவு எளிதாக கண்டுப்பிடித்துவிட முடியாது. மிகவும் புத்திக்கூர்மை உடையவர். இதனாலேயே என்னவோ அவரிடம் பணம் கொட்டி கொண்டே இருக்கிறது.

தற்சமயம் உலகின் டாப் பணக்காரராக விளங்கும் இவரது கீழ் தான் எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் ராக்கெட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ்-ஸும் செயல்படுகிறது. பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரையும் எலான் மஸ்க் சொந்தமாக்க உள்ளதாக கடந்த பல மாதங்களாகவே செய்திகள் உலாவந்து கொண்டிருக்கின்றன.

டுவிட்டரில் இவர் பதிவிடும் ஒவ்வொரு டிவிட்டையும் காண்பதற்காகவும், அதனை ரீ-டிவிட் செய்தவற்காகவே ஒரு பெரும் கூட்டம் உள்ளது. இப்படிப்பட்டவர் வைத்திருக்கும் கார்கள் என்று பார்க்கும்போது, உங்களால் எண்ணி பார்க்கவே முடியாத கார் கேரேஜை எலான் மஸ்க் கொண்டுள்ளார். ஏனெனில் இவரிடம் இன்னும் விற்பனைக்கே வராத டெஸ்லா சைபர்டிரக் காரும் உள்ளது, அதேநேரம் 100 வருடங்களுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட 1920 ஃபோர்டு மாடல் டி என்ற பழமையான காரும் உள்ளது. மஸ்க்கிடம் உள்ள சொகுசு கார்களில் முக்கியமான சில...

2006 ஹமன் பிஎம்டபிள்யூ எம்5
இது மாடிஃபை செய்யப்பட்ட பிஎம்டபிள்யூ எம்5 கார் ஆகும். ஹமன் என பெயர் கொண்ட கஸ்டமைஸ்ட் நிறுவனம் தான் இந்த மாடிஃபிகேஷனை செய்திருக்க வேண்டும். இந்த மாடிஃபைடு ஸ்போர்ட்ஸ் காரை எலான் மஸ்க் 2007இல் வாங்கினார். இந்த காரில் 5.0 லிட்டர் வி10 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த காரில் அதிகப்பட்சமாக மணிக்கு 326கிமீ வேகத்தில் செல்ல முடியும்.

2008 டெஸ்லா ரோட்ஸ்டர்
2008இல் தயாரிக்கப்பட்ட டெஸ்லாவின் ரோட்ஸ்டர் காரும் எலான் மஸ்க்கிடம் உள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் ஆற்றல்மிக்க மாறுதிசை மின்னோட்ட மோட்டார் மற்றும் அதிகப்பட்சமாக 248 பிஎச்பி வரையில் ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய என்ஜினை கொண்டுள்ளது. டெஸ்லா ரோட்ஸ்டரை சூப்பர் ஃபாஸ்ட் ஸ்போர்ட்ஸ் கார் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இந்த கார் அதிகப்பட்சமாக மணிக்கு 400கிமீ வேகத்திற்கும் அதிகமாக செல்லக்கூடியது.

2010 ஆடி க்யூ7
எலான் மஸ்க் வைத்திருக்கும் 2010இல் தயாரிக்கப்பட்ட ஆடி க்யூ7 காரில் ஆற்றல்மிக்க 3.6 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 280 எச்பி வரையிலான ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. 0-96kmph வேகத்தை வெறும் 8.1 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த காரின் டாப்-ஸ்பீடு 204kmph ஆகும்.

1976 லோட்டஸ் எஸ்பிரிட் "வெட் நெல்லி"
1977இல் திரைக்குவந்த 'தி ஸ்பை வூ லவ்டு மீ' என்ற ஜேம்ஸ் பாண்ட் படத்திற்காக பிரத்யேகமாக லோட்டஸ் எஸ்பிரிட் எஸ்1 ஸ்போர்ட்ஸ் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கஸ்டமைஸ்ட் கார் தான் இது. இந்த காரும் உலகின் நம்பர்.1 பணக்காரர் வசமே தற்சமயம் உள்ளது. இந்த காரின் சிறப்பம்சம் என்னவென்றால், இதனை நிலத்திலும் ஓட்டலாம், அதேநேரம் நீரிலும் இயக்கலாம்.

2012 போர்ஷே 911 டர்போ
அதிவேகத்தில் செல்லும் ஸ்போர்ட்ஸ் கார்களை உருவாக்குவதில் பிரபலமானது போர்ஷே. அத்தகைய நிறுவனத்தில் 2012இல் தயாரிக்கப்பட்ட பிரபலமான 911 டர்போ காரையும் எலான் கொண்டுள்ளார். இந்த காரில் 3.8 லிட்டர் 6-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. 0-96kmph வேகத்தை வெறும் 3.2 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த காரின் டாப்-ஸ்பீடு ஏறக்குறைய 300kmph ஆகும்.

1920 ஃபோர்டு மாடல் டி
ஏற்கனவே கூறியதுபோல், இது 100 வருடங்களுக்கு முன் உருவாக்கப்பட்ட பழமையான காராகும். ஃபோர்டு நிறுவனத்தால் அமெரிக்கர்களுக்கே உண்டான இரசனையின்படி உருவாக்கப்பட்ட இந்த காரில் 4-சிலிண்டர் என்ஜின் உள்ளது. இந்த என்ஜினின் உதவியுடன் இந்த பழமையான கார் அதிகப்பட்சமாகவே 70kmph வேகத்தில் செல்லக்கூடியதாக உள்ளது.

டெஸ்லா சைபர்டிரக்
இது டெஸ்லாவின் எதிர்கால வாகனம் ஆகும். அதாவது அமெரிக்காவில் இந்த கார் விற்பனைக்கு வருவதற்கே இன்னும் சில ஆண்டுகளாகலாம். ஆனால் இந்த கார் டெஸ்லாவின் சிஇஓ-வின் கேரேஜில் உள்ளது. இந்த காரின் டாப்-ஸ்பீடு என்னவோ 209kmph மட்டுமே என்றாலும், உண்மையில் சைபர்டிரக்கை புல்லட் குண்டையும் தகர்த்தெறியக்கூடிய பாதுகாப்புமிக்க காராகவே டெஸ்லா வடிவமைத்து வருகிறது.


Click it and Unblock the Notifications








