பயணிகள் போக்குவரத்தில் ராக்கெட்டை பயன்படுத்தும் திட்டம்!
உலகின் எந்த மூலையையும் ஒரு மணி நேரத்தில் செல்லும் திறன் படைத்த பயணிகள் ராக்கெட்டை உருவாக்கும் யோசனையை அமெரிக்க தொழில்நுட்ப வல்லுனரான எலான் மஸ்க் முன் வைத்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா எலக்ட்ரிக் கார் நிறுவனத்தின் அதிபரும் பிரபல தொழில்நுட்ப வல்லுனருமான எலான் மஸ்க் பல புதுமையான போக்குவரத்து சாதனங்களுக்கான யோசனைகளை தொடர்ந்து முன் வைத்து வருகிறார். அவரது எண்ணத்தில் தோன்றிய ஹைப்பர்லூப் என்ற அதிவேக போக்குவரத்து சாதனத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அடுத்து ஒரு புரட்சிகரமான வான் போக்குவரத்து திட்டத்தை எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் நடந்த விண்வெளி ஆய்வு மாநாட்டில் பேசிய அவர், புதிய ராக்கெட் தொழில்நுட்பங்களை முன் வைத்தார். அதன்படி, மறு பயன்பாட்டு கொள்கையுடன் தயாரிக்கப்படும் முழுமையான ராக்கெட் மாடல் பற்றி விபரங்களை வெளியிட்டார்.

அப்போது, மறுபயன்பாட்டு ராக்கெட்டுகளை பயணிகள் போக்குவரத்திலும் ஈடுபடுத்துவதற்கான ஐடியா ஒன்றையும் முன் வைத்தார். அதன்படி, அவர் கூறும் ராக்கெட் மாடலானது, பூமியின் ஒரு இடத்திலிருந்து எந்த இடத்திற்கும் வெறும் ஒரு மணி நேரத்திற்குள் சென்றுவிட முடியும் என்று கூறி அதிர வைத்துள்ளார்.

லண்டனிலிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சாதாரண விமானங்கள் 8 மணி நேரத்தில் செல்கின்றன. இந்த பயண நேரத்தை குறைப்பதற்காக சூப்பர்சானிக் வேகத்தில் செல்லும் புதிய விமான மாடலை நாசா உருவாக்கி வருகிறது. இந்த விமானம் 3 மணி நேரத்தில் செல்லும்.

ஆனால், எலான் மஸ்க் கூறி இருக்கும் பயணிகள் ராக்கெட்டானது மணிக்கு 27,000 கிமீ வேகத்தில் பறக்கும். வெறும் 29 நிமிட பயண நேரத்தில் லண்டன் மற்றும் நியூயார்க் நகரங்களை இணைத்து விடும். அதாவது, டெல்லியிலிருந்து டோக்கியோ நகருக்கு அரை மணிநேரத்தில் சென்றுவிடலாம்.

மணிக்கு 27,000 கிமீ வேகத்தில் பறக்கும் ராக்கெட்டில் பயணிகளுக்கு கடும் உபாதைகள் ஏற்படும் வாய்ப்புண்டு. எனவே, செயற்கைகோள்களை சுமந்து செல்லும் ராக்கெட்டுகளை போல அல்லாமல், பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த ராக்கெட்டை வடிவமைப்பது என்பது மிக சவாலான விஷயமாக இருக்கும்.

விமானங்களில் வசூலிக்கப்படும் சாதாரண வகுப்பு கட்டணத்திற்கான இணையான கட்டணத்தில், இந்த மறுபயன்பாட்டு ராக்கெட்டுகளை பயன்படுத்தி பயணிகள் விமான போக்குவரத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்த முடியும் என்ற யோசனையை முன் வைத்துள்ளார்.

தற்போது தயாரிக்கப்படும் மறுபயன்பாட்டு ராக்கெட்டுகள் 30 டன் பொருட்களை ஏந்தி செல்லும் திறன் படைத்தது. ஆனால், எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய மறுபயன்பாட்டு ராக்கெட் 150 டன் எடையை சுமந்து செல்லும் திறன் படைத்ததாக உருவாக்கப்பட்டு வருகிறது.

வரும் 2022ம் ஆண்டில் இந்த ராக்கெட்டை சோதனை செய்ய ஸ்பேஸ்எக்ஸ் திட்டமிட்டுள்ளது. இந்த ராக்கெட் திட்டம் வெற்றி பெறும் பட்சத்தில், அடுத்து பயணிகள் ராக்கெட் தயாரிப்பிலும் எலான் மஸ்க் அதிக கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








